அம்மாபேட்டை கொக்கேரி நடராஜர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
கொக்கேரி நடராஜர் திருக்கோயில்,
கொக்கேரி, அம்மாபேட்டை,
தஞ்சாவூர் மாவட்டம் – 613504.
இறைவன்:
நடராஜர்
இறைவி:
சிவகாமசுந்தரி
அறிமுகம்:
புராதான சிவாலயங்களில் அனைத்திலும் நடராஜருக்கு தனி சன்னதி அமைந்திருக்கும். ஆனால் அந்த வடிவத்திற்கு தனியாக கோயில்கள் அமைந்திருப்பது அபூர்வம். அப்படி அமைந்திருக்கும் கோயில்களில் ஒன்று தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே இருக்கும் கொக்கேரி நடராஜர் கோவில். சிறு மண்டபமாக இருந்த கோயிலை புதிய கருங்கல் திருப்பணி அமைத்திட ஆலயம் தற்போது பாலாலயம் செய்து இருக்கிறார்கள். தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது கொக்கேரி. அம்மாபேட்டையில் இருந்து ஆட்டோ வசதிகளும் உள்ளன. நடந்தும் கோயிலுக்கு செல்லலாம்.
புராண முக்கியத்துவம் :
சோழ மன்னன் ஒருவன் அழகிய நடராஜர் சிலையை உருவாக்கும் படி கட்டளையிட்டான். சிற்பிகள் எவ்வளவு செய்தும் குறை சிலையிலிருந்ததால் சோழன் விக்கிரகத்தை முடிக்காவிட்டால் சிரச்சேதம் செய்துவிடுவேன் என்று சினத்துடன் கூறி சென்றான். அதனால் சிற்பிகள் தவிப்புடம் இருந்த சமயத்தில் தாகம் பசி என்று கேட்டு முதியவரும் மனைவியும் வந்திருந்தனர். ஏற்கனவே வருத்ததிலிருந்த சிற்பிகள் இவர்கள் மீதான எரிச்சலில் உலைக் களத்தில் ஏது உணவு? உணவுகள் வேண்டுமானால் உருக்கிய உலோகத்தை அருந்துங்கள் என சீற்றத்தோடு சொன்னார்கள். ஆனால் கொஞ்சமும் தயங்காமல் அந்த உலோக குழம்பினை எடுத்து குடிக்க அவரும், அவர் மனைவியும் அப்படியே நடராஜர் திருமேனியாகவும், சிவகாமி அம்மையாகவும் மாறிவிட சிலிர்த்துப் போனார்கள் சிற்ப்பிகள். இப்படி இறைவனே விக்ரகமாக நின்ற கோனேரிராஜபுரத்தினைப் போலவே இந்த கொக்கேரியிலும் அரியதொரு திருவடிவாகத் திகழ்கிறார் நடராஜப் பெருமான்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் வாழ்ந்த சித்தர் ஒருவர் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்து வழிபட்ட நடராஜர் இவர். அவருக்குப்பின் ஊர் மக்கள் இந்த சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு தொடர்ந்து பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். பிற்காலத்தில் மங்கள விநாயகர் இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.
நம்பிக்கைகள்:
நடராஜரை வழிபட்டால் மணப்பேறு, மகப்பேறு கிட்டுகிறது. கடன் தொல்லை நீங்கி வாழ்வில் மகிழ்ச்சிக்கும் குறை இருக்காது என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.
திருவிழாக்கள்:
மார்கழி மாதம் திருவாதிரை நாள் தொடங்கி ஐந்து நாட்களுக்கு திருவாதிரை பெருவிழா கொண்டாடப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்திலேயே நடராஜருக்கு 5 நாட்கள் திருவிழா நடைபெறுவது இந்த கோயிலில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனித்திருமஞ்சன விழா இங்கு மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்று காலையிலிருந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாலையில் விசேஷ பூஜைகள் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் வீதிஉலா காட்சி நடைபெறுகிறது. விழா நாளன்று இரவு ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி மற்றும் மாத சங்கடஹர சதுர்த்தி நாட்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொக்கேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
அம்மாப்பேட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி