வெள்ளூர் திருக்காமஸ்வரர் திருக்கோயில், திருச்சி
முகவரி
வெள்ளூர் திருக்காமஸ்வரர் திருக்கோயில், வெள்ளூர், முசிறி வட்டம், திருச்சி மாவட்டம் – 621 202.
இறைவன்
இறைவன்: திருக்காமஸ்வரர் இறைவி: சிவகாமசுந்தரி
அறிமுகம்
திருச்சி மாவட்டம் வெள்ளூர் அருகே அமைந்துள்ளது இந்த திருக்காமஸ்வரம் கோவில் ஐஸ்வர்ய தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் முசிறியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளூர் திருத்தலம் உள்ளது. இக்கோவிலின் மூலவர் திருக்காமேஸ்வரர் ஆவார். தாயார் சிவகாமசுந்தரி. இந்த கோவிலுக்கு பல சிறப்புகள் உண்டு. வேண்டியவர்களுக்கு அருளும் சிவகாமசுந்தரி இந்த கோவிலின் சிறப்புக்களில் ஒன்றாவார். சுமார் 1,600 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம். கி.பி. 6-ம் நூற்றாண்டில் முதலாம் விஜயாதித்த சோழனால் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றிருப்பதாக கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. தற்போது இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிவாலயமானது இரண்டு நுழைவாயில்களைக் கொண்டது. ஒன்று தெற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும் வாசல்கள் உள்ளன. கிழக்கு வாசல் வழியாக வந்தால் பலிபீடம், நந்திதேவர் மண்டபம் ஆகியவை உள்ளன. கோயிலின் பிரகாரம் திருமாளிகைப் பத்தியுடன் உள்ளது.
புராண முக்கியத்துவம்
சிவபெருமானின் சொல்லையும் மீறி, தட்சனின் யாகத்திற்குச் சென்றாள் தாட்சாயிணி. அங்கு அவளுக்கு அவமானமே மிஞ்சியது. தன் சொல் கேட்காத அன்னைக்கு, ஈசன் சாபம் அளித்தார். அதன்படி பூலோகத்தில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து, உரிய நேரம் வரும்போது கயிலை வந்து சேரும்படி அருளினார். இதையடுத்து பார்வதி என்ற பெயருடன், பர்வதராஜனிடம் வளர்ந்து வந்த தேவியானவள், கயிலாயமலையில் வீற்றிருக்கும் சிவபெருமானை நோக்கி தவம் புரியத் தொடங்கினாள். பார்வதியைப் பிரிந்த சிவபெருமான் கயிலையில் அசைவற்ற நிலையில் இருந்தார். இதனால் பிரபஞ்சத்திலும் ஓர் அணுவும் அசையவில்லை. இதே நிலை தொடர்ந்தால் உலகமே அழிந்துவிடும் என்று அஞ்சிய பிரம்மாவும், விஷ்ணுவும் தேவர்கள் சூழ, சிவபெருமானையும் பார்வதியையும் ஒன்றிணைக்க முயன்றனர். மன்மதனை அழைத்து சிவபெருமான் மீது, காமபாணத்தை ஏவுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் ஈசனின் மீது பாணம் தொடுக்க மன்மதன் தயங்கினான். உடனே தேவர்கள், “நீ ஈசன் மேல் காம பாணம் தொடுக்காவிட்டால், உனக்கு நாங்கள் சாபம் அளிப்போம்” என்று மிரட்டினர். இதனால் பயந்து போன மன்மதன், ஒரு புன்னை மர நிழலில் ஒளிந்து கொண்டு ஈசனின் மீது அம்பு விட்டான். அவன் விட்ட அம்பு, வில்லில் இருந்து வெளியேறும் முன்பாகவே, அவனை தன்னுடைய நெற்றிக் கண்ணைத் திறந்து எரித்தார் சிவபெருமான். அதோடு மன்மதன் விட்ட பாணமும் திசைமாறி, பார்வதியின் மீது பட்டது. அதில் அவர் பருவம் செய்தி, சிவபெருமானை வந்தடைந்தாள். அன்னைக்கு சிவகாம சுந்தரி என்று பெயர் ஏற்பட்டது. இந்த பெயர் கொண்டவரே இத்தல இறைவியாக திகழ்கிறார். இறைவனின் திருநாமமும் அதனாலேயே ‘காமேஸ்வரர்’ என்றானது.இந்த நிலையில் கணவனை இழந்த ரதிதேவி, தன் கணவரான மன்மதனுக்கு உயிர்ப்பிச்சை கேட்டாள். அவளுக்கு மனம் இரங்கிய இறைவன், மன்மதனுக்கு உயிர் கொடுத்து, அவன் ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரிவான் என்று அருள் புரிந்தார். ரதியும், மன்மதனும் இத்தலமான வெள்ளூர் வந்து மன்மதனுக்கு பழைய உடலைத் தர வேண்டுமென சிவபெருமானை வழிபட, ஈசனும் மனம் இரங்கி மன்மதனுக்கு உடலைத் தந்தார் என்று தல புராணம் சொல்கிறது. இந்த திருத்தலத்தில் உள்ள இறைவனானவர், மகாலட்சுமியால் வழிபடப்பட்டவர் என்பதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. அதாவது தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அந்த அமிர்தம் தேவர் களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டுமென எண்ணிய மகாவிஷ்ணு, மோகினி வடிவம் எடுத்து வந்தார். மோகினியின் அழகில் மயங்கிய சிவபெருமான், அவளை மோகிக்க அவர்களுக்கு ஐயப்பன் பிறந்தார். இதை அறிந்த மகாலட்சுமி, தன் கணவரான மகாவிஷ்ணுவின் மீது கோபம் கொண்டாள். பின்னர் வைகுண்டத்தை விட்டு வெளியேறி பூலோகம் வந்தாள். இங்கு வில்வாரண்ய சேத்திரம் எனும் வெள்ளூரில் சிவபெருமானை நோக்கி தவம் செய்தாள். பல யுகங்களாக தவம் செய்தும் அவளுக்கு, சிவபெருமான் காட்சி தரவில்லை. உடனே, மகாலட்சுமி தன்னை வில்வமரமாக மாற்றிக் கொண்டு சிவலிங்கத் திருமேனியில் வில்வ இலையை மழையாக பொழிந்து பூஜித்தாள். இதனால் மனம் மகிழ்ந்த ஈசன், மகாலட்சுமியின் முன்பாகத் தோன்றி, ஐயப்பனின் அவதார நோக்கத்தை விளக்கி, அவளை சாந்தப்படுத்தினார். பின்னர் அவளை, ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்கிராமமாக செய்து, மகாவிஷ்ணுவின் இதயத்தில் இருக்கும்படிச் செய்தார். மேலும் மகாலட்சுமியை ஐஸ்வரியத்தின் அதிபதியாகவும் இருக்கும்படி அருள்புரிந்தார். இதன் காரணமாக இந்த ஆலயத்தில் இருக்கும் மகாலட்சுமி, ‘ஐஸ்வரிய மகாலட்சுமி’ என்ற திரு நாமத்துடனேயே பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ராவணனுக்கு, இத்தல இறைவன் மீண்டும் உடல் வலிமை கொடுத்து, ஈஸ்வர பட்டம் சூட்டியதாக தல புராணம் சொல்கிறது. இத்தலத்தில்தான் சுக்ரன் ஈசனை வழிபட்டு போகத்திற்கு அதிபதியானார். குபேரன் இத்தல இறைவனை வழிபட்டு தனாதிபதியாக மாறினார்.
நம்பிக்கைகள்
தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற திருக்கோயில் இது. தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கும், போகத்திற்கு அதிபதியான சுக்ரன் ஜாதகத்தில் சரியாக இல்லையெனில் எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் காரியத்தடையும், மனக்குழப்பமும், பொருளாதார வீழ்ச்சியையும், திருமணத் தடையும், குழந்தையின்மையும், வியாபார வீழ்ச்சியையும் ஏற்படுத்துவார். எனவே, சுக்கிரதோஷம் நீங்கிட சுக்கிரனுக்கு அதிபதியான மஹாலக்ஷ்மியை சுக்ர ஹோரையில் இங்கு வந்து ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்து வழிபடலாம். திருமணம் நல்லபடியாக நடப்பதற்கு ஜாதகம் வைத்துப் பிரார்த்தனை செய்கிறார்கள். குழந்தை பாக்கியத்திற்கும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. இழந்த தன் கணவனை ரதிதேவி திரும்பப் பெற்ற திருத்தலம் என்பதால் தம்பதியர் இங்கே வந்து வணங்கினால் ஒற்றுமை மேலோங்கும். மாங்கல்ய பலம், திருமணத் தடை, ஐஸ்வர்ய யோகம், பிரிந்த தம்பதியர் இணைவதற்கு என்று மிகச் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.
சிறப்பு அம்சங்கள்
இத்தல சிவனை மகாலட்சுமி பிரதிஷ்டை செய்து வழிபட்டிருப்பது சிறப்பு. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற திருக்கோயில் இது. தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கு இந்த ஆலயம் வந்து வழிபடுவது சிறப்பு. வேறெங்கும் காணாத வகையில் வில்வமர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோயிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் அலைமகளாம் ஐஸ்வர்ய மஹாலட்சுமி அற்புத திருக்கோலத்தில் வீற்றிருக்கின்றாள்.
திருவிழாக்கள்
பிரதோஷம், சிவராத்திரி
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வெள்ளூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருச்சி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி