Wednesday Dec 18, 2024

ஹரிப்பாடு ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில், கேரளா

முகவரி

ஹரிப்பாடு ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில், ஹரிப்பாடு, ஆலப்புழை மாவட்டம் கேரளா – 690514

இறைவன்

இறைவன்: ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி

அறிமுகம்

ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி கோயில் என்பது கேரளாத்தின் ஆலப்புழை மாவட்டம், ஹரிப்பாட்டில் உள்ள பழமையான முருகன் கோயில்களில் ஒன்றாகும். முருகனுக்கு அமைக்கப்பட்ட இந்தக் கோயிலானது தட்சிண பழனி (தென் பழனி) என்று அழைக்கப்படுகிறது. கலியுகத்திற்கு முன்பே இந்த கோயில் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. இதுவே கேரளத்தின் மிகப் பெரிய முருகன் கோயிலாகும். மேலும் இங்கு உள்ள கொடிக்கம்பமும் மிக உயர்ந்தது ஆகும். கேரள மாநிலம், ஆலப்புழையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஹரிப்பாடு நகரம். அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த ஆலயத்தைச் சென்றடைவதற்கு ஆட்டோ வசதி உள்ளது. ஆலப்புழையிலிருந்து ஹரிப்பாடு செல்ல அதிகமான பேருந்து வசதிகள் இருக்கின்றன. இக்கோவிலில் மலையாள ஆண்டு 1096- ல் ஏற்பட்ட தீவிபத்தில் கோவிலின் பெரும்பான்மையான பகுதிகள் சேதமடைந்தன. அதன் பின்னர், அப்போதைய அரசர் சித்திரைத் திருநாள் ராம வர்மா என்பவரால், இக்கோவில் மீண்டும் புதுப்பித்துக் கட்டப்பட்டது என்கின்றனர்.

புராண முக்கியத்துவம்

பரம்பொருளாக விளங்குபவர் ஈசன். அவரது நெற்றிக் கண்ணில் இருந்து வெளியேறிய நெருப்புப் பொறிகளில் இருந்து தோன்றியவர் முருகப்பெருமான். இவர் சிறுவனாக இருந்தபோதே, தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் தொல்லைகளைக் கொடுத்து வந்த சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் எனும் மூன்று அசுரர்களையும் அழித்து வெற்றிவேலனாக வலம் வந்தார். சூரர்களை வதம் செய்தபிறகு பூலோகத்தை தன்னுடைய மயிலில் வலம் வந்த முருகப்பெருமானை, ஓரிடத்தில் மகாவிஷ்ணு வரவேற்றார். அப்போது முருகப்பெருமானை வாழ்த்திப் பாடல்களும் பாடினார். பின்னர் மகாவிஷ்ணு கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்த இடத்திலேயே முருகப்பெருமான் கோவில் கொண்டார் என்று இந்த ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது. மகாவிஷ்ணு முருகப்பெருமானை வரவேற்றுப் பாடிய பாடல்கள் ‘ஹரிப்பாடல்கள்’ என்றும், அவர் பாடிய இந்த இடத்திற்கு ‘ஹரிப்பாடு’ என்றும் பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கோவிலில் அமைந்திருக்கும் முருகப்பெருமானின் சிலையைப் பற்றியும், கோவில் அமைக்கப்பட்ட விதம் குறித்தும் மற்றொரு செய்தி சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில் முருகப்பெருமான் சிலை ஒன்றை வைத்து, பரசுராமர் பூஜை செய்து வழிபட்டு வந்தார். அதன்பிறகு அந்தச்சிலையை ஏதோ ஒரு காரணத்தால் கந்தநல்லூரில் உள்ள கோவிந்தமட்டம் உப்பங்கழியில் விட்டுச் சென்றுள்ளார். அந்தச்சிலை பிற்காலத்தில் காயம்குளம் ஏரிப்பகுதிக்கு வந்து சேர்ந்திருக்கிறது. காயம்குளம் ஏரிப்பகுதியில் முருகன் சிலை இருப்பது குறித்த தகவல், அப்போதைய ஏகச்சக்கரா (ஹரிப்பாடு) நில உடைமையாளர்கள் அனைவருக்கும், ஒரே நேரத்தில் கனவாகத் தோன்றியிருக்கிறது. அதனையடுத்து அவர்கள், காயம்குளம் ஏரிப்பகுதிக்குச் சென்று அந்தச் சிலையைத் தேடியிருக்கின்றனர். அந்தத் தேடுதல் வேட்டையில் நெல்புரவுக் கடவு என்னும் இடத்தில் அந்தச் சிலை கிடைத்திருக்கிறது. அந்தச் சிலையை நிரந்தரமான இடமொன்றில் வைக்கும் வரை, அருகிலிருந்த ஓரிடத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அந்தச்சிலை அருகில் இருந்த ஆலமரம் ஒன்றின் கீழ் வைக்கப்பட்டது. பின்னர் தற்போதுள்ள இடத்தில் புதிதாக ஆலயம் கட்டப்பட்டு, அந்த முருகர் சிலையை நிறுவியதாக அந்த வரலாறு சொல்கிறது. புதியதாக கட்டப்பட்ட ஹரிப்பாடு கோவிலுக்கு முருகர் சிலையை எடுத்துச் செல்வதற்கு முன்பாக, ஆலமரத்தின் அடியில் இருந்த அந்த சிலைக்குச் சிறிது நேரம் வழிபாடு செய்யப்பட்டது. இப்படி வழிபாடு செய்யப்பட்ட இடத்திலும் ஒரு சிறிய கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலை மலையாளத்தில் ‘அரை நாழிகை அம்பலம்’ (அரை மணி நேரம் கோவில்) என்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

கேரளாவில் ‘தென்பழனி’ என்று போற்றப்படும் ஹரிப்பாடு சுப்பிரமணியசாமி கோவில், நான்கு கோபுரங்களுடன் வட்ட வடிவக் கருவறையுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் இருக்கும் முருகப்பெருமான் சிலை ஒரு முகத்துடன் கிழக்கு நோக்கிய நிலையில் நின்ற கோலத்தில் 8 அடி உயரத்தில் காட்சி தருகிறார். நான்கு கரங்களுடன் அருளும் இத்தல இறைவன், ஒரு கையில் வேல், மற்றொரு கையில் வஜ்ராயுதம் ஆகிய ஆயுதங் களுடனும், ஒரு கை அபய முத்திரையுடனும், மற்றொரு கையை இடுப்பில் வைத்திருப்பது போன்றும் அருள்கிறார். இங்குள்ள முருகப்பெருமான் ‘சுப்பிரமணிய சுவாமி’ என்று அழைக்கப்படுகிறார். இந்தச் சிலை சிவ பெருமான், மகாவிஷ்ணு மற்றும் பிரம்மன் எனும் முப்பெருங்கடவுள்களின் அருளாசிகளுடன் அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது. இக்கோவிலில் முருகப்பெருமான் தனித்து காணப்படுகிறார். இந்த ஆலயம் திருமணத்திற்கு முன்பாக அமைந்தது என்பதால், இங்கு வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிலைகள் அமையவில்லை என்று கூறப்படுகிறது. இக்கோவில் வளாகத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணர், தர்மசாஸ்தா, யட்சி, குருதிக்காமன், பஞ்சமி போன்றவர்களுக்கான சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

திருவிழாக்கள்

இக்கோயிலில் மூன்று திருவிழாக்கள் முதன்மையாக நடத்தப்படுகின்றன. அவை அவணி உற்சவம் சிங்கோமிலும், மார்கழி உற்சவம் தணுவிலும், சித்திரை உற்சவம் மேடத்திலும் நடக்கின்றன. விருச்சிகத்தில் திரிக்கார்த்திகா, எடவத்தில் பிரதிஷ்டா நாள், துலத்தில் ஸ்கந்த அஷ்டமி, கண்ணியில் நவராத்திரி, மகரத்தில் தைப்பூசம் ஆகியவை ஹரிபாத் கோயிலின் மற்ற முக்கியமான திருவிழாக்கள் ஆகும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஹரிப்பாடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஹரிப்பாடு

அருகிலுள்ள விமான நிலையம்

கொச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top