Wednesday Dec 18, 2024

வேளுக்குடி ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில், வேளுக்குடி, திருவாரூர் மாவட்டம் – 614103.

இறைவன்

இறைவன்: ருத்ரகோடீஸ்வரர் இறைவி : கோமளாம்பிகை

அறிமுகம்

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேளுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ருத்ரகோடீஸ்வரர் கோயில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இங்கு விநாயகர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, துர்கை ஆகிய அனைவரும் அற்புதத் திருமேனியராக அருள்பாலிக்கின்றனர். வசிஷ்டர், சாண்டில்ய முனிவர், நந்திதேவர், இந்திரன் மற்றும் நவக்கிரகங்கள் வழிபட்டு வரம் பெற்ற புண்ணிய தலம் இது.

புராண முக்கியத்துவம்

தாங்கிக்கொள்ளவே முடியவில்லை வசிஷ்டரால் ! அடடா… எத்தனைப் பெரிய தவறு செய்துவிட்டோம் ! என்று கண்கலங்கினார். ஸ்ரீராமரின் திருமணத்துக்கு மிகக் கவனமாகப் பார்த்துத்தானே முகூர்த்தத் தேதி குறித்துக் கொடுத்தோம். ஆனாலும், இப்படி ஆகிவிட்டதே… ! என்று தவித்து மருகினார். முனிவர் பெருமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, இது உங்களின் தவறல்ல. நீங்கள் சரியாகத்தான் தேதியும் நேரமும் குறித்துக் கொடுத்தீர்கள். ஆனால், எந்நேரமும் தர்ப்பைப் புல்லை வாயில் வைத்திருக்கிற சக்ரவாகப் பறவை, தாங்கள் அருளிய அட்சரத்தைப் பிழையாக உச்சரித்ததால் வந்த குழப்பம் இது. ஆகவே, நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள் ? சக்ரவாகப் பறவை செய்த தவற்றுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள்? எனச் சொல்லி ஆறுதல்படுத்தினர். ஆனால் அவரது மனம், சமாதானம் ஆகவே இல்லை. பறவையே செய்திருந்தாலும், என் மீதுதான் தவறு. என்னுடைய தவத்தில்தான் ஏதோ கோளாறு என்று சஞ்சலப்பட்ட வசிஷ்டர், அப்படியே சேத்திராடனம் புறப்பட்டார். வழியெங்கும் வனங்கள்; அழகிய தலங்கள். ஒவ்வொரு தலமாகச் சென்று, அங்கே சில காலம் தங்கியிருந்து, இறைவனை நினைத்து, தவத்தில் ஈடுபட்டார். இப்படியாக வந்த வசிஷ்டர், நெல்லி வனம் சூழ்ந்த பகுதிக்கு வந்ததார். அங்கிருந்து கிளம்ப யத்தனிக்கும்போது, இன்றைக்குச் சனிக்கிழமை. பிரதோஷமும்கூட! சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம். ஆகவே, இங்கு இந்த வனத்தில் ருத்ர ஜபம் செய்து, பிரதோஷ பூஜை செய்வாயாக என அசரீரி ஒலித்தது. ஆடிப் போனார் வசிஷ்டர். என்ன பாக்கியம்… என்ன பாக்கியம் ! என்று கண்கள் மூடி, சிவனாரைத் தொழுதார். அந்த நெல்லி வனத்தில் திருக்குளம் ஒன்று இருந்தது. அதில் நீராடினார். கரைக்கு வந்தவர், கோடி முறை ருத்ர ஜபம் செய்வது எனத் தீர்மானித்து, ஜபத்தில் இறங்கினார். வேள்வியில் ஈடுபட்டார். சனிக்கிழமையும் பிரதோஷமும் கூடிய வேளையில் மனமுருக சிவனாரைப் பிரார்த்தனை செய்ததன் பலனாக, மனதில் இருந்த சஞ்சலங்கள் யாவும் மறைந்தன. மனம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் வேள்வியையும், கோடி முறை ருத்ர ஜபத்தையும் சொல்லி நிறைவு செய்த வசிஷ்டருக்கு, அங்கே திருக்காட்சி தந்தருளினார் சிவபெருமான். பின்னாளில், இந்தத் தலத்தைப் பற்றியும், வசிஷ்டர் இங்கே வழிபட்டார் என்பதையும் அறிந்த மன்னன், இங்கே கோயில் எழுப்பினான். கோடி முறை ருத்ர ஜபம் செய்த தலம் என்பதால், இங்கே குடிகொண்டிருக்கிற சிவனாருக்கு ருத்ரகோடீஸ்வரர் என்று திருநாமம் சூட்டப்பட்டது. அதேபோல் வசிஷ்டர் வேள்வி செய்த தலம் என்பதால் இந்த ஊருக்கு வேள்விக்குடி எனும் பெயர் வந்தது.

நம்பிக்கைகள்

மூலவர் மேற்கு நோக்கிய நிலையில், மயானத்தைப் பார்த்தபடி காட்சி தருவதால், இங்கு வந்து ஐந்து பிரதோஷங்களில் கலந்து கொண்டு பிரார்த்தித்தால், மனச் சஞ்சலங்கள் நீங்கும்; மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்; தீராத கடனும் தீரும்; குடும்பத்தில் பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள்.

சிறப்பு அம்சங்கள்

கோயிலையும் அமைத்து, ஊரையும் உருவாக்கிக் கொடுத்த மன்னன், இந்த ஊரில் சதாசர்வ காலமும் வேதகோஷம் ஒலித்துக் கொண்டே இருக்கவேண்டும்; வேள்விகளும் யாகங்களும் அடிக்கடி நடக்கட்டும் எனும் நோக்கத்தில், சோழ தேசத்தின் அந்தணர்கள் சிலருக்கு இந்த ஊரை எழுதிக் கொடுத்து, அவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் வழங்கினான். வேதங்களுக்கு யாகங்களுக்கும் பெயர் பெற்று விளங்கிய வேள்விக்குடி, காலப்போக்கில் வேளுக்குடி என மருவியது. இந்தக் கோயிலுக்கு ஏராளமான நிலங்களையும், ஆடு – மாடுகளையும் அள்ளித் தந்திருக்கின்றனர், மன்னர் பெருமக்கள். இரண்டாம் குலோத்துங்க சோழன், நெடுங்காலமாகத் தொழு நோயால் தவித்து வந்தான். வேள்விக்குடிக்குச் சென்று, தீர்த்தக் குளத்தில் நீராடி, பிரதோஷ பூஜை செய்; குணம் பெறுவாய் ! என அசரீரி முழங்க… அதன்படி, இங்கு வந்து, குளத்தில் நீராடி, பிரதோஷ பூஜை செய்ய… தொழு நோய் நீங்கப் பெற்றான் என்கிறது கல்வெட்டு ஒன்று.

திருவிழாக்கள்

பிரதோஷம், சனிப்பிரதோஷம், சிவராத்திரி

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வேளுக்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top