Sunday Nov 24, 2024

அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில் – சுவாதி நட்சத்திரம்

முகவரி

அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில், சித்துக்காடு, தெற்கு மாட வீதி, 1/144 திருமணம் கிராமம், பட்டாபிராம் வழி, வயலாநல்லூர் போஸ்ட், சென்னை மாவட்டம். Phone: +91 93643 48700, 93826 84485

இறைவன்

இறைவன் – தாத்திரீஸ்வரர் இறைவி – பூங்குழலி

அறிமுகம்

படுக்கை ஜடாமுடி சித்தர், பிராண தீபிகா சித்தர் என்ற சித்தர்கள் இங்கு தவம் செய்தனர். அவர்கள் இங்கிருந்த நெல்லி மரத்தடியில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து, நெல்லியப்பர் என்ற பெயர் சூட்டினர். சமஸ்கிருதத்தில் நெல்லியை தாத்திரி என்பர். எனவே இவர் தாத்திரீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். சிறந்த மலர்ச்செடிகளால் மணம் பொருந்திய வனத்தில் சிவன் காட்சி தருவதால் இத்தலத்திற்கு திருமணம் என்ற பெயர் ஏற்பட்டது. சித்தர்கள் வசித் ததால் சித்தர்காடு எனப்பட்ட தலம், சித்துக்காடு என மருவியது. தற்போது இப் பெயரே வழக்கில் உள்ளது. சுவாதி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர் சுவாதி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: பெரிய மனிதர்கள் இவர்களிடம் வலிய வந்து பழகு வார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் கனவு காண்பது இவர்களின் சுபாவம். புத்தி கூர்மையுடனும், எதிலும் முன்யோசனையோடு செயல்படும் இவர்களின் சிறப்பம்சம். சுகபோகங்களை அனுபவிக்கும் யோகம் கொண்டவர்கள். நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ளும் இவர்கள், பழகுவதற்கும் இனிமையானவர்கள்.

புராண முக்கியத்துவம்

மன்னன் இங்கு கோயில் திருப்பணியைத் துவங்கியபோது, இங்கிருந்த பூந்தோட்டத்தில் அம்பாள் சிலை கிடைக்கப்பெற்றது. பூங்குழலி என பெயர் சூட்டி அம்பாளுக்கு சன்னதி எழுப்பினான். திருமணத்தடை உள்ளவர்கள் நெல்லியப்பருக்கு, நெல்லிச்சாறு, நெல்லிப்பொடி மற்றும் பால் அபிஷேகம் செய்வித்தும், பூங்குழலி அம்பாளுக்கு பச்சை வஸ்திரம், வளையல் அணிவித்து அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். கோயிலிலுள்ள தூண்களில் சில சித்தர்களின் சிற்பங்கள் உள்ளன. சிவன் சன்னதி எதிரேயுள்ள நந்தி, சாந்தமாக காட்சியளிக்கிறது. எனவே மூக்கணாங்கயிறு இல்லை. ஒரு தூணில் படுக்கை ஜடாமுடி சித்தர், நந்தி மண்டப தூணில் பிராண தீபிகா சித்தர் சிற்பங்கள் உள்ளன. தன்னை வழிபடும் பக்தர்களுக்கு பிராணனை (உயிர்) காப்பவராக அருளுவதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. ஆயுள் விருத்திக்காக, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு, நெய் தீபம் ஏற்றி வழி படுகிறார்கள். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கான பரிகார தலம் இது. திருக்கார்த்திகை, ஆடி, தை கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சுப்பிரமணியருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும். திருக்கார்த்திகையன்று சிவன் சன்னதியில் 27 நட்சத்திரங்களுக்கும் தீபம் ஏற்றி பூஜை செய்கின்றனர். மார்கழியில் நடராஜருக்கு 10 நாள் விழா நடக்கும். திருவாதிரையன்று, நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக் கல்யாண வைபவம் நடக்கிறது. இந்த திருமணத்தைக் கண்டவர் களுக்கு நல்ல மண வாழ்க்கை அமையும் என்பதும், தம்பதியர் கருத்தொற்று மையுடன் வாழ்வர் என்பதும் நம்பிக்கை.

நம்பிக்கைகள்

சுவாதி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள சிவபெருமானை வழிபடுகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

சுவாதி எனும் புனித சொல்லில் சிவ, விஷ்ணு ஐக்கிய ஸ்வரூபசக்திகள் நிறைந்துள்ளன. நமசிவாய மந்திரத்தில் வகாரத்தில், சுவாதி என்ற புனிதச் சொல்லும் அடங்கும். அதேபோல் பெருமாளின் அம்சமான சுந்தரராஜர், வாசுதேவர், திரிவிக்ரமன் ஆகிய மூவருக்கும் உரிய பீஜாட்சர சக்திகள் நிறைந்தது சுவாதி என்ற சொல். எனவேதான் சுவாதி நட்சத்திர நாளில் சிவன், விஷ்ணு இருவரும் இணைந்து அருளும் சித்துக்காடு தலத்திற்கு சென்று வழிபடுவது சிறப்பு. சுவாதியில் பிறந்தவர்கள் அந்த நட்சத்திர நாளில் இத்தல குபேரனுக்கு, நெல்லிக்காயுடன், தயிர் சாதம், புளியோதரை படைத்து அதை ஏழைமக்களுக்கு தானம் செய்தால், செல்வம் பெருகி, வாழ்வு சிறக்கும் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்

சித்ரா பவுர்ணமியில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, விநாயகர் சதுர்த்தி, சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, திருக்கார்த்திகை, ஆடி, தை கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் .

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பட்டாபிரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பட்டாபிரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top