அருள்மிகு திருக்காமேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
முகவரி
அருள்மிகு திருக்காமேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர் – அஞ்சல்,வந்தவாசி (வழி), திருவண்ணாமலை மாவட்டம் – 604 408.
இறைவன்
இறைவன்: பராசரேஸ்வரர், இறைவி: சாந்தநாயாகி
அறிமுகம்
வந்தவாசியிலிருந்து தேசூர், கீழ்ப்புத்தூர் செல்லும் பேருந்துகளில் செல்லலாம். வந்தவாசி – திண்டிவனம் சாலையில் 4 கி.மீ. சென்று; பொன்னூர் 4 கி.மீ என்று பெயர்ப்பலகையுள்ள இடத்தில் திரும்பி வலப்புறச்சாலையில் செல்லவேண்டும். முதலில் 2வது கி.மீ.ல் இளங்காடு என்னும் ஊர் வரும். அடுத்து உள்ளது பொன்னூர். ஊர் கோடியில் கோயில் உள்ளது. சுமாரான சாலை. (இவ்வழியே தான் கீழ்ப்புத்தூர் பேருந்து செல்கிறது). பெரிய ஊராக இருந்தமையால் சுந்தரர் இதனை ‘பொன்னூர் நாட்டுப் பொன்னூர்’ என்று படுகிறார். இன்று சிறிய கிராமமாகவுள்ளது. மிகப் பழமையான கற்கோயில். முற்றிலும் சிதலமாகியுள்ளது. கற்கட்டிடத்தில் ஆங்காங்கு விரிசல்கள். சுற்றிலும் புதர்கள். கோயிலுள் மின்னொளியுமில்லை. சுவாமி இருளில் மூழ்கி இருக்கிறார். தரிசிக்கும் பொது நம் கண்ணில் நீர் பெருகுகிறது. நம் மனம் படும் துயரத்திற்கு அளவேயில்லை. ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. இந்நிலையில் பிறவிசேஷங்கள், வழிபாடுகள் பற்றி நினைக்கவும் வழில்லை. கல்வெட்டில், பரமீசுரம் உடைய நாயனார் பராசர ஈஸ்வரமுடைய நாயனார் என்ற பெயர்கள் சுவாமிக்குக் காணப்படுகின்றன. இக்கோயிலை திருப்பணிகள் செய்து காப்பாற்றப்படவில்லையெனில் அடுத்த தலைமுறைக்கு இக்கோயில் இருப்பது அரிது. இத்தலம் சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள தொண்டை நாட்டு வைப்பு தலமாகும்.
புராண முக்கியத்துவம்
ஒருமுறை பிரம்மா தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க பூமியில் பல சிவாலயங்கள் சென்று வழிபாடு செய்தார். அவரது தோஷம் நீங்க அருளிய சிவதலங்களுள் இதுவும் ஒன்று. பிரம்மனுக்கு பொன்னன் என்ற திருநாமமும் உண்டு. பொன்னன் எனக் கூறப்படும் பிரம்மன் வழிபட்டதன் காரணத்தால் இத்தலம் பொன்னன் ஊர் என்றிருந்து, மருவி பொன்னாரானது. பிரம்மன் வழிபட்ட காரணத்தினால் இத்தல இறைவன் பிரம்மேஸ்வர் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு சம்புவராயர் காலத்தில் சீரமைக்கப்பட்டு, சுமார் 1300 ஆண்டுப் பழமையுடையதாக விளங்குகிறது. இவ்வூர் பிரமன் வழிப்பட்ட சிறப்புடையது. எனவே பிரமபுரி, சுவர்ணபுரி என்னும் பெயர்களுண்டு. கோயில் வளாகத்தில் வடக்கே சுமார் 7 அடி உயர மகாவிஷ்ணு சிலை ஒன்றுள்ளது. இதுவே பெருமாள் கோயிலின் பழைய மூலவர் ஆவர். இவர் ஸ்ரீகரண விண்ணகரப் பெருமாள் எனவும் அழகர் பெருமாள் எனவும் போற்றப்படுகிறார். ஸ்ரீ தேவி, பூமிதேவியுடன் காட்சித் தருகின்றார்.
நம்பிக்கைகள்
சிவனும் பெருமாளும் ஒரே தளத்தில் அருள்பாலிப்பதால் பிராத்தனை எதுவாக இருந்தாலும் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்
இக்கோயிலுக்கு குலோத்துங்க சோழன், விஜயநகர மன்னர்கள், சுந்தரபாண்டியன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. வளாகத்துள் மேற்கு நோக்கியவாறு பெருமாள் சன்னதியும், கிழக்கு நோக்கியவாறு சிவன் சன்னதியும் அமைத்திருப்பது சிறப்பு.
திருவிழாக்கள்
பிரதோஷம், சிவராத்திரி
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வந்தவாசி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவண்ணாமலை
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை