அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருமுக்கூடலூர்
முகவரி
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், குழையூர் அஞ்சல் – 609 805, கோமல் வழி, நாகப்பட்டினம் மாவட்டம்.
இறைவன்
இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: அபிராமி
அறிமுகம்
தற்போது குழையூர் என்று வழங்குகிறது. மயிலாடுதுறையிலிருந்து கோமல் செல்லும் பேருந்தில் பெரட்டக்குடி வந்து அங்கிருந்து வரலாம். ஊரில் பெயர்ப்பலகையில் கொழையூர் என்று எழுதியுள்ளார். (தேரழுந்தூருக்கு அருகில் வீரசோழன் ஆற்றுக்கு வடகரையில் உள்ள ஊர்). மதிற்சுவருடன் கூடிய ஒரு முகப்பு வாயிலுடனும், ஒரு பிராகாரத்துடனும் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் கடந்து உள்ளே நுழைந்தவுடன் நேரே முன் மண்டபம் உள்ளது. முன் மண்டபத்தினுள் தெற்கு நோக்கி அம்பாள் அபிராமி சந்நிதி அமைந்துள்ளது. நேரே மூலவர் சந்நிதி உள்ளது. மூலவர் அகத்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மூலவர் சந்நிதிக்கு முன் நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. மேற்குப் பிராகாரத்தில் இரட்டை விநாயகருடன் கூழையர் (அகத்தியர்) உள்ளார். அதையடுத்து வள்ளி, தெய்வானை சமேத முருகர் சந்நிதியும், காசி விஸ்வநாதர், விசாலாட்சி சந்நிதியும் உள்ளது. பைரவரும் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். இந்தக் கோயில் வளாகத்தினுள் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் தனிக்கோவில் இறைவன் கோவிலுக்கு வலதுபுறம் அமைந்துள்ளது. இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழநாட்டு வைப்புத் தலமாகும்.
புராண முக்கியத்துவம்
கைலாயத்தில் சிவபெருமானுக்கு திருமணம் நடந்தபோது அநேகம் பேர் அங்கு கூடியிருந்தபடியால், பூமியின் வடபகுதி தாழ்ந்தும் தென் பகுதி உயர்ந்தும் போய்விட்டது. அதனை சரிசெய்ய அகத்திய முனிவரை தென் பகுதிக்கு செல்லும்படி சிவபெருமான் கேட்டுக்கொள்ள, அகத்தியரும் தென் பகுதிக்கு வந்து உலகம் சமநிலை அடையச் செய்தார் என்பது புராணம். அப்படி அகத்தியர் தென் பகுதியை சீர்படுத்துவதற்காக இமய மலையிலிருந்து தென் பொதிகை நோக்கி சென்ற போது வழியில் இருந்த இந்தக் கோயிலில் தங்கி இறைவனை வழிபட்டதாக வரலாறு. அகத்தியர் வில்வலன் வாதாபியின் சூழ்ச்சியால் புலால் உண்டபாவந்தீர தேரழுந்தூர் வேதபுரீசுவரை வழிபட வந்தபோது இத்தலத்தில் தங்கிப் பூசித்த தலம் என்றும் கூறப்படுகிறது. கூழையர் என்றால் அகத்தியரைக் குறிக்கும். கூழையர் (அகத்தியர்) வழிபட்டதால் இத்தலம் கூழையூர் என்று பெயர் பெற்றது. இந்த ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்று 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குன்னியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி