Sunday Nov 24, 2024

அருள்மிகு ஆவுடைநாயகி சமேத சுக்ரீஸ்வரர் திருக்கோயில் குரக்குத்தளி – சர்க்கார் பெரியபாளையம்

முகவரி

அருள்மிகு ஆவுடைநாயகி சமேத சுக்ரீஸ்வரர் திருக்கோயில், (சர்க்கார்) பெரியபாளையம், எஸ். பெரியபாளையம் – அஞ்சல் – 641 607, பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம்.

இறைவன்

இறைவன்: சுக்ரீஸ்வரர் இறைவி : ஆவுடைநாயகி

அறிமுகம்

இது சர்க்கார் பெரிய பாளையம் என்றும் பெரிய பாளையம் என்றும் வழங்குகிறது. இவ்விரண்டுமே ஒன்றே. பேருந்தில் ‘பெரிய பாளையம்’ என்றெழுதப்பட்டுள்ளது. அஞ்சலகப் பெயர்ப் பலகையில் சர்க்கார் பெரிய பாளையம் என்பது சுருக்கமாக எஸ்.பெரியபாளையம் என்றுள்ளது. திருப்பூர் – ஊத்துக்குளி, இதன் மத்தியில் (சர்க்கார்) பெரிய பாளையம் உள்ளது. திருப்பூர் – ஊத்துக்குளி 16 கி.மீ. இதில் 8வது கி.மீ. பெரிய பாளையம் உள்ளது. ஊத்துக்குளியில் இருந்து நகரப் பேருந்து செல்கிறது. (பெரிய பாளையம் என்று கேட்டால்தான் எல்லோருக்கும் தெரியும்). பெரியபாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி – சற்றுப் பின் நோக்கி வந்து, இடப்புறமாகப் பிரியும் சாலையில் 1 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். தனிப் பேருந்தில் வருவோர், ஊத்துக்குளியிலிருந்து வரும்போது பெரியபாளையம் ஊருள் வந்ததும், தொடக்கத்திலேயே வலப்புறமாகப் பிரியும் சாலையில் சென்று கோயிலை அடையலாம். கோயில் வரை பேருந்து செல்லும் – நல்ல தார்சாலை. ஈஸ்வரன் கோயிலுக்கு போகும் சாலை என்று கேட்டால் சொல்வார்கள். (கோயில் ஊருக்கு மேற்கில் 1 கி.மீ. தொலைவில் தள்ளி உள்ளது). தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பில் உள்ள கற்கோயில். முன்னரே தகவல் தெரிவித்து விட்டுச் சென்றால் தான் தரிசனம் கிடைக்கும். இத்தலம் சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள கொங்கு நாட்டு வைப்புத் தலமாகும்.

புராண முக்கியத்துவம்

இறைவன் – சுக்ரீஸ்வரர், இறைவி – ஆவுடைநாயகி. சுற்று மதில் முழுதும் அழிந்து போயுள்ளது. ராஜ கோபுரமில்லை. தொல்பொருள் ஆய்வுத் துறையினரின் அறிவிப்புப் பலகையில் உள்ள கோயிலைப் பற்றிய விவரங்கள் முற்றிலும் அழிந்து போயுள்ளன. கோயிலுள் விநாயகர் – மயில்வாகனர் – மூன்று சிவலிங்கங்கள் – பைரவர், துர்க்கை, சூரியன் ஆகிய சந்நிதிகள் உள்ளன. மூலவர் உயரமான அழகான மூர்த்தி – சதுர ஆவுடையாரில் கம்பீரமான தரிசனம். ஒருகால பூஜை – சிவாசாரியார் வந்து செல்கிறார். பக்கத்தில் அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கித் தனியாக உள்ளது. கோயிலுள் உள்ள ஒரு விளம்பரப் பலகையில், அருள்மிகு ஆவுடைநாயகி சமேத சுக்ரீஸ்வரர் திருக்கோயில் சர்க்கார் பெரியபாளையம் – பெரியபாளையம் (குரக்குத்தளி) அலயத்தின் தேவாரம் – என்றெழுதி, தேவாரப் பாடலை எழுதி வைத்துள்ளனர். கல்வெட்டில் இவ்விறைவன், ‘ஆளுடைய பிள்ளை’ என்று குறிக்கப்படுகிறார். இவ் ஈசனை மக்கள் ‘மிளகீசன்’ என்றும் அழைக்கின்றனர். உடலில் ‘மரு’ உள்ளவர்கள் இப்பெருமானுக்கு மிளகைப் படைத்து, அதில் சிறிதளவு மிளகை எடுத்து வந்து 8 நாள்களுக்கு உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் ‘மரு’க்கள் மறைந்துவிடும் என்று மக்கள் சொல்கின்றனர். சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில் என்பது தொல்பொருள் ஆய்வு முடிவு. முற்காலத்தில் இவ்வூர் முகுந்தாபுரி, முகுந்தைபுரி என்று வழங்கப்பட்டது. தென்புறச் சுவரில் குரங்கு ஒன்று சிவலிங்கத்தை வழிபடும் உருவம் உள்ளது. வடபால் நல்லாறும் தென்பகுதியில் நொய்யல் எனப்படும் காஞ்சி நதியும் பாய்கின்றன. இராவண யுத்தம் முடிந்து, போர்க்களத்தில் அனைவரையும் கொன்ற பாவந்தீர இராமர், இராமேஸ்வரத்தில் வழிபட்டதாக வரலாறு. அவருக்கு உதவியாக இருந்த சுக்ரீவனும், அனுமனும் இம்மண்ணில் இலிங்கம் அமைத்து ஈசனை வழிப்பனராம். இக்கோயிலில் உள்ள ஒரு நந்திக்கு இரண்டு காதுகளும் அறுபட்டுள்ளன. இதற்கு காரணமாகச் சொல்லப்படுவது, நந்தி தேவர், இங்குள்ள தோட்டப் பயிர்களை மேய்ந்த போது, விவசாயி அது கண்டு கோபமுற்று, நந்தியின் இரு காதுகளையும் அறுத்து விட்டாராம். இப்பாவம் அவ்விவசாயியை வழி வழியாக தொடர்வதாக சொல்லப்படுகிறது. இங்குள்ள விவசாயி ஒருவரின் குடும்பத்தில் ஒருவர் வாய் பேசாதவராகப் பிறப்பது வழி வழியாகத் தொடர்ந்து இருந்ததாம். இதற்குப் பிராயசித்தமாக, அருகில் ஒரு நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டு, அதன் மூலம் அக்குறை நீங்கியதாம். உத்தராயணமும் தட்சிணாயணமும் சந்திக்கும் – வேளையில் சூரிய ஒளி சுவாமி மீது படுகிறதாம்.

சிறப்பு அம்சங்கள்

உத்தராயணமும் தட்சிணாயணமும் சந்திக்கும் – வேளையில் சூரிய ஒளி சுவாமி மீது படுகிறதாம்.

காலம்

1000 – 2000

நிர்வகிக்கப்படுகிறது

`

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஊத்துக்குளி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருப்பூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top