Friday Dec 27, 2024

இறையனூர் மங்களேஸ்வரர் திருக்கோயில், திண்டிவனம்

முகவரி :

இறையனூர் மங்களேஸ்வரர் திருக்கோயில்,

இறையனூர்,

திண்டிவனம் மாவட்டம் – 604001.

இறைவன்:

மங்களேஸ்வரர்

இறைவி:

மங்களாம்பிகை

அறிமுகம்:

 தான் என்ற அகங்காரம் மிகும் போதுதான் துன்பமும் மிகுதியாகிறது. ஒருமுறை, தேவேந்திரனும் அப்படியான பரிதாபநிலைக்கு ஆளானான். அவனது ஆணவத்தை அடக்கி அவனைச் சிவம் ஆட்கொண்ட தலம் இறையனூர். சிவம் என்றாலே மங்கலம் என்று பொருள். இந்தத் தலத்தில் சர்வமங்கலங்களும் அருளும் விதம், அருள்மிகு மங்களேஸ்வரர் என்றே திருப்பெயர் ஏற்று அருள்பாலிக்கிறார் சிவன். மாமுனிவர் அகத்திய பெருமானால் எழுப்பப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள்.

`மண் முந்தியோ மங்கை முந்தியோ’ என்று போற்றப்படும் பழைமையான உத்திரகோசமங்கை திருத் தலத்தை அடியொற்றி,  பல சிறப்பம்சங்களை இந்த ஆலயம் தன்னகத்தே கொண்டிருப்பதால் இத்தலம், வட உத்திரகோசமங்கை என்றும் வணங்கப்படுகிறது. இவ்வூர்க் கோயிலின் ஈசன் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றி அருள்பாலித்தவராம்.

திண்டிவனத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் திண்டிவனத்தி லிருந்து நான்கு கி.மீ தொலைவில் உள்ள வேளாண் அறிவியல் கல்லூரியின் எதிரில் 500 மீட்டர் தொலைவில் இறையனூரில் ஆலயம் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

இந்த ஆலயத்தில் சூரியன் வழிபட்டு சாப விமோசனம் அடைந்தாராம். ‘ராகு – கேது’ தோஷ நிவர்த்தி பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது இத்தலம். பதினெட்டு சித்தர்களால் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட கால பைரவர் இங்கு ‘கால சங்கார மூர்த்தியாக’ அருளுகிறார். இவரை வழிபட யம பயம் நீங்கும் என்கிறார்கள்.

இந்திரனின் சாப விமோசனம்: இந்திர லோகத்தில் ரம்பை ஊர்வசியோடு வலம் வந்த இந்திரன், உலகில் தன்னைவிட அழகு நிறைந்தவர் எவரும் இல்லை என்று அகங்காரம் கொண்டிருந்தான். இந்த நிலையில் ஒருநாள், துர்வாச முனிவர் இந்திர லோகத்துக்கு விஜயம் செய்தார். ஆணவமிகுதியில் இருந்த இந்திரன், அந்த மாமுனிவரை கண்டுகொள்ளாமலும், அவருக்கு உரிய மரியாதைகளைச் செய்யாமலும் அலட்சியம் செய்தான்.

இதனால் கடும்கோபம் கொண்ட துர்வாசர், `இன்று முதல் உனது அழகு அழியக்கடவது’ என்று சபித்துவிட்டார். சாபத்தின் பலனாக கடும் நோய்க்கு ஆளானான் இந்திரன். அவன் மேனியெங்கும் வெண்புள்ளிகள் தோன்றின. தவறு உணர்ந்தான் இந்திரன். துர்வாச முனிவரைப் பணிந்து மன்னிப்பு வேண்டினான். அத்துடன், தனது சாபத்துக்கான விமோசனத்தைக் கூறும்படியும் கேட்டுக்கொண்டான். அவன் மீது பரிவு கொண்ட துர்வாசர், “சிவபெருமானை வேண்டினால் விமோசனம் கிடைக்கும்” என்று அறிவுரை தந்தார்.

