Friday Dec 27, 2024

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், பரங்கிப்பேட்டை

முகவரி

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், வண்ணாரபாளையம், பரங்கிப்பேட்டை, கடலூர்- 607 001

இறைவன்

இறைவன்: காசிவிஸ்வநாதர்

அறிமுகம்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், பரங்கிப்பேட்டை வண்ணாரபாளையம் காசிவிஸ்வநாதர் திருக்கோயில் சிதம்பரத்தில் இருந்து 17 கி.மீ. தூரத்தில் வெள்ளாறு வங்ககடலில் கலக்குமிடம்தான் பரங்கிப்பேட்டை, முன்பு “போர்டோ நோவோ’ என்று அழைக்கப்பட்டது! இங்கு போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷார் என அடுத்தடுத்து அங்கே ஆதிக்கம் செலுத்தினர். மேலும் இங்குதான் மைசூர் மன்னருக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் இடையே போர் நடந்தது. இவ்வூர் முகமதியர் காலத்தில் மஹ்மூதுபந்தர், எனவும் போர்ச்சுகீசியர், காலத்தில் போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) என்றும் நாயக்கர் காலத்தில் முத்து கிருஷ்ணபுரி என்றும் அழைக்கப்பட்டது. தமிழில் பேட்டை என்றால் சந்தை; பரங்கிப்பேட்டை என்பதன் பொருள் அந்நியர் (வெள்ளையர்) பரங்கியர்களின் சந்தையே. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது. ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது. இரும்புத் தாதுக்களை வெட்டியெடுப்பது, உருக்கி வார்ப்பது, தகடாக்குவது எனப் பல்வேறு பணிகளுக்காக ஏராளமான தொழிலாளர்கள் இங்கே வேலை செய்திருக்கிறார்கள். பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களின் உடலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வண்ணாரபாளையம் என்னும் இடத்தில் அடக்கம் செய்திருக்கிறார்கள். இறந்தவரின் பெயரை இரும்புத் தகட்டில் பொறித்து கல்லறையில் பொறித்து வைத்திருகிறார்கள். இன்றும் மிச்சமிருக்கும் அந்தக் கல்லறைகளில் ராபர்ட் உட் என்பவரின் கல்லறையில் மட்டுமே தற்போது இரும்புத்தகடு எஞ்சியுள்ளது. பரங்கிப்பேட்டை செப்பேடு 1. (திருப்பனந்தாள் காசிமட செப்பேடுகள்) செய்தி கிபி 1747 ல் தில்லையில் ஆயிரங்கால் மண்டபம், ராஜகோபுரம் முதலியவற்றுக்கு திருப்பணிகள் செய்த சண்முகத் தம்பிரான் என்பவருக்கு பரங்கிப்பேட்டை வணிகர்கள் திருப்பணிக்கு உதவியாக தங்களால் இயன்ற பொருட்களை வழங்கி உதவியுள்ளனர் அது மட்டுமன்றி பரங்கிப்பேட்டையில் வணிகம் செய்து வந்த ஹாலந்து நாட்டினர் திருப்பணிக்கு உதவியாக தங்களால் இயன்ற பொருட்களை வழங்கி உதவியதும் செப்பேட்டில் உள்ளது. பிற்காலத்தில் செஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற மன்னன்தான் இதை ஒரு கடற்கரை நகரமாக நிர்மாணித்தவர். இந்த ஊரின் புராண பெயர் : வருணசேத்ரம் இங்கு மூன்று சிவன்கோயில்கள் உள்ளன. 1.அகரம் ஆதிமூலநாதர் கோயில், 2.வண்ணாரபாளையம் காசிவிஸ்வநாதர் கோயில், 3.குமரன்கோயில் அதுமட்டுமால்லாமல் சிறிதும் பெரிதுமாக அனைத்து கோயில்களும் உள்ளன. காஞ்சி மகாபெரியவரின் தந்தையார் சுப்பிரமணிய சாஸ்திரிகள் ஆசிரியராகப் பணியாற்றிய ஊர் இது. இமயமலை மகா அவதார புருஷர் பாபாஜி பிறந்த தலமும் இதுவே.. இப்போ நாம வண்ணாரபாளையம் காசிவிஸ்வநாதர் கோயிலை சென்று பார்ப்போம். இச் சிவன்கோயில் சைவக்கிரந்தங்களில் ‘திருவருணமான்மியம்’ என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாம். வருணன் வழிபட்ட தலம் இது எனப்படுகிறது. பரங்கிப்பேட்டை ஊருக்குள் நுழைய பக்கிங்ஹாம் கால்வாய் பாலம் தாண்டி செல்லவேண்டும் அதற்கு பெரிய பாலம் என பெயர் இந்த பெரியபாலத்தை தாண்டியவுடன் கீழிறங்கும் இடத்தில் இடதுபுறம் காளியம்மன் கோயில் ஒன்று உள்ளது அந்த இடத்தில் இடதுபுறம் திரும்பி முதல் வலது முதல் இடது என திரும்பினால் கிழக்கு நோக்கிய மொட்டை கோபுரத்துடன் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. நாயக்கர்கள் ஆட்சி நடைபெற்ற காலத்தில் கட்டப்பட்ட கோயில் இதுவாகும். முத்து கிருஷ்ணபுரி என அழைக்கப்பட்டதால் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட கோயிலாக இருக்கலாம். அப்படி என்றால் 1600 களில் கட்டப்பட்டிருக்கலாம். இன்றைக்கு நானூறு ஆண்டுகளை கடந்துள்ளது. ராஜகோபுரம் இல்லாத பெரிய கதவுகள் கொண்ட மொட்டை கோபுரம். அதன் வழி உள்ளே சென்றால் இறைவனின் எதிரில் உயர்ந்த கொடிமரம், ஒரு பலிபீடம் உள்ளது. கொடிமரத்தின் முன்னர் நந்தி மண்டபம் உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கியவர், இறைவி தெற்கு நோக்கியவர் இரு கருவறைகளையும் ஒரு மண்டபம் இணைக்கிறது. இறைவன் சிறிய லிங்க மூர்த்தி அதுபோல் இறைவியும் சிறிய அளவில் உள்ளார். இறைவியின் எதிரில் இதே போல் நந்தி மண்டபம் பலிபீடம் உள்ளது. கருவறை பிரஸ்தரம் வரை கருங்கல் பணியாகவும், அதற்க்கு மேல் துவிதளவிமானம் உள்ளது. கருவறை கோட்டத்தில் தென்முகன் மற்றும் பின் புறம் மகாவிஷ்ணுவும் உள்ளனர். பிரம்மா இருக்க வேண்டிய இடத்தில் வேறுஏதோ ஒரு சிறிய சிலை ஒன்றுள்ளது தென்மேற்கில் விநாயகர் அடுத்து முருகன் சன்னதியும் அதன் வாயிலில் நாகர் சிலை ஒன்றும் உள்ளது. வடமேற்கில் மகாலட்சுமிக்கு சிறிய சன்னதி ஒன்றும் உள்ளது. வடகிழக்கில் நவகிரகம், பைரவர் சனைச்சரன் உள்ளனர். திருக்கோயில் அர்ச்சகர் திரு. சாமிநாதன் அவர்கள் காலை மாலை என இருவேளை பூஜை செய்கிறார். அவரது தந்தைக்கு வயதாகி போனதால் அவரது பணியை ஏற்று நடத்துகிறார். போதுமான வருமானம் மற்றும் கோயில் உபயங்கள் கிடைக்காமல் போனாலும் இவது பணிகள் எம்பெருமானுக்கு தொடர்கின்றன. இவரது வீடு பரங்கிப்பேட்டை- அகரம் எனும் இடத்திலுள்ள ஆதிமூலேஸ்வரர் சிவன்கோயில் சன்னதி தெருவில் உள்ளது. இவரது கைபேசி எண்- 94891 03668 # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000

நிர்வகிக்கப்படுகிறது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பரங்கிப்பேட்டை

அருகிலுள்ள இரயில் நிலையம்

பரங்கிப்பேட்டை

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top