Saturday Jan 18, 2025

அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், அரித்துவாரமங்கலம் போஸ்ட்- 612 802. வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம். போன்: + 91-4374-264 586, 4374-275 441, 94421 75441.

இறைவன்

இறைவன்: பாதாளேஸ்வரர், பாதாள வரதர் இறைவி: அலங்காரவல்லி

அறிமுகம்

அரித்துவாரமங்கலம் பாதாளேசுவரர் கோயில் (அரதைப்பெரும்பாழி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 99ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் திருமால் பன்றி வடிவங் கொண்டு பள்ளம் பறித்தார் என்பது தொன்நம்பிக்கை.

புராண முக்கியத்துவம்

பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தன்னில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்படுகிறது. இதில் சிவனது பாதத்தையும், திருமுடியையும் யார் முதலில் தரிசிக்கிறார்களோ அவர்களே பெரியவர் என்ற நிபந்தனையில் போட்டி ஆரம்பமாகிறது. பிரம்மா அன்னப்பறவையில் ஏறி திருமுடியை தரிசிக்க கிளம்புகிறார். ஆனால் திருமுடி தரிசனம் கிடைக்கவில்லை. அப்போது சிவனின் தலையிலிருந்து தாழம்பூ கீழே வந்து கொண்டிருந்தது. தாழம்பூவை பார்த்த பிரம்மா, தான் சிவனின் திருமுடியை தரிசித்ததாக பொய் கூறும்படி சொன்னார். தாழம்பூவும் ஒத்துக்கொண்டது. இதையறிந்த சிவன் தாழம்பூவை பூஜைக்கு உபயோகப்படுத்தக்கூடாது என்றும், பிரம்மனுக்கு பூமியில் கோயில் இருக்க கூடாது என்றும் சபித்தார். விஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியை குடைந்து சிவனின் திருவடியை பார்க்க முயன்றார். ஆனால் முடியவில்லை. தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். விஷ்ணு இத்தலத்தில் தான் பூமியை துவாரம் போட்டு சிவனின் திருவடி தரிசனம் தேடினார். எனவே தான் இத்தலம் – ஹரி(விஷ்ணு) துவார (பூமியை துளையிடுதல்) மங்கலம்(ஊர்)- “அரித்துவாரமங்கலம்’ ஆனது.

நம்பிக்கைகள்

திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் அலங்காரவல்லியை தரிசித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 162 வது தேவாரத்தலம் ஆகும். சிவனின் திருவடி தரிசனம் காண விஷ்ணு பூமியை தோண்டிய பள்ளம் இன்றும் மூலஸ்தானத்தில் உள்ளது. இதை கல்வைத்து மூடியுள்ளார்கள். சிவன் பன்றியின் கொம்புகளுள் ஒன்றை முறித்து தன் மார்பில் அணிந்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. சிவனின் “பஞ்ச ஆரண்ய (காடு)’ தலங்களில் இதுவும் ஒன்று. திருக்கருகாவூர் உஷகாலம், அவளிவநல்லூர் காலசந்தி, அரித்துவாரமங்கலம் உச்சிகாலம், ஆலங்குடி சாயரட்சை, திருக்கொள்ளம்புதூர் அர்த்தஜாம பூஜை. இந்த 5 தலங்களையும் ஒன்றாக தரிசிப்பது சிறப்பு. அரித்துவாரமங்கலத்தில் உள்ள இறைவனை தரிசித்தால் “ஹரித்துவார்’ தரிசித்த பலன் கிடைக்கும் என்பர். பாதாள ஈஸ்வரரை தரிசித்தால் கடன் தொல்லை நீங்கும். அம்மன் துர்க்கை அம்சமாக இருப்பதால் துர்க்கைக்கு தனி சன்னதி கிடையாது. சிவனே நவகிரகங்களுக்கு அதிபதியாக இருப்பதால் நவகிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. இவரை தரிசித்தாலே அனைத்து தோஷங்களும் விலகும். சிவனுக்கு வலது பக்கம் அம்மன் கிழக்கு நோக்கி இருப்பதால் இதை “கல்யாண கோலம்’ என்பார்கள். இங்குள்ள தெட்சிணாமூர்த்தி சிறப்பு. சுமார் 410 வருடங்களுக்கு பின் 2006ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இத்தலத்தில் மட்டும் 7 விநாயகர் அருள்பாலிக்கிறார்கள்.

திருவிழாக்கள்

வைகாசி விசாகம், மார்கழி திருவாதிரை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தவிர சிவனது அனைத்து திருவிழாக்களும் கொண்டாடப்படுகிறது.

காலம்

1000 -2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அரித்துவாரமங்கலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top