அனந்தநல்லூர் அனந்தீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
அனந்தநல்லூர் அனந்தீஸ்வரர் சிவன்கோயில்,
அனந்தநல்லூர், நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 609703.
இறைவன்:
அனந்தீஸ்வரர்
இறைவி:
ஆனந்தவல்லி
அறிமுகம்:
ஒரே திருக்கோயிலில் சிவனும் பெருமாளும் அருளும் தலங்கள் பல உண்டு. ஆனால், ஒரே கருவறையில் அவர்கள் இருவரும் அருளும் கோயில் அபூர்வம். நாகை மாவட்டம், திட்டச்சேரி அருகேயுள்ள அனந்தநல்லூர் கிராமத்தில், ஆனந்தவல்லி அம்பாள் சமேத அனந்தீஸ்வரர் திருக்கோயிலில், ஹரனையும் ஹரியையும் ஒரே கருவறையில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கிறது! சோழர்கள் காலத்தில் அந்தணர்கள் அதிகம் வசித்த இவ்வூரில், மிகப் பெரிய திருக்கோயிலாகத் திகழ்ந்து, காலப்போக்கில் சிதிலமுற்றுப்போய் சமீபத்தில் அன்பர்கள் கைங்கர்யத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. கோயில் சிறிய கோயில் தான் எனினும் சிறப்புக்கள் பெரிது.
கிழக்கு நோக்கிய கோயில், இறைவன் கிழக்கு நோக்கிய கருவறையும், இறைவிக்கு கருவறை இல்லை, ஓர் பெரிய மாடம் போன்ற அமைப்பில் தெற்கு நோக்கியுள்ளார். கருவறை வாயிலில் இடப்புறம் விநாயகரும் வலப்புறத்தில் முருகனும் உள்ளனர். பெரிய காலபைரவர் மேற்கு நோக்கி அருள்கிறார். இறைவன் எதிரில் நந்தி பலிபீடம் உள்ளது. கருவறை கோஷ்டங்கள் ஏதுமில்லை. கோமுகம் அருகில் சண்டேசர் சன்னதி உள்ளது. வடமேற்கில் பெரிய வில்வம் ஒன்று தழைத்தோங்கி நிற்கிறது. காலத்தால் முற்ப்பட்டது இக்கோயில் ஆகவே, இங்கு நவகிரக சன்னதி இல்லை..
இறைவன் தன்னம்பிக்கை இழக்காத வாழ்வினை அளிப்பபவர். அம்பிகை ஆனந்த வாழ்வை அளிப்பவள் என்பதால் ஆனந்தவல்லி. பெரிய உருகொண்ட பைரவர் உங்களுக்கு தைரியம் தந்து அருள்பாலிப்பவர். இங்கு பெருமாளின் பெயர் அனந்தநாராயணர் இவர் வழிபட்ட இறைவன் என்பதால் அனந்தீஸ்வரர் என பெயர் பெற்றார். இத்தலத்துக்கு வந்து சிவனையும் பெருமாளையும் ஒருசேர வணங்கும் பாக்கியம், உங்களுக்கு கிடைக்க சற்றே நேரம் ஒதுக்குங்கள். நன்னிலம் – திருமலைராயன்பட்டினம் செல்லும் சாலையில், கொந்தகை பேருந்து நிலையத்தில் இறங்கினால், வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் இந்தக் கோயில் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
தசாவதாரம் எடுத்து பராக்கிரமங்கள் பல புரிந்த மகாவிஷ்ணு, தனக்கு ஆத்மபலம் குறைந்து வருவதை உணர்ந்தார். ஆகவே, தன் குருவான சுத்தவாக்கிய ரிஷியைச் சந்தித்து, மீண்டும் ஆத்மபலம் – ஆத்மஞானம் பெறுவதற்கான வழியைக் கேட்டார். பூவுலகில் அனந்தநல்லூரில் சுயம்பு லிங்கமாக அருளும் சிவனாருக்கு ஒரு மண்டல காலம் வில்வார்ச்சனை செய்து, தவம் இயற்றி வந்தால் ஆத்மபலம் அடையலாம்’ என்றார் ரிஷி. அதன்படி மகாவிஷ்ணு இங்கு வந்து வழிபட்டு பலனடைந்தார் என்கிறது தலவரலாறு.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொந்தகை
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி