அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீசைலம்
முகவரி
அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீசைலம் – 518 100. (திருப்பருப்பதம்), கர்னூல் மாவட்டம், ஆந்திரமாநிலம். போன் +91- 8524 – 288 881, 887, 888.
இறைவன்
இறைவன்: மல்லிகார்ஜுனேஸ்வரர் , இறைவி: பிரமராம்பாள், பருப்பநாயகி
அறிமுகம்
திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில்) என்பது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இது சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் ஆந்திர மாநிலத்தின் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ள நல்லமலைக் குன்றில் அமைந்துள்ளது. ஸ்ரீசைலம் என்றும் அழைக்கப்படும் இது ஹைதராபாத் நகரில் இருந்து 232 கிமீ தொலைவில் கிருஷ்ணா நதியின் கரையில் அமைந்துள்ளது. இது மல்லிகார்ஜுன சுவாமிக்காக அமைக்கப்பட்டது. இத்தலத்தில் நந்தி தேவர் தவம் செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றல் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.மேலும் இங்குள்ள பிரம்மராம்பிகை அம்பாள் சன்னதி 51 சக்தி பீடங்களில் மற்றும் 18 மகா சக்தி பீடங்களில் தேவியின் கழுத்துப் பகுதி விழுந்த பீடமாகவும் போற்றப்படுகிறது. தீர்த்தம்:பாலாநதி புராண பெயர்:திருப்பருப்பதம்
புராண முக்கியத்துவம்
சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக்குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர். சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி,””தந்தையே! கலங்காதீர்கள். நான் சிவனைக்குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்,”என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார். நந்தி தவம் செய்த “நந்தியால்’ என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் தவமிருந்து பர்வத மலையாக மாறும் வரம் பெற்றான்.
நம்பிக்கைகள்
பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற சுவாமிக்கும் அம்மனும் திருமணம் செய்து வைக்கிறார்கள். நேர்த்திக்கடன் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
சிறப்பு அம்சங்கள்
இக்கோயிலானது 20 அடி உயரமும், 2121 அடி நீளமுடைய கோட்டைச் சுவர் போன்ற திருச்சுற்று மதில்களைக் கொண்டுள்ளது. இந்த மதிற்சுவரின் வெளிப்புறத்தில் நான்குபுறங்களிலும் ஏராளமான புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள், போர்க்காட்சிகள், பார்வதி திருமணம், அர்சுணன் தவம், சந்திரவதி கதை, மார்கண்டேயன் கதை, தட்சனின் யாகம், சிவதாண்டவம், கஜாசுர சம்காரம், சிபிசக்கரவர்த்தி கதை, தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைதல், கண்ணப்பர் கதை, மகேசுவரர் விசுவரூபம், மகிடாசுரமர்தினி போன்ற பல சிற்பங்களைக் கோண்டதாக உள்ளன. கோயிலின் நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் உள்ளன. கிழக்குப்புறமுள்ள கோபுரம் கிருஷ்ணதேவராயராயரால் கட்டப்பட்டதால் அவர் பெயராலேயே கிருஷ்ணதேவராயர் கோபுரம் என அழைக்கப்படுகிறது. வடக்குப்புற கோபுரமானது சத்ரபதி சிவாஜியால் 1677இல் கட்டப்பட்டதால் சிவாஜி கோபுரம் என அழைக்கப்படுகிறது. மேற்குப்புற கோபுரமானது கோயில் நிர்வாகத்தால் 1966 இல் கட்டப்பட்டு பிரம்மானந்தராயா கோபுரம் என பெயரிடப்பட்டது. இவற்றின் மையத்தில் மல்லிகார்சுனர் கருவறை உள்ளது. இதன்மீது உள்ள விமானமானது காக்கத்திய மன்னரான கணபதியின் சகோதரியான மைலம்மா தேவியால் கட்டப்பட்டதாக அவரது கல்வெட்டின்வாயிலாக அறியப்படுகிறது. மல்லிகார்சுனர் சந்நிதிக்கு மேற்கில் சந்திரமாம்பா சந்நிதியும், கிழக்கே இராசராசேசுவரி சந்நிதிகளும் உள்ளன.
திருவிழாக்கள்
தெலுங்கு வருடப்பிறப்பு, ஆவணி மாத சப்தமி பூஜை, மஹா சிவராத்திரி, யுகாதி பண்டிகை, கார்த்திகை சோமவாரம் திருவிழா, பிரதோஷம்
காலம்
1000 – 2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
ஸ்ரீசைலம் தேவஸ்தானம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஸ்ரீசைலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஹைதராபாத்
அருகிலுள்ள விமான நிலையம்
ஹைதராபாத்