Saturday Jan 18, 2025

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 602 105 . போன்: +91 44 2716 2236.

இறைவன்

இறைவன்: ஆதிகேசவப் பெருமாள் இறைவி: யதிராஜநாதவல்லி

அறிமுகம்

தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. ராமானுஜர் அவதரித்ததால் இது, நித்ய சொர்க்கவாசல் தலமாகக் கருதப்படுகிறது. எனவே, இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று ஆதிகேசவர், ராமானுஜர் இருவரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருளுவர். அவ்வேளையில் சொர்க்கவாசல் திறப்பதைப்போல, இங்குள்ள மணிக்கதவை (சன்னதிகதவு) திறப்பர். ராமானுஜர் சன்னதி எதிரே மைசூரு மகாராஜா கட்டிக்கொடுத்த, தங்க மண்டபம் இருக்கிறது. இதில் வேதங்களைக் குறிக்கும்விதமாக நான்கு கலசங்கள், அதன் கீழே பரவாசுதேவன்பெருமாள், அடுத்து ரங்கநாதர், அதற்கு கீழே ஸ்ரீதேவி, பூதேவியுடன் நம்பெருமாள்,கருடன், துவாரபாலகர்கள் இருக்கின்றனர். இம்மண்டபம் தனி கோயில் போன்ற அமைப்பில் உள்ளது.

புராண முக்கியத்துவம்

கைலாயத்தில் உள்ள பூதகணங்கள், சிவனிடம் பெற்ற சாபத்திற்கு விமோசனம் பெற மகாவிஷ்ணுவை வேண்டின. சுவாமி, அனந்தன் என்னும் சர்ப்பத்தால் இங்கு தீர்த்தம் (அனந்தசரஸ் தீர்த்தம்) உண்டாக்கி, அதன் கரையில் காட்சி தந்து விமோசனம் கொடுத்தார். இதற்கு நன்றிக்கடனாக பூதகணங்கள் இங்கு சுவாமிக்கு கோயில் எழுப்பின. இதனால் பூதபுரி எனப்பட்ட இத்தலம், பிற்காலத்தில் ஸ்ரீபெரும்புதூர் என மாறியது. சுவாமிக்கு ஆதிகேசவப்பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. திராவிட கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்த கோயில் சுமார் 1.5 ஏக்கர் (0.61 ஹெக்டேர்) பரப்பளவ்வில் உள்ளது. இது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள புறநகர்ப் பகுதியான ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது. இதில் சோழர் மற்றும் விஜயநகர கட்டிடக்கலை அம்சங்கள் உள்ளன. விஜயநகர சாம்ராஜ்யத்திலிருந்து வந்த, முதலாம் ஸ்ரீரங்க மன்னரின் (1572–1586), 1572 ஆம் ஆண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகிறது. மேலும், 1556 ஆம் ஆண்டில் அலியா ராம ராயாவின் (1542-1565) காலத்திலிருந்த மற்றொரு கல்வெட்டும் உள்ளது. இக்கல்வெட்டில், கோயிலுக்கு மானியமாக, 36 கிராமங்கள் வழங்கியதை குறிக்கிறது. இக்கோயிலின் விமானம் (கருவறையின் கூரை) 1912 ஆம் ஆண்டில் தங்கமுலாம் பூசப்பட்டிருந்தது, மேலும் பழங்காலத்தில், இந்த அம்சத்தைக் கொண்ட ஒரே தென்னிந்திய கோயிலாக இருந்தது. விமானத்தில், ஸ்ரீ இராமானுஜரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கோயிலில் தங்கத் தகட்டின் வரலாற்றைப் பதிவு செய்யும் செப்புத் தகடு உள்ளது. இந்த கோவிலில் 10 அடி (3.0 மீ) உயரமான சுவர்களால் சூழப்பட்ட ஒரு செவ்வக திட்டம் உள்ளது. இது ஏழு அடுக்குகள் உள்ள நுழைவாயில் கோபுரத்தால் இணைக்கப்பட்டுள்ளது. தலைமை தெய்வமான ஆதி கேசவ பெருமாள் சிலை, கருவறையில் நின்ற திருக்கோலத்தில் காணப்படுகிறது. இது, கருங்கல்லினால் ஆன ஒரு உருவமாகும். ஆதி கேசவப் பெருமாளை எதிர்கொள்ளும் விஷ்ணுவின் வாகனமான, கருடாழ்வாரின் சன்னதி, மத்திய சன்னதிக்கு மையமாக அமைந்துள்ளது. இக்கோயிலின், மத்திய சன்னதி, ஒரு வழிபாட்டு மண்டபம் மற்றும் குறுகிய அர்த்த மண்டபம் வழியாக அணுகப்படுகிறது. கொடிமரம், கருடாழ்வாரின் சன்னதிக்கு பின்னால் அமைந்துள்ளது, இது, மத்திய சன்னதி மற்றும் நுழைவாயில் கோபுரத்திற்கு மையமாக அமைந்துள்ளது. இருபுறமும் உள்ள வழிபாட்டு மண்டபத்தில் ஆழ்வார்களின் திருவுருவப்படங்கள் உள்ளன. தாயார் யதிராஜ நாத வள்ளி சன்னதி, இரண்டாவது இடத்தில் அமைந்துள்ளது. இலட்சுமி, ஒரு பக்தரின் பெயரை எடுக்கும் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இராமானுஜர் சன்னதிக்கு முன்னால் தங்கமுலாம் பூசப்பட்ட மண்டபம் மைசூர் மகாராஜாவால் வழங்கப்பட்டது. இக்கோயிலில் தனியான சொர்க்கவாசல் அமைப்பு இல்லை. வைகுந்த ஏகாதசி திருவிழாவின் போது, இங்குள்ள தெய்வம், புனித நுழைவு வாயில் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இங்குள்ள பூதக்கல் மண்டபத்தில் கோயிலின் புராணங்களைச் சித்தரிக்கும் வர்ணப்படங்கள் உள்ளன. மேலும், யதிராஜ நாத வள்ளி தாயாரின் உற்சவ விழாக்கள் இங்கு நடைபெறுகிறது.

நம்பிக்கைகள்

ராகு, கேது தோஷம், காளசர்ப்பதோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர்

சிறப்பு அம்சங்கள்

சுவாமியுடன் ஆண்டாள்: ஆடிப்பூர விழாவின் முதல் நாளில் இருந்து ஆவணி பூரம் வரையில் ஆண்டாள், சுவாமி சன்னதிக்குள் எழுந்தருளி சேர்த்தி காட்சி தருவாள். மார்கழி மாதத்திலும் சுவாமி சன்னதிக்குள் இருப்பாள். திருமணமாகாத கன்னிப்பெண்கள் நல்ல கணவர் கிடைக்க சுவாமியுடன் கூடிய ஆண்டாளை வணங்குகின்றனர். ராமானுஜர் அவதாரம்: ஸ்ரீபெரும்புதூரில் வசித்த கேசவ சோமையாஜி, காந்திமதி தம்பதியருக்கு 1017ம் ஆண்டு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையின் மாமா பெரிய திருமலை நம்பி, திருப்பதியில் சேவை செய்து வந்தார். குழந்தை லட்சுமணர் போல இருந்ததால், “இளையாழ்வார்’ எனப்பெயர் சூட்டினார். ஆதிகேசவர் கோயில் எதிரே, ராமானுஜர் பிறந்த இடத்தில் மண்டபம் உள்ளது. சித்திரை விழாவின் 10 நாட்களும் ராமானுஜர் இங்கு எழுந்தருளுவார். திருநட்சத்திரத்தன்று ஊஞ்சலில் தாலாட்டி, சங்குப்பால் தரும் வைபவம் இங்கு நடக்கும். இவ்வேளையில் ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், ஸ்ரீவில்லிப்புத்தூர், திருமாலிருஞ்சோலை (மதுரை கள்ளழகர் கோயில்) உள்ளிட்ட 36 திவ்ய தேசங்களில் இருந்து ராமானுஜருக்கு பரிவட்டம் கொண்டு வந்து மரியாதை செய்யப்படும். பக்தர் பெயரில் தாயார்: ராமானுஜருக்கு யதிராஜர் என்ற பெயரும் உண்டு. “யதி’ என்றால் “சந்நியாசி’, “ராஜர்’ என்பது தலைமைப் பண்புடையவரைக் குறிக்கும். இத்தலத்தில் தாயார், “யதிராஜநாதவல்லி’ என்ற பெயரில் அருளுகிறாள். தன் பக்தரின் பெயரில் தாயார் இங்கு அருள்பாலிப்பது சிறப்பு. ராமனின் தம்பி: அனுஜன் என்றால் இளையவர் என பொருள். ராமனுக்கு இளையவரான லட்சுமணரின் அம்சமாகப் பிறந்ததால் இவர் ராமானுஜர் (ராமன் அனுஜன்) என்றழைக்கப்பட்டார். ராகு, கேது தோஷம், காளசர்ப்ப தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்குள்ள அனந்தசரஸ் தீர்த்தத்தை தலையில் தெளித்து, ராமானுஜருக்கு பாலபிஷேகம் செய்து, நெய் தீபமேற்றி வணங்குகின்றனர். ஊர்வலம் வரும் பூமாலை: வருடத்தின் அனைத்து நாட்களிலும் இங்கு விழா கொண்டாடுகிறார்கள். பிரதான விழா இல்லாத நாட்களில் செல்வர் (பெருமாளின் உற்சவர் வடிவம்) காலை, இரவில் புறப்பாடாவார். மாலையில் ஒரு வாசனைப்பூ மாலையை, மேளதாளத்துடன் புறப்படச் செய்கின்றனர். சுவாமியே, பூ வடிவில் பவனி வருவதாக ஐதீகம். வெந்நீர் அபிஷேகம்: தீபாவளி துவங்கி தை மாத அஸ்தம் நட்சத்திரம் வரையில் ராமானுஜருக்கு வெந்நீர் அபிஷேகம் செய்கின்றனர். குளிர்காலம் என்பதால் இக்காலகட்டத்தில் ராமானுஜருக்கு கோட் அணிவித்து, கம்பளி போர்த்துகின்றனர். உடல் முழுவதும் போர்த்த வெல்வெட் அங்கி, உல்லன் சால்வை, தலை முதல் பாதம் வரை போர்த்த குன்சம் என்ற ஆடை ஆகியவை இங்குள்ளன. மாசி முதல் புரட்டாசி வரையில் கோடைகாலத்தில் சுவாமியை குளிர்ச்சிப்படுத்த சந்தனக்காப்பிடுகின்றனர். தானுகந்த திருமேனி: ராமானுஜரின் விசேஷமான திருமேனிகள் (சிலை) கர்நாடக மாநிலத்திலுள்ள திருநாராயணபுரம் (மேல்கோட்டை), ஸ்ரீரங்கம் மற்றும் இத்தலத்தில் உள்ளன. இங்குள்ள சிலை தானுகந்த திருமேனி ஆகும். ராமானுஜரின் அடியார்கள், அவரது ஆலோசனைப்படி ஒரு சிலை வடித்தனர். ராமானுஜர் அச்சிலையைத் தழுவி, அதில் தன் சக்தியை புகுத்தினார். ராமானுஜரே உகந்து (விரும்பி) அணைத்ததால் இது, “தானுகந்த திருமேனி’ எனப்பட்டது. இந்த சிலையைச் செய்தபோது, ராமானுஜருக்கு வயது 120. அந்த வயதிற்குரிய தோற்றத்திலேயே ராமானுஜரின் விலா எலும்பு, காதுமடல் ஆகியவை தெரியும்படியாக சிலை தத்ரூபமாக இருக்கிறது. வெண்ணிற ஆடை ராமானுஜர்: மன்னன் ஒருவன் ராமானுஜர் மீது வஞ்சகம் கொண்டு, அவரை தண்டிக்க எண்ணினான். இதையறிந்த ராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வார், ராமானுஜரின் காவி ஆடையை அணிந்து கொண்டு மன்னனிடம் சென்றார். ராமானுஜர், கூரத்தாழ்வாரின் வெண்ணிற ஆடையை அணிந்து தப்பிச் சென்றார். உண்மையறிந்த மன்னன், கூரத்தாழ்வாரின் கண்களை குருடாக்கி விட்டான். குருவுக்காக தன் கண்களை தியாகம் செய்த சிஷ்யனுக்கு மரியாதை செய்யும்விதமாக, சித்திரை திருவிழாவில் ஒருநாள் ராமானுஜர் வெண்ணிற ஆடை அணிந்து காட்சி தருகிறார். செல்லப்பிள்ளை: மன்னன் ஒருவன் தன் மகளின் விருப்பத்திற்காக, கர்நாடகாவிலுள்ள திருநாராயணபுரத்தில் இருந்த பெருமாள் சிலையை டில்லிக்கு எடுத்துச் சென்றான். இதையறிந்த ராமானுஜர், சிலையை மீட்க டில்லி சென்றபோது, சுவாமி சிலை அவரது மடியில் வந்து அமர்ந்தது. “இதோ, என் செல்லப் பிள்ளை!’ என ஆனந்தத்தில் கண்ணீர்விட்டார். இதன்பிறகு இந்தப் பெருமாளை செல்லப்பிள்ளை என்றே அழைத்தனர். பங்குனி பூசத்தன்று ராமானுஜர் மடியில் செல்லப்பிள்ளை அமர்ந்து வீதியுலா செல்லும் வைபவம் இங்கு நடக்கும். அறியாமல் செய்த பாவத்துக்கு விமோசனம்: தொண்டைநாட்டு மன்னனான ஹாரீத மகாராஜன், வேட்டைக்குச் சென்றபோது, ஒரு பசுவை புலி அடிக்கச் செல்வதைக் கண்டான். புலி மீது அம்பெய்தான். ஆனாலும், உக்கிரம் கொண்ட புலி, பசுவைக் கொன்றுவிட்டது. இதனால், மன்னனுக்கு கோ சாபம் உண்டானது. இதற்கு இங்கு சுவாமியை வேண்டி நிவர்த்தி பெற்றான். இவ்வாறு, அறியாமல் செய்த பாவங்களையும் போக்குபவராக இங்கு சுவாமி அருள்கிறார். ராமானுஜர் சன்னதிக்குப் பின்புறம் பல்லி சிற்பம் இருக்கிறது. செய்த பாவத்திற்கு நிவர்த்தி கிடைக்கவும், மோட்சம் பெறவும் இந்த பல்லியை வணங்குகின்றனர். மணவாள மாமுனிகள்: 120 ஆண்டுகள் வாழ்ந்த ராமானுஜர், அடுத்த பிறப்பில் மணவாளமாமுனிகளாக தோன்றி, பாஷ்யங்களை உபதேசம் செய்தார். ராமானுஜர் சன்னதி பிரகாரத்தில் இவர் உபதேசித்த இடத்திலுள்ள ஒரு தூணில், மணவாளமாமுனிகள் சிலை உள்ளது. கோயிலுக்கு வெளியே மணவாளமாமுனிகளுக்கு தனிக்கோயிலும் உள்ளது.

திருவிழாக்கள்

மாசி பூரம், பங்குனி உத்திரம், பங்குனி அல்லது சித்திரையின் கடைசி வெள்ளியில் மட்டும் ஆதிகேசவர், யதிராஜநாதவல்லி, ஆண்டாள், ராமானுஜர் ஆகியோருக்கு ஒரே சமயத்தில் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஸ்ரீபெரும்புதூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஸ்ரீபெரும்புதூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top