வேடசந்தூர் நரசிம்ம பெருமாள் திருக்கோயில், திண்டுக்கல்
முகவரி :
அருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில்,
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் – 624710.
இறைவன்:
நரசிம்ம பெருமாள்
இறைவி:
ஸ்ரீதேவி, பூதேவி
அறிமுகம்:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் என்னும் ஊரில் அருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. திண்டுக்கல்லில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் வேடசந்தூர் ஊர் அமைந்துள்ளது. வேடசந்தூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
முற்காலத்தில் இங்கு வசித்த பெருமாள் பக்தர்கள் சிலர், நரசிம்மருக்கு கோயில் கட்டவேண்டுமென விரும்பினர். ஆனால், எங்கு கோயில் அமைப்பது என அவர்களுக்குத் தெரியவில்லை. பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், குடகனாற்றின் கரையில் கோயில் எழுப்பும்படி சுட்டிக்காட்டினார். அதன்பின்பு பக்தர்கள் சுவாமி காட்சி தந்த வடிவத்திலேயே சிலை வடித்து, இங்கு கோயில் எழுப்பினர். முதலில் நரசிம்மருக்கு கோயில் அமைக்க விரும்பியதால், இந்த திருநாமத்தையே சுவாமிக்கு சூட்டினர்.
நம்பிக்கைகள்:
விபத்து மற்றும் எம பயம் நீங்க, ஆயுள் அதிகரிக்க, திருமணத் தடைகள் நீங்க இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்:
இத்தலத்தில் சுவாமி நரசிம்ம பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், இங்கு பெருமாளுக்கு நரசிம்ம வடிவம் கிடையாது. மூலஸ்தானத்தில் சங்கு, சக்கரத்துடன், அபய, வரத முத்திரைகள் காட்டியபடி சுவாமி காட்சி தருகிறார். பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது, அதிக உக்கிரத்துடன் இருந்தார். அவரை சாந்தப்படுத்தும்படி தேவர்கள் சிவனை வேண்டினர். எனவே, அவர் சரபேஸ்வரர் வடிவம் எடுத்து, உக்கிரத்தைக் குறைத்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் இங்கு இவர், சாந்தமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மேலும் சன்னதி முன்புள்ள மண்டபத்தில், சிவனின் இலிங்க வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இங்கு ஒரே சமயத்தில் சிவன், பெருமாள் இருவரின் தரிசனம் பெறலாம்.
குடகனாற்றின் கிழக்கு கரையில் அமைந்த கோயில் இது. மூலஸ்தானத்தில் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கிறார். இங்கு ஆறு தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி உத்தரவாகினியாக ஓடுவது விசேஷம். சுவாமி எதிரே கருடாழ்வார் சன்னதி இருக்கிறது. இத்தல இறைவன் பத்ம விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் வீர ஆஞ்சநேயர் தெற்கு நோக்கிய சன்னதியில் காட்சி தருகிறார். இவரது கையில் சவுகந்தி மலர் இருக்கிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வேடசந்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திண்டுக்கல்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை