Saturday Nov 16, 2024

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில்

வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது.

பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது. ராஜராஜ சோழ மன்னர் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேச்சுவரர் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழ மன்னரின் வருகை அவ்வப்போது நிகழ்வது உண்டு.

காயத்துடன் சிவலிங்கம் :

ஒருமுறை அவரது வருகையையட்டி மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி புல் செதுக்கும் பணி நடைபெற்றது. அந்த தருணத்தில் ஓரிடத்தில் எதிர்பாராது ரத்தம் பீறிட்டெழுந்தது. உடனே பணியாட்கள் மன்னரிடம் செய்தியை தெரிவித்தனர். மன்னர் வந்து பார்த்தபோது ரத்தம் பீறிடுவது நின்று தடைபட்ட தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது.

அந்த சிவலிங்கம் காணப்பட்ட இடத்திலேயே கோவில் கட்ட நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜராஜ சோழனால் குறிப்பிட்ட இடத்தில் எழுப்பப்பட்டதே ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இன்றும் லிங்கத்தின் தலைப்பகுதியில் பார்த்தால் மண்வெட்டி பட்ட காயம் தெரியும். கோவில் மூலஸ்தானத்தில் தீபாராதனை நடை பெறும்போது கற்பூர ஜோதி லிங்கத்தில் பிரதிபலிக்கும். இக்காட்சி மூலவர் ஜோதி வடிவானவர் என்றும், சுத்தரத்தினேஸ்வரர் தூயமாமணி என்றும், மாசிலாமணி என்றும் அழைக்கப்படுகிறார்.

அப்பர் பெருமான் தனது ஆன்மிக சுற்றுப்பயணத்தின் போது ஊட்டத்தூருக்கு செல்ல நினைத்து 5 கிலோ மீட்டர் எல்லையிலேயே திகைத்து மகிழ்ந்து நின்று விட்டார். காரணம், அந்த எல்லையில் இருந்து பார்த்தபோது வழியெல்லாம் சிவலிங்கங்கள் இருப்பதாக உணர்ந்தார். சிவலிங்கத்தின் மீது அவரது பாதங்கள் படுவது சிவ குற்றம் என எண்ணி, எல்லையில் நின்றபடியே ஊட்டத்தூர் பெருமானை நினைத்து பதிகம் பாடியருளினார். இவ்வாறு எல்லையில் இவர் பாடியதால் அந்த இடம் பாடாலூர் என அழைக்கப்பட்டது.
இந்திரன் மீண்டும் பதவி பெற்ற திருத்தலம் :

ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவில் இது. சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர். இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.

அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அப்படி பிளக்கக்கூடிய கற்கள்தான் பஞ்சநதன பாறை. ஆதலால் இவர் பஞ்சநதன நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு என்ன சக்தி என்றால், சூரியன் காலையில் புறப்படும்போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக்கூடிய சக்தி இங்கு உள்ள நடராஜருக்கு உண்டு.

ஆதலால் நாம் இவரை என்ன நினைத்து வணங்குகின்றோமோ அது அப்படியே நடக்கிறது. பிரம்மாவுக்கு இந்த ஊரில்தான் சாப விமோசனம் கிடைத்தது. ஆதலால் சிவன் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது.

மேற்கூரையில் நவக்கிரகங்கள்:

ஊட்டத்தூர் சுத்தரெத்தினேஸ்வரர் கோவிலில் உள்ள இன்னொரு சிறப்பு அம்சமும் உள்ளது. அது கோவில் கொடி மரம் அருகே மேற்கூரையில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் செதுக்கப்பட்டு அவை பூமியை நோக்கி பார்க்கும்படி உள்ளது. அதன் அருகிலேயே 9 கிரகங்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

பொதுவாக கோவில்களில் நவக்கிரகங்கள் மற்றும் ராசிகளின் அதிபதிகள் தனித்தனி சன்னதியாக தான் இருக்கும். ஆனால் ஊட்டத்தூர் கோவிலில் இவை அனைத்தும் பூமியை நோக்கி இருப்பதால் அதன் அடியில் வைத்து செய்யப்படும் யாக பூஜைகள் அனைத்திற்கும் உடனடி பலன் கிடைக்கும். எந்த ராசியை சேர்ந்தவர்களும் இதன் மூலம் முழு பயன் அடைய முடியும்.

கிழக்கு நோக்கி நந்தி :

மற்ற சிவ தலங்களில் இல்லாத விசேஷமாக இங்கு நந்திதேவர் கிழக்கு முகமாக படுத்து உள்ளார்.

இந்த கோவிலில் உள்ள துர்க்கை கோரைப்பற்கள் வெளியில் தெரியுமாறு காட்சி அளிக்கிறார். இந்த துர்க்கைக்கும், விஷ்ணு துர்க்கைக்கும் 11 வாரங்கள் எலுமிச்சம்பழ மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி, வடைமாலை சார்த்தி, சர்க்கரைப்பொங்கல் அல்லது பாயாசம் வைத்து வழிபட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இந்த சிவாலயத்தில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு ஒரு கோடி புண்ணியம் கிடைப்பதாக அகஸ்தியர் பெருமான் தெரிவித்துள்ளார்.

நோய் தீர்க்கும் தீர்த்தம் :

உலகின் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் பிரம்மா ஊட்டத்தூருக்கு கொண்டு வந்து பிரம்ம தீர்த்தத்தில் சேர்த்து உள்ளார். இதனால் இந்த பிரம்ம தீர்த்த நீரை எடுத்துச்சென்று நோயுற்றவர்களின் உடலில் தெளித்தால் அவர்கள் குணமடைவதாக கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன.

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் உள்ளது.

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top