அதன்படியே இந்திரன் சிவனாரை துதித்து வேண்டினான்.  `‘பூவுலகில் உள்ள மங்களபுரிக்குச் சென்று,  என்னை மனமுருக வேண்டி வழிபட்டு வந்தால், உனது பிணி நீங்கும்; சாபநிவர்த்தி உண்டாகும்’ என்று அருளினார்  சிவபெருமான். அதன்படி பூலோகத்தை அடைந்த இந்திரன், இந்தத் தலத் துக்கு வந்து, வந்து சிவனாரை வழிபட்டு,  அழகும் இளமையும் பெற்றான் என்கிறது தலபுராணம்.இதனால், இன்றும் சரும நோய்கள் உள்ளவர்கள் இங்கு வந்து வணங்கி பலன் பெறலாம் என்கிறார்கள், உள்ளூர் பக்தர்கள்.

சித்தர்கள் வழிபட்ட சிவம் : ஒருமுறை, ஈசன் அளித்த மந்திர உபதேசத்தைக் கவனியாமல் இருந்த அன்னை பார்வதிமீது கோபம் கொண்ட இறைவன், பூமிக்குச் செல்லுமாறு உமையவளுக்குக் கட்டளையிட்டார். அதை ஏற்று, பூமியில் இந்தத் தலத்துக்கு வந்த அம்பிகை, இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தார் என்பது ஐதீகம். தேவியின் வழிபாட்டால் மனம் குளிர்ந்த ஈசன், இந்தத் தலத்தில் அன்னைக்கு மீண்டும் ஞான உபதேசம் அருளி, தன் திருமேனியிலும் இடம் கொடுத்தார் என்கின்றது தலத்தின் சிறப்பைக் கூறும் புராணங்கள்.


சூரியனுக்கு விமோசனம்: அகத்தியரின் சாபத்தால் ஒளியிழந்த சூரியதேவன், இங்கு வந்து வழிபட்டு விமோசனம் பெற்றதாக ஆலய வரலாறு சொல்கிறது. வியாபாரத் திலும் உத்தியோகத்திலும் நலிவுற்றோர் இங்கு வந்து வழிபட்டால் வளமான வாழ்வு கிட்டும் என்கிறார்கள்.

தேவர்கள் சகலரும் கூடி நான்கு கால பூஜைகளையும் அனுஷ்டித்த ஊர் இந்த மங்களபுரி. முதல் கால பூஜையை இந்திராதி தேவர்களும், இரண்டாவது கால பூஜையை பிரம்மா – விஷ்ணுவும், மூன்றாவது கால பூஜையை  18 சித்தர்களும், சப்த ரிஷிகளும், நான்காவது காலத்தை அன்னை சக்தியும் கொண்டாடியதாக ஐதீகம்.

நம்பிக்கைகள்:

இந்த ஆலயத்தில் வழி பட்டால் இழந்த செல்வங்களைப் பெறலாம். ராகு – கேது தோஷ நிவர்த்தித் தலமாகவும் உள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

ஆலயத்தின் வடகிழக்கில் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது. இதில் நீராடி ஈசனை வழிபட்டால், தீராத பாவங்கள் யாவும் தீரும்.  இந்தத் தலம்,  பாபநாசம், உத்திர கோசமங்கை, காசி-  விஸ்வநாதர் ஆலயம் ஆகியவை ஏறக்குறைய நேர்க்கோட்டில் அமைந்துள்ளது சிறப்பம்சன் என்கிறார்கள்.

       இங்கே, ஞானத்தைக் குறிக்கும் விதம், சதுர ஆவுடையாருடன் திகழ்கிறார் இறைவன். ஆக, இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டுச் செல்லும் அன்பர்களுக்கு ஞானமும், மோட்சப்பேறும் வாய்க்கும் என்பது ஐதீகம்.  இவ்வாலயத்தில் பதினெட்டு சித்தர்கள் மட்டுமின்றி இருநூற்றுக்கும் மேற்பட்ட வேறுபல சித்தர் பெருமக்களும் வழிபட்டு ஞானம் பெற்றதாகச் சொல்கிறார்கள். ஆக சித்தர்களின் சாந்நித்தியமும் நிறைந்த தலமிது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

இறையனூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திண்டிவனம்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top