Saturday Jan 18, 2025

அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் கோயில் – சித்திரை நட்சத்திரம்

முகவரி

அருள்மிகு சித்திர ரத வல்லபபெருமாள் கோயில், குருவித்துறை – 625 207 வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான்வழி, மதுரை மாவட்டம் Phone: +91 94439 61948, 97902 95795, 97903 55234

இறைவன்

இறைவன் – சித்திரரத வல்லபபெருமாள் இறைவி – ஸ்ரீதேவி, பூதேவி

அறிமுகம்

இங்கு குருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். இங்கு பெருமாள் தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். இத்தலத்தில் நவக்கிரகத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள்பாலிக்கிறார்.நமக்கு குருபெயர்ச்சி பாதிப்பு என்றால் குரு (வியாழன்)விடம் சென்று முறையிடுவோம். அந்த குருவுக்கே பாதிப்பு என்றால் யாரிடம் போய் முறையிடுவார். குருபகவானும் தன் மகன் கசனுக்காக உலக நாயகன் நாராயணனை நோக்கி தவம் செய்த இடம் தான் குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள்கோயிலாகும். உலகில் வியாழ பகவானே நாராயணனை நோக்கி தவம் செய்யும் இடம் இந்த திருத்தலம் என்றும் வியாழன் சுயம்புவாக தவக்கோலத்தில் வீற்றிருப்பதும் இங்குதான் என நம்பப்படுகிறது. பெருமாள், குரு பகவானுக்கு ஒரு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தன்று (சித்ரா பவுர்ணமி), சித்திரத் தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். இதனால் இவர், சித்திரரத வல்லபபெருமாள் என்று அழைக்கப்படுகிறார். எனவே தான் இத்தலம் சித்திரை நட்சத்திரத்திற்குரிய கோயிலாக விளங்குகிறது. குருபார்க்க கோடி நன்மை என்பதால், சித்திரை நட்சத்திரகாரர்களை தவிர மற்ற நட்சத்திரக்காரர்களும் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள். ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் ஜாதகத்தை ஏந்தியபடி இந்த பெருமாளை சுற்றி வருவது சிறப்பு. அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தமது வாழ்நாளில் அடிக்கடியோ, சித்திரை நட்சத்திர நாளிலோ அவசியம் சென்று வழிபட வேண்டி கோயில் மதுரை சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயிலாகும். சித்திரை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் இவர்ககள், ஊர் சுற்றுவதில் மிகவும் விருப்பம் கொண்டவர்கள். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர். தைரியம் நெஞ்சில் நிறைந்திருக்கும். எதிரியையும் நேசிக்கும் பரந்த உள்ளம் கொண்டவர்கள். பிறருடைய குணம் அறிந்து செயல்பட்டு தனுக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வர்.

புராண முக்கியத்துவம்

முன்னொரு காலத்தில் நடந்த தேவ, அசுர போரில், அசுரர்களில் நிறைய பேர் மாண்டனர். மாண்ட அசுரர்களை அசுர குரு சுக்கிராச்சாரியார் மருதசஞ் சீவினி என்ற மந்திரம் மூலம் உயிர் பெறச்செய்தார். அந்த மந்திரத்தை கற்றுக் கொள்ள விரும்பிய தேவர்கள், வியாழ பகவானின் (குரு) மகன் கசனை, அசுர குருவிடம் சென்று மருதசஞ்சீவினி மந்திரத்தை உபதேசம் பெற்று வா என்றார்கள். கசனும் தன் தந்தை வியாழபகவான் ஆசியுடன் அசுரலோகம் சென்று, சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி மூலமாக சுக்ராச்சாரியாரிடம் மந்திரம் கற்றுக் கொண்டான். இதைக்கண்ட அசுரர்கள் கசன் உயிரோடு இருந்தால் அசுரர்குலத்திற்கு ஆபத்து வந்துவிடும் என நினைத்து , கசனை கொன்று தீயிலிட்டு சாம்பலாக்கி அசுரகுரு குடிக்கும் பானத்தில் கலக்கி கொடுத்து விட்டார்கள். அவரும் குடித்து விட்டார். கசனை காணாத தேவயாணி, தன் தந்தையிடம்,கசனின் இருப்பிடத்தை கண்டறியும் படி வேண்டினாள். அசுரகுரு தன் ஞான திருஷ்டியால் கசன் தன் வயிற்றில் இருப்பதை அறிந்து, மருதசஞ்சீவினி மந்திரம் மூலம் கசனை உயிர் பெறச் செய்தார். உயிர்பெற்று வந்த கசன், தன் உயிரைக்காப்பாற்றிய அசுரகுரு இறந்து கிடப்பதைக் கண்டு தான் அவரிடம் கற்ற மந்திரம் மூலம் அசுரகுருவை உயிர்பெறச் செய்தான். சுக்கிராச்சாரியார் தன் மகள் தேவயாணியை மணம் முடித்து செல்ல வேண்டும் என்று கூற, அதற்கு கசன் சுக்கிராச்சாரியாரின் வயிற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதால் தேவயாணி எனக்கு சகோதரி முறை வேண்டும் என பக்குவமாகக் கூறி தேவலோகம் கிளம்பினான். கடும்கோபம் கொண்ட அவள், கசனை சப்த மலைகளாலும் தடுத்து நிறுத்தி அசுரலோகத்திலேயே தங்க வைத்தாள். கசனைக் காணாத வியாழன், மகனை மீட்டுத்தரும்படி இத்தலத்து பெருமாளை வேண்டி தவமிருந்தார். பெருமாள், சககரத் தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டார். பின்பு வியாழனின் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார்.

நம்பிக்கைகள்

சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்களின் தோஷங்கள் நீங்க இந்த பெருமாளை வழிபடுவது சிறப்பானதாக கூறப்படுகிறது. ஜாதகத்தை கையில் வைத்து கொண்டு இந்த கோவிலை வலம் வந்து வேண்டினால் நிவர்த்தி ஆகிவிடும் என்பது ஐதீகம். இங்குள்ள குரு பகவான் யோக குருவாக அமர்ந்திருக்கிறார். குருவும், சக்கரத்தாழ்வாரும் சுயம்புவாக இருப்பது மேலும் சிறப்பிக்கும் வகையில் உள்ளது. குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். அவ்வகையில் சுயம்பு யோக குருவாக வீற்றிருக்கும் இவரை தரிசனம் செய்தால் திருமணம் கைகூடி வரும், புத்திர பாக்கியம் உடனே கிட்டும்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு பெருமாள், குரு பகவானுக்கு ஒரு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தன்று (சித்ரா பவுர்ணமி), சித்திரத் தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். எனவே தான் இத்தலம் சித்திரை நட்சத்திரத்திற்குரிய கோயிலாக விளங்குகிறது. இங்கு குருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். இத்தல பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம்.

திருவிழாக்கள்

வைகாசி ஏகாதசி, குருபெயர்ச்சி

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மதுரை

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுரை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top