Sunday Nov 24, 2024

அருள்மிகு அம்மநாத சுவாமி திருக்கோயில், சேரன்மகாதேவி (சந்திரன்)

முகவரி

அருள்மிகு அம்மநாதர் திருக்கோயில், சேரன்மகாதேவி நகர் மற்றும் வட்டம், திருநெல்வேலி மாவட்டம், தொலைபேசி எண்-94422 26511

இறைவன்

இறைவன்: அம்மநாதர் இறைவி: ஆவுடையம்மன்

அறிமுகம்

சேரன்மகாதேவி அம்மைநாதர் கோயில் தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியிலுள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் நவகைலாயங்களில் இரண்டாவதாக சந்திரனுக்குரியத் தலமாகக் கருதப்படுகிறது. இத்தலத்தின் மூலவர் கைலாசநாதர், அம்மைநாதர் என்றும், அம்மன் ஆவுடைநாயகி என்றும் அழைக்கப்படுகின்றார்.

புராண முக்கியத்துவம்

சிவதரிசனம் பெற விரும்பிய உரோமச முனிவர் அகத்தியரின் ஆலோசனைப்படி தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை இட்டார். அதில் இரண்டாவது மலர் இத்தலத்தில் கரை ஒதுங்கியது. இங்கு உரோமசர் லிங்க பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார். பிற்காலத்தில் அந்த லிங்கம் ஒரு அரசமரத்தின் கீழ் இருந்தது. இப்பகுதியில் வசித்த சகோதரிகளான சிவபக்தைகள் இருவர் நெல் குத்தி அரிசி வியாபாரம் செய்து வந்தனர். தினமும் இத்தல லிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கிய பின்பே தங்கள் வேலையை துவங்குவர். இந்த லிங்கம் கோவிலில் இல்லாமல் மரத்தடியில் யாராலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறதே என்று ஆதங்கப்பட்டு சிவனுக்கு கோவில் கட்ட நினைத்தனர். ஆனால் அவர்களிடம் போதிய வருமானம் இல்லை. அவர்கள் தங்களது உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை சேர்க்க ஆரம்பித்தனர். அவர்களது பக்தியை கண்டு மகிழ்ந்த சிவன் ஒருசமயம் அடியார் வடிவில் அப்பெண்களின் வீட்டிற்கு சென்றார். அவரை வரவேற்ற சகோதரிகள் உபசரித்து உணவு பரிமாறினர். அப்போது வீட்டில் விளக்கு எரியவில்லை. அதை சுட்டிக்காட்டி மங்களம் இல்லாத இவ்வீட்டில் நான் சாப்பிடமாட்டேன் என்று எழுந்தார். சகோதரிகள் பதறிப்போய் அவசரத்தில் விளக்கை தேடினர். விளக்கு தென்படாததால் சமையலுக்கு வைத்திருந்த தேங்காயை உடைத்து அதில் நெய்விட்டு விளக்கேற்றினர். மகிழ்ந்த சிவனடியார் சாப்பிட்டுவிட்டு சுயரூபத்தில் காட்சி தந்தார். அதன்பின்பு அவர்களது இல்லத்தில் செல்வம் பெருகியது. அதைக் கொண்டு இங்கு கோவில் எழுப்பினர்.

நம்பிக்கைகள்

அகத்திய முனிவரின் சீடர்களில் முக்கியமானவரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பி தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டதாகவும். அதற்கு அகத்திய முனிவரும் தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று சொல்லி 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டதாகவும் அந்த மலர்களை தொடர்ந்து சென்ற உரோமச முனிவரும் தனது குரு கூறியபடி வழிபட்டு முக்தி அடைந்தார் என்றும் அப்படி அம்மலர்கள் கரை ஒதுங்கிய இடங்கள் தான் இப்போது நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுவதாகவும் இத்தலங்களின் வரலாறு கூறுகின்றது.

சிறப்பு அம்சங்கள்

இத்திருக்கோயிலை வழிபடுவது தஞ்சை அருகில் உள்ள திங்களூர் திருக்கோயிலை வழிபடுவதற்கு சமமாகும் என கூறப்படுகிறது.

திருவிழாக்கள்

இக்கோவிலில் ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருவாதிரைத் திருநாளும் சிவராத்திரி விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

காலம்

2000

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருநெல்வேலி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top