Saturday Jan 18, 2025

அருள்மிகு சூரியனார் கோவில், திருமங்கலக்குடி

முகவரி

அருள்மிகு பிராணவரதேஸ்வரர் திருக்கோவில் திருமங்கலக்குடி, திருமங்கலக்குடி அஞ்சல், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் PIN – 612102

இறைவன்

இறைவன்: சூரியபகவான் இறைவி: உஷா தேவி

அறிமுகம்

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு கிழக்கே கும்பகோணம் பூம்புகார் சாலையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. ஆடுதுறை இரயில் நிலையத்தில் இறங்கி அணைக்கரை செல்லும் பேருந்தில் ஏறி இக்கோவிலை அடையலாம். திருமங்கலக்குடி காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்றுத் தொலைவு நடந்து கோவிலை அடையலாம். இந்த கோவில் ஒன்பது நவக்கிரகக்கோயில்களில் முதன்மையானதாகும். இதுவரை கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் இக்கோவில் குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் (கி.பி 1060 – கி.பி.1118) கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. முதலில் இக்கோவில் அர்காவனம் என்று அழைக்கப்பட்டு பின்னரே சூரியனார் கோவில் என்று மாறியது. இமயமலையின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த முனிவர்களுள் ஒருவர் காலவ முனிவர். அவருடைய எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தபோது பின்னாளில் அவருக்கு தொழுநோய் பிடிக்கும் என்பதை உணர்ந்து மிகவும் வருந்தினார். இமயமலைச் சாரலில் ஐம்புலன்களை அடக்கி, நவக்கிரகங்களை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருடைய தவத்தினால் ஈர்க்கப்பட்டு ஒன்பது தேவர்களும்காட்சியளித்தனர். காலவ முனிவர் தம்மை தொழுநோய் பற்ற இருப்பதாகத் தெரிவித்து, அந்நோய் பற்றாமலிருக்க வரம் கேட்டார். ஒன்பது தேவர்களும் வரமளித்து மறைந்தனர். படைப்புக் கடவுளான நான்முகன் ஒன்பது தேவர்களையும் அழைத்து “உயிர்களாய்ப் பிறந்த அனைவரும் இன்ப துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும். அந்த முனிவருக்கு வர இருந்த நோய் உங்களுக்கு வரும்” என்று சாபம் கொடுத்தார். அவர்கள் சாபம் நீங்குவதற்காக நான்முகன் வாக்கின்படி வெள்ளெருக்கங்காட்டில் கடுந்தவம் இருந்தனர். பன்னிரு வாரங்களுக்குப் பின்னர் முப்பெருங்கடவுளரும் காட்சி தந்தனர். “உங்களைப் பிடித்திருந்த தொழுநோய் தொலைந்துவிட்டது. இன்று முதல் இந்த இடம் உங்களுடையதே. துன்பம் தொலைய உங்களிடம் வருவோர்க்கு நீங்களே அருள் புரிய வரம் தருகிறோம்” என்று வரம் தந்தனர். சிவன் தனது கையிலிருந்த திரிசூலத்தைக் கொண்டு ஒன்பது புனித நீர் நிலைகளை உருவாக்கினார். அந்நீர் நிலைகளில் புனித நீராடி அன்போடு வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களின் அருள் கிடைக்கும். சூரியன் தலைமையில் அனைவரும் மேற்கொண்ட தவத்தால் அங்கே அனைவருக்கும் கோவில் உண்டாகும். மேலும், சூரியனார் கோயில் என்ற பெயரையே இந்த ஊரும் வழங்கி வருமாறு அருள் புரிந்தார். தல விருட்சம்;எருக்கு நிறம் : சிவப்பு வச்திரம்: சிவப்புத் துணி மலர்: தாமரை மற்றும் எருக்கு

புராண முக்கியத்துவம்

கருவறையில் சூரிய பகவான் மேற்கு முகமாக பார்த்தபடி இடது புறத்தில் உஷா தேவியுடனும் வலது புறத்தில் பிரத்யுஷாதேவி எனும் சாயாதேவியுடனும் நின்றபடி திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றார். சூரியபகவான் தமது இரு கரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்திப் புன்முறுவலுடன் விளங்குகிறார். சூரிய பகவான் உக்கிரம் அதிகம். அதன் வீச்சை யாராலும் தாங்க முடியாது. ஆகவே அவரைச் சாந்தப்படுத்தும் பொருட்டு குருபகவான் எதிரில்உள்ளார். அதனால்தான் சூரியபகவானை வழிபட முடிகிறது. மேலும் சூரியனை நோக்கியபடி சூரியனின் வாகனமான குதிரை (அசுவம்) இருக்கிறது. சிவலிங்கத்துக்கு முன்னே நந்தி இருப்பது போல இங்கு குதிரை இருக்கிறது. நவகிரகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்ககூடியதும் நவகிரகமே மூலஸ்தானமாக அமைந்த கோயில் இது. மற்ற நவகிரக தலங்களில் பரிவார தேவதைகளாக மட்டுமே உள்ளனர். இங்கு திருமணக்கோலத்தில் 2 மனைவியரோடு சூரியபகவான் உள்ளது சிறப்பு. உக்கிரமாக இல்லாமல் இங்கு சாந்த சொரூபமாக சூரியபகவான் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. இத்தலத்தில் பிற கிரகங்கள் அனைத்துக்கும் தனி தனி சந்நிதி உள்ளது. இங்குள்ள நவகிரகங்கள் எல்லாமே அனுகிரகம் உள்ளதாக இருக்கிறது. இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் வாகனங்கள் இல்லை. வாகனங்கள் இல்லாது நவகிரக நாயகர்களாக மட்டுமே அருள்பாலிக்கின்றனர். திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான கோயில் இது.

சிறப்பு அம்சங்கள்

இக்கோவிலின் இராஜகோபுரம் 50 அடி உயரம் கொண்டது. மொத்தம் மூன்று நிலைகளையும் ஐந்துகலச்ங்களையும் உடையது. இக்கோவிலின் முன் புஷ்கரினி தீர்த்தமும் நவக்கிரக தீர்த்தமும் உள்ளன. கோவில் கோபுரம் முழுவதும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கர்ப்பக்கிரகத்தில் சூரியபகவானும் இடது புறம் உஷா தேவியும் வலது புறம் ப்ரத்யுஷா தேவியும் காட்சியளிக்கின்றனர். மேலும் மற்ற எட்டு கிரகங்களுக்கான கடவுள்களும் இங்கு தனித்தனி சந்நிதியில் காட்சியளிக்கின்றனர். கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை ஆகியநோய்களால்பாதிக்கப்பட்டோரும் ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி ஆகியன உள்ளோரும், நவக்கிரகதோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் நன்மை பயக்கும். மேலும் இங்கு 12 ஞாயிற்றுக்கிழமைகள் தங்கி வழிபடுவது சிறப்பு. ஆதித்ய ஹ்ரதயப் பாடலை பாடி வழிபடுதலும்நன்று.

திருவிழாக்கள்

ரதசப்தமி உற்சவம் தை மாதம் 10 நாட்கள் நடைபெறும் திருவிழா, இந்த கோவிலின் மிகவும்முக்கிய திருவிழா ஆகும்.

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருமங்கலக்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஆடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top