Friday Nov 15, 2024

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள்

சிற்பங்கள் சொல்லும் அற்புதக் கதைகள் என்ற இந்தத் தொடர் வெறும்
கதைகளைச் சொல்வதற்கு மட்டுமல்ல. இப்படிப்பட்ட செல்வப் புதையலைப் பெற்ற மண்ணில் வாழ்கிறோம்
என்ற பெருமையை உங்களுக்கு உணர்த்துவதற்கும், உணர்ந்த பின் அந்தத் தலங்களுக்குச் செல்லவும்
ரசிக்கவும் ரசித்தவற்றைப் பிறருக்கும் கூறி மகிழவும் முக்கியமாக, அடுத்த தலைமுறைக்கு,
நமது பாரம்பரியத்தின் சிறப்புகளைக் கூறி வளர்த்தெடுக்கவும் செய்யப்படும் சிறிய முயற்சி
இது.

பொதுவாகக் கண்ணனையும், கந்தனையும், குழந்தைக் கோலங்களில் பார்த்திருக்கிறோமே
தவிர, விநாயகரை இப்படிக் குழந்தை வடிவில், அதுவும் சிற்பங்களில் பார்க்க முடிவதில்லை.
எனக்குத் தெரிந்து வேறெங்கும் இதுபோல் இல்லை. இந்த அழகிய சிற்பங்கள் நம் தமிழகத்தில்
வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இருக்கின்றன. கோட்டை வாயில் வழியே, கோயிலில்
நுழைந்தவுடன் வலது பக்கத்தில் உள்ள சிறிய மண்டபத்தின் தூண்களில் காணப்படுகின்றன. சிலர்
கூறுவதுபோல் தலை துண்டிக்கப்பட்டு யானை முகம் பொருத்தப்பட்ட பின் இப்படித் தவழ்வது
பொருத்தமற்றது. – காவலுக்கு ஒரு குழந்தை நிற்பதுமில்லை, அது தகப்பனாரைத் தடுப்பதும்
இல்லை.

உண்மைக்
கதை இதுதான்
உமையம்மையும் சிவபெருமானும் ஒருநாள் உய்யான வனத்தில் உலவி
வரும்பொழுது அங்கிருந்த சித்திர மண்டபத்தில் பிடியும், களிறுமான படங்கள்
வரையப்பட்டிருந்தனவாம். அதை உற்று நோக்கிய உமைக்குத் தாம் பிடியாகவும்
சிவனுக்குக் களிறாகவும் தோன்ற விநாயகப் பெருமான் அங்கே உதித்தாராம். அகரமான
சிவனும் உகரமான உமையும் இப்படி காதல் மடப்பிடியாகவும், களிறாகவும் மாற, இரண்டும்
சேர்ந்த ‘ஓம்’ என்ற பிரணவமான பிள்ளையார் தோன்றிட அருள் புரியலானார்.

இதில் நாம் திருஞான சம்மந்தப் பெருமான் கூறியதையே எடுத்துக் கொள்ள
வேண்டும். அதை மிஞ்சி ஆதாரபூர்வமான செய்தி வேறெதுவும் இருக்கவே முடியாது. அது
தெய்வ வாக்கு!

“பிடியதன் உரு – உமைகொள – மிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும்
அவரிடர் கடி கணபதி வர அருளினன் மிகு கொடை” என்கிறார். இதையே ‘‘பந்தத்தால்’’ எனும்
கழுமலப்பதிகத்திலும் குறிப்பிடுகிறார். இதுவே சத்தியம். அப்படிப் பிறந்தால் இப்படித்தான்
செல்லம் கொஞ்சி, சிங்காரித்து மோதகத்தையும் கையில் கொடுத்தால், பார்த்துப் பார்த்து
குழந்தை தவழும், ஓடும். அந்தக் காட்சிகளை இங்கே வடித்த அந்தச் சிற்பி, சம்பந்தர் வார்த்தைகளை
வேதவாக்காக எடுத்துக்கொண்டதன் விளைவாகத்தான் இருக்கும். வேறெங்கும் காண முடியாத இந்த
அரிய சிற்பங்களைப் பாருங்கள். மகிழுங்கள். நேரில் சென்று பார்த்து ஆண்டவனையும் வணங்கி
வாருங்கள்.

இந்த ஜலகண்டேஸ்வரர்
கோயில் சிற்பக் கூடத்தை அணு அணுவாய் ரசிக்கலாம். தூண்களில் உள்ள சிற்பங்கள்
சிறியவையாக இருந்தாலும், அவை தரும் இன்பம் மிகப் பெரிது!

 

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top