Friday Nov 15, 2024

ரூ.2,000 கோடி மதிப்பு நிலம் ஆக்கிரமிப்பு:

சேலம்: சேலம் சுகவனேஸ்வரர்
கோவிலுக்கு சொந்தமான, 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் ஆக்கிரமிப்பில்
சிக்கியுள்ளன. அதை மீட்கும் முயற்சியில், அதன் நிர்வாகம் அலட்சியமாக செயல்படுவதாக
குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில்,
சேலத்தில் பழமையான சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது.
        அதன் கட்டுப்பாட்டில் ராஜகணபதி; காசி விஸ்வநாதர்; ஓமலுார்,
பாகல்பட்டியில் சென்றாய பெருமாள், புஜங்கீஸ்வரர் கோவில்கள் உள்ளன.அந்த
கோவில்களுக்கு பல நுாறு ஏக்கர் நிலம், கட்டடங்கள், வீடுகள், காலிமனைகள் உள்ளன. 
இது குறித்து, ஆலயம் வழிபடுவோர் சங்க மாநில தலைவர்
ரமேஷ் கூறியதாவது:சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக சேலம் நகரில், 100 ஏக்கருக்கு
மேல் நிலம் உள்ளது. அதில் வீடு, பள்ளிக்கூடம் என ஆக்கிரமித்து கட்டடங்கள்
கட்டப்பட்டு உள்ளன. இது குறித்து அறநிலையத்துறை தணிக்கையாளர்கள் சுட்டிக்காட்டியும்
நிலத்தை மீட்க வில்லை.குத்தகைதாரர்கள், அறநிலையத்துறை அனுமதியின்றி கட்டடம்
கட்டுகின்றனர். ஆக்கிரமித்து வீடுகள் கட்டியதற்கு வாடகை வரன் முறைப்படுத்துவதில்
ஊழல் நடக்கிறது.
அறநிலையத்துறை சட்டத்தில் வாடகை வரன்முறை என்பதே
கிடையாது.சேலம் அழகாபுரத்தில், 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் உள்ளிட்ட
சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளதால், கோவிலுக்கு முறையான வருமானம் கிடைப்பதில்லை.
இதை மீட்க, கோவில் நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கோவில் சொத்து விபரங்களை, ‘சர்வே’ எண்ணுடன், தற்போதைய
மதிப்பு, ஆக்கிரமிப்பாளர், வாடகை பாக்கி நிலுவை வைத்துள்ளவர் உள்ளிட்ட விபரங்களை
வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும்.ஆக்கிரமிப்பாளர் மீது எந்த மாதிரி நடவடிக்கை
எடுக்கப்பட்டது; வழக்கு எவ்வளவு காலம் நிலுவையில் உள்ளது என்பதையும் தெரியப்படுத்த
வேண்டும்.
 

நடவடிக்கை
சென்றாய பெருமாள், புஜங்கீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம்
ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த நிலத்தை அளவீடு செய்து, அதன் தற்போதைய மதிப்பை
வெளியிட வேண்டும்.மேலும் ஆக்கிரமிப்பாளர்களிடம் சொத்துகள் மீட்கப்படுகின்றன.
ஆனால், நிலுவை தொகையை வசூலிப்பதில்லை. 
இதுதவிர கோவிலுக்கு சொந்தமான நிலம் குறித்து துல்லிய தகவலும் இல்லை. ஆக்கிரமிப்பு
நிலத்தை மீட்டு, வாடகை வரன்முறை செய்து நிலங்களை முறையான குத்தகைக்கு விட
வேண்டும்.இதற்கு உயர் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழு நியமித்து, உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். கோவில் அதிகாரிகள் கூறியதாவது:அழகாபுரம் புதுாரில், 102.61 ஏக்கர்
புன்செய் நிலம், 10.19 ஏக்கர் நன்செய் நிலம் உள்ளது. அவற்றில் குத்தகை
அடிப்படையில், 31 பேர் உள்ளனர். கோவில் நிலத்தை ஆக்கிரமித்து, 100க்கும் மேற்பட்ட
வீடுகள் கட்டப்பட்டுள்ளன.கோவிலை ஒட்டியுள்ள சுப்பராயன் தெருவில், 6,600 சதுரடி
நிலத்தை, ஒருவர் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தார். அவரிடமிருந்து நிலம்
மீட்கப்பட்டது. அவர், 1.09 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.தாதம்பட்டி, அம்மாபேட்டையில், 12.35 ஏக்கரில், 420 வீடுகள் ஆக்கிரமித்து
கட்டப்பட்டு உள்ளன. சேலம், முதல் அக்ரஹாரத்தில், 2,147 சதுரடி
நிலம் வணிக வளாகமாக இருந்தது; சில மாதங்களுக்கு முன் மீட்கப்பட்டது.இரண்டாவது
அக்ரஹாரத்தில், 4,208 சதுரடி நிலத்தில், எட்டு ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன.சென்றாய
பெருமாள், புஜங்கீஸ்வரர் கோவிலுக்கு, ஓமலுார், பாகல்பட்டி, பச்சனம்பட்டி உள்பட, 17
கிராமங்களில், 300 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது. அதில், 83.64 ஏக்கர் நிலத்தை தனிநபர்கள்
ஆக்கிரமித்து, பட்டாவாக மாற்றியுள்ளனர். பட்டாவை கோவில் பெயருக்கு மாற்ற நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. தனிநபர் பெயரில் இருந்த, 130 ஏக்கர்நிலம், கோவில் வசம்
கொண்டுவரப்பட்டதுமொத்தமாக கண்டுபிடிக்கப்பட்ட, 213
ஏக்கர் நிலம் போக, மீதி நிலம் எந்த இடங்களில் உள்ளன என கண்டுபிடித்து, அதை கோவில்
நிலமாக மாற்றப்படும்.ஒட்டுமொத்தமாக சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம்
மீட்கப்படும். அதில் முழுமையான வருவாய் கிடைக்கவும் நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ், நீதிமன்றத்தில்
வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. வழக்குகள் முடிந்தால் கோவிலுக்கு வருவாய் அதிகரிக்க
வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top