விளாப்பாக்கம் சமணக் குடைவரைக் கோயில், வேலூர்
முகவரி
விளாப்பாக்கம் சமணக் குடைவரைக் கோயில், விளாப்பாக்கம், வாலாஜா வட்டம், வேலூர் மாவட்டம் – 632 521
இறைவன்
இறைவன்: தீர்த்தங்கர்
அறிமுகம்
விளாப்பாக்கம் குடைவரை என்பது, வேலூர் மாவட்டத்தின் வாலாஜா வட்டத்தில் ஆற்காட்டுக்கு அண்மையில் அமைந்துள்ள விளாப்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ள குடைவரை ஆகும். ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலும், வேலூர் நகரிலிருந்து 30 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது பஞ்சபாண்டவர் மலை. ஆற்காடு மற்றும் கண்ணமங்கலம் இடையே நெடுஞ்சாலை வழியாக உள்ள ஒரு சிறிய கிராமம் விளாப்பாக்கம். இந்த மலைப்பகுதி 8 ஆம் மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஒரு செழுமையான சமண மையமாக திகழ்ந்துள்ளது. இந்த சமணக் குடைவரைக் கோவில், சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளுடன் கூடியதாக இயற்கை குகைகளாய் மலை மேல் அமைந்துள்ளது. திருப்பான்மலை என அழைக்கப்படும் இம்மலை முற்காலத்தில் பெரிய திருப்பாமலை என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இக்குடைவரையின் மண்டபம் மிகவும் பெரியது. மண்டபத்தில் இரண்டு வரிசைகளில் தூண்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் ஆறு முழுத்தூண்கள் உள்ளன. சுவரோடு ஒட்டியபடி அரைத்தூண்களும் உள்ளன. தூண்களில் சதுரம், எண்கோணப் பட்டைகள் போன்ற பகுதிகள் எதுவும் காணப்படவில்லை. போதிகைகளும் எளிமையானவையாகவே காணப்படுகின்றன. இது முழுமையாகச் செதுக்கி முடிக்கப்படாத குடைவரையாகவே காணப்படுகின்றது. இது மகேந்திர பல்லவ மன்னன் இறுதிக் காலத்தில் தொடங்கப்பட்டு முழுதும் நிறைவேறாமல் பணி எனக் கருதப்படுகிறது. பிற்காலத்தில் இந்தக் குடைவரையைச் சமண முனிவர்கள் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இதற்கான கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன. குடைவரையில் முகப்புப் பகுதிகளில், சமணச் சிற்பங்களும் காணப்படுகின்றன. இவ்வூரில் உள்ள வேறு கோயில்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் 9 ஆம் நூற்றாண்டில் இக்குடைவரையில் சமணர்கள் வாழ்ந்ததை உறுதி செய்கின்றன.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
விளாப்பாக்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஆற்காடு
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை