இஞ்சிகுடி பார்வதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி
இஞ்சிகுடி பார்வதீஸ்வரர் திருக்கோயில், இஞ்சிகுடி, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 609405.
இறைவன்
இறைவன்: பார்வதீஸ்வரர் இறைவி: சாந்தநாயகி
அறிமுகம்
இஞ்சிகுடி ஒரு சிறிய கிராமம். திருவாரூருக்கும் மயிலாடுதுறைக்கும் இடையே உள்ள இந்த ஊரில் பார்வதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இறைவனின் திருநாமம் பார்வதீஸ்வரர், இறைவியின் திருநாமம் சாந்தநாயகி என்பதாகும். இஞ்சிகுடி என்ற இந்த ஊர் பழங்காலத்தில் சந்தனக் காடாக இருந்ததாம். இங்கு கிழங்கு வகையைச் சேர்ந்த இஞ்சியை ஊர் மக்கள் நிறையப் பயிரிட்டனர். அதை விற்று வரும் வருமானத்தில் தங்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர். இஞ்சி பயிரை நம்பி மக்கள் வாழ்ந்ததால், இந்த ஊருக்கு ‘இஞ்சிகுடி’ என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
இஞ்சிகுடி ஒரு அழகிய கிராமம். இங்கிருந்த சந்தனக்காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார் துர்வாச முனிவர். அவரை அடைய நினைத்த மதலோலை என்ற அரக்கி, முனிவரின் தவத்தை கலைத்தாள். தவம் கலைந்து பார்த்த முனிவரின் எதிரே நின்றிருந்தாள் மதலோலை. கடும் கோபம் கொண்ட முனிவர், அவளுக்கு சாபத்தோடு தாயாகும் வரத்தையும் வழங்கினார். இதையடுத்து மதலோலை, கருவுற்று அம்பரன், அம்பன் என இரு புதல்வர்களைப் பெற்றெடுத்தாள். அவர்கள் அசுரத் தன்மையோடு வளர்ந்தனர். பின்னர் தவத்தால் இறைவனிடம் இருந்து பல வரங்களைப் பெற்ற அவர்கள், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், பூலோக மக்களுக்கும் பெரும் துன்பம் விளைவித்தனர். துன்பத்தால் துடித்த மக்கள் தேவர்களிடத்திலும், தேவர்கள் சிவபெருமானிடமும் முறையிட்டனர். அவர்களின் வேண்டுகோளுக்குப் பலன் கிடைத்தது. அனைவரையும் அசுரர்களிடமிருந்து காப்பாற்ற முடிவு செய்த சிவபெருமான், தனது இடதுபாகத்தில் அமர்ந்திருந்த பார்வதி தேவியை புன்னகையோடு நோக்கினார். அவரது பார்வையின் பொருளை உணர்ந்த அன்னை, கண்டவர் மயங்கும் பேரழகு கொண்டு அசுரர்களின் முன்பு போய் நின்றாள். அசுரர்கள் இருவரும் அந்தப் பெண்ணைப் பார்த்தனர். அவளது அழகில் மதி மயங்கினர். மணந்தால் அவளைத்தான் மணப்பது என இருவரும் முடிவு செய்தனர். அப்போது திருமால் ஒரு வயோதிகர் உருவில் அங்கு தோன்றினார். இரு அரக்கர்களும் அந்தப் பெண்ணை தங்களுக்கே மணம் முடித்து தர வேண்டும் என அந்த வயோதிகரிடம் கேட்டனர். அதைக்கேட்ட வயோதிகர் ‘ஒரு பெண்ணை எப்படி இருவர் அடைய முடியும்?. உங்களில் பலசாலி யாரோ, அவர்களுக்கே இந்தப் பெண் கிடைப்பாள்’ என்றார். இருவரில் யார் பலசாலி என்று அறிந்து கொள்வதற்காக இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. அந்த பயங்கரமான சண்டையில், அம்பரன் தன்னுடைய தம்பி அம்பனைக் கொன்றான். வெற்றி பெற்ற மகிழ்வில் அம்பரன், அந்தப் பெண்ணை நெருங்கினான். அப்போது அன்னையானவள், காளியாக உருவெடுத்தாள். கண்ணில் கோபம் பொங்க ஆக்ரோஷமாக நின்ற அம்பிகையைக் கண்டு அம்பரன் நடுநடுங்கிப் போனான். அவளிடம் இருந்து தப்பிக்க வடக்கு திசை நோக்கி ஓடத் தொடங்கினான். அவனைத் துரத்திச் சென்ற காளிதேவி, தன்னுடைய சக்தி வாய்ந்த ஆயுதங்களையெல்லாம் அசுரனின் மீது வீசினாள். ஆனால் அந்த அசுரன் அவற்றையெல்லாம் தன் கைகளில் பற்றிக்கொண்டு ஓட்டம் பிடித்தான். ஐந்து காத தூரம் விரட்டிச் சென்ற காளி, தன் சூலாயுதத்தை ஏவினாள். சூலாயுதத்திற்கு அம்பரனால் தப்ப முடியவில்லை; இறந்து போனான். அசுர வதம் முடிந்தும், காளியின் கோபம் அடங்கவில்லை. இதைக் கண்ட திருமால், காளியிடம் சாந்தம் அடைந்து, முன்பு போல் சிவபெருமானின் இடது பாகத்தில் இருந்தருள வேண்டும் என்று வேண்டினார். தேவியும் அப்படியே இறைவனின் இடப்பாகத்தில் அமர்ந்தாள்.
நம்பிக்கைகள்
சூரியனும் சந்திரனும் அருகருகே காட்சி தருவதால் இங்கு வழிபட, கிரகதோஷங்கள் விலகும் மற்றும் திருமணக் கோலத்தில், சண்டிகேஸ்வரியுடன், சண்டிகேஸ்வரர் காட்சி தருவதால் இங்கு பிரார்த்திக்க, திருமண யோகம் உண்டாகும்.
சிறப்பு அம்சங்கள்
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவாசலின் வெளிப்புறம் இரண்டு விநாயகர் திருமேனிகள் உள்ளன. உள்ளே நுழைந்ததும் பலிபீடமும், நந்தியும் உள்ளது. ஆலயம் மூன்று வாசல்களைக் கொண்டதாக உள்ளது. அவை தோரண வாசல், கோபுர வாசல், அணுக்கன் திருவாசல் என்பனவாகும். சுவாமி அம்மன் கோவில்களுக்கு உரிய கருவறைகளை சூழ்ந்துள்ள முதல் திருச்சுற்றும், நந்தவனத்தோடு அமைந்துள்ள இரண்டாவது திருச்சுற்றும் மதில்களோடு கூடியதாகும். மூன்றாவது திருச்சுற்று மதில் சுவற்றுக்கு வெளிப்புறம் உள்ள சாலை திருச்சுற்றாகும். கோபுர வாசலைக் கடந்ததும் மகாமண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் வடமேற்கில் உள்ள நீண்ட மேடையில் சனி பகவான், பைரவர், துவார பாலகர், பாணுலிங்கம், நாகர், சூரியன், சந்திரன் ஆகியோர் திருமேனிகள் உள்ளன. இந்த மண்டப தூண்கள் சிலவற்றில் சோழர்கால கல்வெட்டுகள் உள்ளன. அருணகிரிநாதரும் இரட்டைப் புலவர்களும் இத்தலம் பற்றி பாடியுள்ளனர். அருணகிரி நாதருக்கு முருகப் பெருமான் இங்குதான் காட்சி கொடுத்ததாகவும் கண்ணப்ப நாயனார் சிவனருள் பெற்றதும் இங்குதான் என்கின்றனர். விக்கிரம சோழனால் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக தெரிகிறது. சோழ மன்னன் குலோத்துங்கன் பிள்ளை வரம் வேண்டி அம்பிகையை வேண்ட அம்பிகை அருளால் மன்னனுக்கு குழந்தை செல்வம் கிடைத்ததாம். அதன் நன்றியாக இறைவிக்கு மன்னன் கொலுசு அணிவித்தானாம். எனவே அன்னை இன்றும் காலில் கொலுசுடன் காட்சி தருகிறாள். தவிர இங்கு சூரியனும், சந்திரனும் அருகருகே காட்சி தருவது சிறப்பான அமைப்பு என்கின்றனர் பக்தர்கள்.
திருவிழாக்கள்
வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று இங்கு நடக்கும் திருவிழாவில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கு பெறுகின்றனர். அன்று பஞ்சமூர்த்திகளின் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். ஒவ்வொரு மாத பவுர்ணமியின் போதும் இங்குள்ள வராகிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. வராகிக்கு முன்னே யாகம் வளர்த்து சிறப்பு ஆராதனை செய்கின்றனர். இந்த யாகத்தில் கலந்து கொள்ளும் கன்னியருக்கு விரைந்து திருமணம் நடந்தேறும் என்கின்றனர் பக்தர்கள். துர்க்கை அம்மனுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு நாட்களில் ராகு கால நேரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இஞ்சிகுடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி