ஆறகளூர் கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில், சேலம்

முகவரி
அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில், ஆறகளூர், சேலம் மாவட்டம் – 636 101. போன்: +91- 4282-260248, +91-99946 31830
இறைவன்
இறைவன்: கரிவரதராஜப்பெருமாள் இறைவி : கமலவல்லி
அறிமுகம்
கரிவரதராஜப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் ஆறகளூரில் அமைந்துள்ளது. இந்த கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது: இந்த கோயில் 12 ஆம் நூற்றாண்டில் பானா வம்சத்தின் ராஜராஜ வாணர் கோவரையனால் கட்டப்பட்டது.
புராண முக்கியத்துவம்
பல்லாண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியை ராஜராஜன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனது ஆட்சிக்காலத்தில் மக்கள் செல்வ செழிப்புடன் இருந்தனர். எனவே, அவர்கள் இறைவழிபாட்டை முற்றிலும் மறந்தனர். அவர்களுக்கு இறைவழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக திருமால், வருணனிடம் சொல்லி மழை பெய்யாமல் செய்தார். இதனால், பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் வறுமையில் வாடினர். துன்பம் வந்ததும் கடவுளின் நினைவு வந்தது. பெருமாளிடம் தங்கள் பக்தியின்மைக்காக மன்னிப்பு கோரினர். அன்றிரவில் மன்னனின் கனவில் திருமால் தோன்றி, “”உங்களுக்கு செல்வம் தருவதும், அதை நிறுத்துவதும் எமது கையில்தான் உள்ளது. நிலையற்ற செல்வத்தின் பின்னால் சென்று இறைவழிபாட்டை மறக்காதீர்கள்,” என்றார். உண்மையை உணர்ந்த மன்னன் மன்னிப்பு கேட்டான். பின், திருமால் நாட்டில் கரிய மேகங்கள் உருவாகச் செய்து மழைபொழிவித்தார். மகிழ்ந்த மன்னன் இவ்விடத்தில் பெருமாளுக்கு கோயில் கட்டினான். கரிய மேகங்களை உருவாக்கி அருள்புரிந்தவர் என்பதால் சுவாமி “கரிவரதராஜப் பெருமாள்’ என பெயர் பெற்றார்.
நம்பிக்கைகள்
ராகு, கேது தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் நாகதேவிக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். பிரகாரத்தில் உள்ள வரசித்தி ஆஞ்சநேயரை வழிபட்டால் பேச்சு வராதவர்களுக்கு பேச்சு வரும், திக்குவாய் பிரச்சனை உள்ளவர்களுக்கு பிரச்சனை தீரும் என்பதும் நம்பிக்கை. கோயிலுக்குள் உள்ள நரசிம்மர் தீர்த்தத்தில் நீராடினால் பாவம் நீங்கி விடும்.
சிறப்பு அம்சங்கள்
நாகதேவி: கருறையில் கரிவரதராஜர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் மேற்கு பார்த்தபடி இருக்கிறார். மழை வேண்டுபவர்கள் இவருக்கு திருமஞ்சனம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். தாயார் கமலவல்லி, சுவாமி சன்னதிக்கு எதிரே கிழக்கு பார்த்தபடி, தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளது சன்னதியின் முன்புறம் நாகதேவி இருக்கிறாள். சிறப்பம்சம்: சிவனுக்குரிய வில்வம் இத்தலத்தின் விருட்சம் ஆகும். நின்ற மற்றும் அமர்ந்த கோலங்களில் இரண்டு கருடாழ்வார்கள் காட்சி தருகின்றனர். இத்தலத்திற்கு எதிரிலேயே அஷ்டபைரவர்கள் அருளும் காமநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இத்தலத்திற்கு செல்பவர்கள் பெருமாள், சிவன் இருவரையும் ஒருசேர தரிசனம் செய்வது விசேஷ பலன் தரும்.
திருவிழாக்கள்
வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, புரட்டாசி சனி.
காலம்
12 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆறகளூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஆத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி