Thursday Dec 26, 2024

ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி ஏரிக் கோயில், கேரளா

முகவரி

ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி ஏரிக் கோயில், காசர்கோடு மாவட்டம், கேரளா மாநிலம் – 671321

இறைவன்

இறைவன்: ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி இறைவி: பூதேவி, ஸ்ரீதேவி

அறிமுகம்

அனந்தபுர ஏரிக் கோவில் என்பது தென் இந்தியாவில் கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் ஒரு ஏரியின் நடுவில் அமைந்திருக்கும் கோவிலாகும். இக்கோவில் கும்பாலா என்ற இடத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. கும்பாலா என்ற இடம் மங்களூருவில் இருந்தோ அல்லது கண்ணூரில் இருந்தோ பல பேருந்து வழித்தடங்கள் மூலமாக எளிதாக அடைந்து விடலாம் கேரளத்தில் ஏரிக்குள் அமைந்திருக்கும் கோவில் இந்தக்கோவில் மட்டுமேயாகும். மேலும் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பரந்தாமன் ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி குடிகொண்டுள்ள பத்மநாபசுவாமி கோவிலின் மூலம் இதுவேயாகும். புராணங்களின் கூற்றுப்படி பரந்தாமன் ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி அசலாக முதன்முதலில் குடியிருந்த இடம் இதுவேயாகும். இந்தக்கோவிலின் ஏரியில் ஒரு முதலையும் வசித்து வருகிறது, இந்த முதலை இக்கோவிலை காவல் காப்பதாக மக்களிடையே நம்பிக்கை இருந்து வருகிறது. ஒரு முதலை இறந்தால், அதன் இடத்தை வியக்கத்தக்க வண்ணம் இன்னொரு முதலை எடுத்துக் கொண்டு விடும்.

புராண முக்கியத்துவம்

வில்வமங்களம் சுவாமிகள் எனும் முனிவர், காட்டுக்குள்ளிருந்த தனது ஆசிரமத்தில் விஷ்ணு சிலையை நிறுவி, அதனைத் தினமும் மலர்களால் அலங்கரித்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள், அவர் வழிபாடு செய்து கொண்டிருந்த போது, அவருடைய ஆசிரமத்தின் முன்பாக இருந்த நந்தவனத்தில், ஒரு அழகிய சிறுவன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். ஆசிரமத்திலிருந்து வெளியில் வந்த அவர், அந்தச் சிறுவனிடம், ‘தம்பி நீ யார்? இந்தக் காட்டிற்குள் எப்படி வந்தாய்? வழி தவறி வந்து விட்டாயா?’ என்று அவனைப் பற்றி விசாரித்தார். அவன், ‘சுவாமி! நான் ஒரு அனாதை. எனக்கென்று யாருமில்லை. எனவே ஒவ்வொரு இடமாகப் போய்க் கொண்டிருக்கிறேன்’ என்றான். இரக்கம் கொண்ட முனிவர் அவனிடம், ‘தம்பி, என்னுடன் இந்த ஆசிரமத்தில் தங்கிக் கொள்கிறாயா?’ என்று கேட்டார். சிறிது நேரம் யோசித்த சிறுவன், ‘சுவாமி! நான் உங்கள் விருப்பப்படி இங்கேயேத் தங்கிக் கொள்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. நீங்கள் என்னைச் சிறிது கூடக் கடிந்து பேசக்கூடாது. அப்படிப் பேசினால், நான் இங்கிருந்து வெளியேறி விடுவேன்’ என்றான். முனிவரும் அவனுடைய நிபந்தனைக்குச் சம்மதித்தார். அதன் பிறகு, அந்தச் சிறுவன் முனிவருடன் ஆசிரமத்தில் தங்கிக் கொண்டான். அந்தச் சிறுவன், ஆசிரமத்தில் சிறு சிறு வேலைகளைச் செய்து வந்தான். முனிவரது விஷ்ணு வழிபாட்டுக்குத் தேவையான மலர்கள் மற்றும் இதரப் பொருட்களையும் கொண்டு வந்து கொடுப்பான். அவனுடைய சிறு சிறு வேலைகள் முனிவருக்குப் பிடித்துப் போனது. ஆனால், அவன் அவ்வப்போது விளையாட்டாகச் செய்யும் சிறிய தவறுகள், அவரை எரிச்சலடையச் செய்யும். இருப்பினும், அவனைக் கண்டித்தால், அவன் தன்னை விட்டுப் பிரிந்து போய் விடுவானே என்கிற அச்சத்தில் பேசாமலிருந்து விடுவார். ஒரு நாள், அந்தச் சிறுவன் விஷ்ணு வழிபாட்டுக்கு வைத்திருந்த பால் முழுவதையும் குடித்து விட்டான். அதனால் கோபமடைந்த முனிவர், அவனைச் சத்தம் போட்டார். உடனே அந்தச் சிறுவன், ‘சுவாமி! நான் உங்களுடன் இருப்பதற்காகச் சொன்ன நிபந்தனையை மீறி விட்டீர்கள். இனி, நான் இங்கிருக்க மாட்டேன். இனிமேல் நீங்கள்தான் என்னைத் தேடி வர வேண்டும்’ என்று சொல்லியபடி அங்கிருந்து சென்று விட்டான். சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்தச் சிறுவனைத் திட்டியதற்காக வருத்தப்பட்ட முனிவர், அந்தச் சிறுவனிடம் பேசி, அவனை மீண்டும் தன்னுடன் அழைத்து வந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவனைத் தேடிச் சென்றார். அந்தச் சிறுவனைக் கண்டு பிடிக்க ஒவ்வொரு இடமாகத் தேடி அலைந்த அவர், அனந்தக் காடுகள் பகுதிக்கு வந்து சேர்ந்தார். அப்போது, அங்கிருந்த இலுப்பை மரம் ஒன்றில் அந்தச் சிறுவன் அமர்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். அவர் அந்தச் சிறுவனை நோக்கிச் சென்றார். அங்கு அந்தச் சிறுவன் இல்லை. அந்த இடத்தில், விஷ்ணு படுக்கை நிலையில் (அனந்த சயனம்) இருப்பது அவருக்குத் தெரிந்தது. அதன் பிறகுதான், அவருக்குத் தன்னுடன் இருந்த சிறுவன் விஷ்ணு என்பது புரிந்தது. விஷ்ணுவை வணங்கிய முனிவர், தனக்குக் காட்சியளித்த அதே இடத்தில் கோவில் கொண்டருள வேண்டும் என்று வேண்டினார். இறைவனும், அவருடைய வேண்டுதலுக்காக அங்கேயே கோவில் கொண்டார் என்கிறது ஆலய வரலாறு. இந்தக் கோவில் அகலமான புல்வெளிகளுக்கு இடையில் அமைந்திருக்கும், செவ்வக வடிவிலான ஏரி ஒன்றின் நடுவில் அமைந்திருக் கிறது. கேரளாவில் ஏரிக்கு நடுவில் அமைந்திருக்கும் ஒரே கோவில் இதுதான் என்கின்றனர். இக்கோவிலுக்குச் செல்ல ஏரியின் கரையிலிருந்து சிறிய பாலம் ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. கோவிலின் கருவறையில் அனந்தன் எனும் பாம்பின் மேல் விஷ்ணு அமர்ந்த நிலையில் இருக்கிறார். அவரை அனந்த பத்மநாபன் என்று அழைக்கின்றனர். அவரின் இருபுறமும் பூதேவி, ஸ்ரீதேவி ஆகிய இருவரும் அமர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு முன்பாக, அனுமன் மற்றும் கருடன் ஆகியோர் வணங்கிய நிலையில் இருக்கின்றனர். இக்கோவிலைத் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோவிலுக்கு மூல காரணமான, முதன்மைக் கோவில் என்றும் சொல்கின்றனர். இக்கோவில் வளாகத்தில் மகாகணபதி, மகிஷாசுரமர்த்தினி, கோசலகிருஷ்ணர் சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆலய வெளிப்புறச் சுவர்களில் புராணங்களை மையப்படுத்திய அழகிய ஓவியங்கள் கண்களைக் கவர்கின்றன.

நம்பிக்கைகள்

இந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்து வேண்டுபவர்களுக்குத் தொலைந்த பொருட்கள், இழந்த பதவிகள் போன்றவைத் திரும்பக் கிடைக்கும் என்கின்றனர். இத்தல இறைவனை வழிபடுபவர்களுக்கு, அவர்களது அனைத்துக் குறைகளும் நீங்கிச் செல்வச்செழிப்பு ஏற்படும் என்பதும் பொதுவான நம்பிக்கையாகும். திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவிலுக்கு மூல காரணமான, முதன்மைக் கோவிலாக இக்கோவில் இருப்பதால், அக்கோவிலுக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கும் அனைத்துப் பலன்களையும் இக்கோவிலில் வழிபட்டுப் பெற முடியும் என்றும் சொல்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

இந்தியாவில் உள்ள கோவில்களில் இருக்கும் பெரும்பாலான சிலைகள் கற்களாலோ, உலோகத்தாலோ செய்து நிறுவப்பட்டிருக்கும். கேரளக் கோவில்களில் மரங்களினால் கூட சிலைகள் செய்யப்பட்டிருக்கும். ஒரு சில கோவில்களில் மட்டுமே சிலைகள், மூலிகைகளைக் கொண்டு செய்யப்பட்டதாகச் சொல்வார்கள். அனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் மூலவர் சிலை, ‘கடுசர்க்கரா’ எனும் எட்டு விதமான (அஷ்டபந்தன) மூலிகைகள் கொண்டு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால்தான் இங்குள்ள மூலவர் சிலைக்கு அபிஷேகம் எதுவும் செய்யப்படுவதில்லை.

திருவிழாக்கள்

இக்கோவிலில் கேரள நாட்காட்டியின் துலாம் (ஐப்பசி) மாதத்தில் முதல் நாள், ‘நாவண்ணா’ எனும் விழாவும், கும்பம் (மாசி) மாதத்தில் 14-ம் நாள் ‘தபோத்ஸவம்’ எனும் விழாவும் சிறப்பு விழாக்களாக நடத்தப்படுகின்றன. பவுர்ணமி நாட்களிலும், கிருஷ்ண அஷ்டமி நாளிலும் சிறப்புப் பஜனை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதுபோல், கேரளாவில் ராமாயண மாதமாகக் கருதப்படும் ஆடி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

மலபார் தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கும்பாலா

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருக்கரிப்பூர்

அருகிலுள்ள விமான நிலையம்

மங்களூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top