ஸ்ரீ சூர்யமங்கலம் பகளாமுகி தேவி திருக்கோயில், திருநெல்வேலி
முகவரி
அருள்மிகு சூர்யமங்கலம் பகளாமுகி தேவி திருக்கோயில், தெற்கு பாப்பாங்குளம், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம். போன்: +91 98416 76164, 04634 293 375
இறைவன்
இறைவி: பகளாமுகி தேவி
அறிமுகம்
ஸ்ரீ சூர்யமங்கலம் பகளாமுகி தேவி கோவில், திருநெல்வேலி மாவட்டம் ,கல்லிடைக்குறிச்சி, தெற்குப்பாப்பான்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் பகளாமுகி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் என்ற சிறப்பினை கொண்டது. 18 ஏக்கர் நிலப்பரப்பில், ஏற்கனவே இங்கு அமைக்கப்பட்டுள்ள ராஜகாளி கோயிலின் எதிரே, பகளாமுகி கோயில் கட்டப்பட்டுள்ளது. காஞ்சி ஜெயேந்திரர் இதற்கான அடிக்கல் நாட்டினார். சென்னையில் அமைந்துள்ள ஸ்ரீசூர்யமங்கலம் தாந்த்ரீக வித்யாபீடம் கட்டுமானப்பணிகளை ஏற்றுக்கொண்டது.
புராண முக்கியத்துவம்
தசமகாவித்யா என்னும் பத்து வடிவங்களில் அம்பாள் அருள்புரிவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. மாதங்கி, புவனேஸ்வரி, பகளாமுகி, திரிபுரசுந்தரி, தாரா, மாகாளி, மகாலட்சுமி, சின்னமஸ்தா, தூமாவதி, பைரவி என்பவையே தசமகாவித்யா வடிவங்கள். இவர்களில் எதிரிகளிடம் இருந்து நல்லவர்களைப் பாதுகாப்பளாகவும், நாவடக்கம் தருபவளாகவும் விளங்குகிறாள் பகளாமுகி.
நம்பிக்கைகள்
அமாவாசையன்று பகளாமுகிக்கு யாகம் செய்தால், பயம் நீங்கும். பொறாமைக்காரர்களால் ஏற்பட்ட துன்பம் நீங்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சுக்லாஷ்டமி அன்று யாகம் செய்தால் முற்பிறவி பாவம், மூதாதையர் சாபம், ராகுதோஷம் நீங்கும். பவுர்ணமியன்று பூஜை செய்தால், திருமணத்தடை நீங்குதல், குழந்தை பாக்கியம், நல்ல வேலை, பதவி உயர்வு உள்ளிட்ட நற்பலன்கள் நடக்கும்.
சிறப்பு அம்சங்கள்
பகளா, முகி என்னும் இரு சொற்களின் சேர்க்கையே பகளாமுகி. பகளா என்ற சொல் வால்கா என்னும் வடசொல்லில் இருந்து வந்ததாகும். இதன் பொருள் எதிரியை அடக்கி ஒடுக்கும் முகத்தைக் கொண்டவள் என்பதாகும். சுமை தாங்கி என்ற பொருளும் உண்டு. துன்பச் சுமையால், தன் பக்தர்கள் தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பவளாக இவள் விளங்குகிறாள். அம்பாளின் அமைப்பு: அமிர்தம் நிறைந்த பாற்கடலில் பகளாமுகி வீற்றிருந்து அருள்புரிகிறாள். அவளின் இருப்பிடத்தில் மஞ்சள் தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கும். இளம்பிறையை தலையில் சூடி புன்முறுவலுடன் காட்சி தருகிறாள். மஞ்சள் ஆடை அணிந்திருக்கும் இவளது மேனியும் தங்கம் போல மஞ்சள் நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கும். துவிபுஜம் என்னும் இருகைகள் கொண்டவளாகவும், சதுர்புஜம் என்னும் நான்கு கைகள் கொண்டவளாகவும் இருவிதமாக இவளுக்கு விக்ரகங்கள் உள்ளன. மேல் வலக்கரத்தில் முத்கரம் என்னும் ஆயுதமும், மேல் இடக்கரத்தில் வஜ்ராயுதமும் உள்ளன. வலக்கரம் அபயஹஸ்தமாக அருளைப் பொழிகிறது. இடக்கரத்தில், தன் பக்தர்களை துன்பம் செய்யும் எதிரியின் நாக்கை அறுத்து வைத்திருக்கிறாள். தீயசக்தியை அடக்கி ஒடுக்கி செயல் இழக்கச் செய்வதன் அடையாளமாகவும் இந்நாக்கு விளங்குகிறது. பகளாமுகிக்கு பீதாம்பர தேவி என்றும், பிரம்மாஸ்திர ரூபினி என்றும் பெயர் உண்டு. அமைதி, ஆரவாரம், ஞானம், அஞ்ஞானம், பலம், பலமின்மை, வெற்றி, தோல்வி என்று நேர் எதிர் ஆற்றல்களின் இருப்பிடமாக இவள் விளங்குகிறாள். தன்னை அண்டியவர்களுக்கு ஆக்க சக்தியாகவும், எதிரிகளுக்கு அழிவு சக்தியாகவும் விளங்குகிறாள். மேற்கு வங்காளம், இமாசலப்பிரதேசம், மத்தியபிரதேசம், அசாம், ஒடிசா, உத்தரபிரதேச மாநிலங்களில் தாந்திரீக முறைப்படி பகளாமுகி வழிபாடு நடக்கிறது. இமாசலப்பிரதேசம், மான்டி பகுதியில் குமா என்னும் இடத்தில் புகழ்பெற்ற பகளாமுகி கோயில் உள்ளது. காசியில் பகளாமுகிக்கு அழகானகோயில் ஒன்று அமைந்துள்ளது.
திருவிழாக்கள்
அமாவாசை, பவுர்ணமி
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தெற்கு பாப்பாங்குளம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருநெல்வேலி
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி