ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில்
ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன், பெருமாள் கோவில்கள் மற்றும் மணிமுக்தா அணை ஆகியவற்றை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டுமென பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
அர்த்தநாரீஸ்வரர் கோவில்ரிஷிவந்தியத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மன்னர் காலத்தில் கட்டப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் தேனபிஷேகம் மிகவும் சிறப்பு பெற்றது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் முகூர்த்த தினங்களில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும்.கோவிலை சுற்றி பல்வேறு இடங்களில் குளங்கள் உள்ளன. ஆண்டு தோறும் இக்கோவிலில் தேர் திருவிழா, சனி பெயர்ச்சி நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.
தமிழர்களின் கட்டட கலைக்கு எடுத்துக்காட்டான யாழி சிலை (சிங்கத்தின் வாயில் உள்ள உருளை வடிவக்கல்லை வெளியில் எடுக்க முடியாது) இங்குள்ளது.அரங்கநாத பெருமாள் கோவில்திருவரங்கம் கிராமத்தில் கிருத யுகத்தில் கட்டப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. நவபாஷனத்தால் உருவாக்கப்பட்ட பெரிய அளவிலான பெருமாள் சிலையும், கோவில் வளாகத்தில் உள்ள நெற்களஞ்சியமும் இக்கோவிலின் தனி சிறப்பாகும்.
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்னரே இக்கோவில் கட்டப்பட்டுள்ளதால் ஆதிதிருவரங்கம் என அழைக்கப்படுகிறது. கோவிலுக்கு அருகே குளம் மற்றும் தென்பெண்ணை ஆறு ஆகியவை உள்ளது. ஆண்டுதோறும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த இரண்டு கோவில்களும் பழங்கால தமிழர்களின் கட்டட கலையையும், மன்னர் கால வரலாற்றையும் நினைவு படுத்தும் வகையில் உள்ளன.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் மாவட்ட சுற்றுலா தல அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் திருவரங்கத்தில் உள்ள அரங்கநாத பெருமாள் கோவிலை ஆய்வு செய்து பூங்கா ஆகியவை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, சுற்றுலா தலமாக அறிவிப்பதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என மக்களிடம் கூறினர்.
ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. பிரசித்து பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில், அரங்கநாத பெருமாள் கோவில் ஆகியன முறையான பராமரிப்பின்றி வீணாகி வருகின்றது.மணிமுக்தா அணைசூளாங்குறிச்சியில் 1969ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட மணிமுக்தா அணை உள்ளது. இந்த அணையில் சேமிக்கப்படும் தண்ணீர் மூலம் 10க்கும் மேற்பட்ட கிராம ஏரிகள் நிரம்புவதுடன், 5,493 ஏக்கர் பரப்பிலான விளை நிலங்கள் பயன்பெறுகின்றன.கடந்த மூன்று வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட புதிய ெஷட்டர்கள் பொருத்தும் பணியில், பூங்கா அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டது.
பூங்கா அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.புதியதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவான நிலையில், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள இரண்டு கோவில்களையும், மணிமுக்தா அணையையும் சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டுமென பொது மக்கள் அரசிற்கு கோரிக்கை வைக்கின்றனர்.