Wednesday Dec 25, 2024

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில், வேலூர்

முகவரி

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில், விரிஞ்சிபுரம், வேலூர் மாவட்டம் – 632104.

இறைவன்

இறைவன்: மார்க்கபந்தீஸ்வரர் / வழித்துணை வந்த நாதர் இறைவி: மரகதாம்பிகை

அறிமுகம்

வழித்துணைநாதர் கோயில் அல்லது மார்க்கபந்தீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 1000 வருடங்கள் மேல் பழமையான சிவன் கோயிலாகும். மேற்கே சுமார் 12 கி.மீ தொலைவில் சென்னை – பெங்களுரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. கோவில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 1 கி.மீ வடக்கில் அமைந்துள்ளது. அருகிலேயே பாலாறு அமைந்துள்ளது. இத்தலம் மிக்க பழமையான ஒன்று. அடி முடி காணும் போட்டியில் பொய் கூறிய பிரம்மாவின் தலை கொய்யப்பட்டவுடன் அவர் இறைவியை வேண்ட, இறைவி இத்தலத்து இறைவனை நோக்கி தவமியற்ற பிரம்மனுக்கு அறிவுரை வழங்கினார். பிரம்மனும் இறைவனை நோக்கி தவமியற்ற பிரம்மனின் சாபம் போக்க பிரம்மனை மனிதனாய் பிறக்க வைக்கிறார் இறைவன். பிரம்மன், சிவசர்மன் என்ற பெயரில் மனிதனாய் பிறக்க தக்க தருணத்தில் வந்து இறைவனே பிரம்மனுக்கு உபதேசம் செய்து ஆட்கொண்டார். இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள தேவார வைப்புத்தலமாகும். விரிஞ்சிபுரத்தலத்தில் அமைந்துள்ள சிம்மக்குளத்தில் பக்தர்கள் நீராட அனுமதி அளிக்கப்படுகின்றது. தமிழகத்தின் எந்தவொரு சிம்மக்குளங்களிற்கும் இல்லாத சிறப்பை உடையது இத்திருத்தலச் சிம்மக்குளம்.

புராண முக்கியத்துவம்

சிவசர்மன் சிறுவனாக இருந்ததால் லிங்கத்திற்கு (லிங்கம் உயரமாக இருந்ததால்) நீருற்ற முடியவில்லை. சிவசர்மனாக பிறந்த பிரம்மன் தன் ஊழ்வினை தவற்றை உணர்ந்து, இறைவனிடம் முடியை காண இயலவில்லை என்று வேண்ட அவரும் தனது முடியை சாய்ந்து கொடுக்கிறார். அண்ணாமலையில் இறைவனின் முடியை காணாத பிரம்மா இத்தலத்தில் தான் இறைவனின் முடியை கண்டார். லிங்கம் சுயம்பு லிங்கமாக சற்று முன்னோக்கி சாய்ந்துள்ளது. பிரம்மா உபதேசம் பெற்ற தலம். மைசூர் நகர வணிகர் ஒருவர் காஞ்சி மாநகர் சென்று மிளகு விற்பது வழக்கம். அவ்வாறு விற்க செல்லும் வேளையில் இத்தலத்தில் அந்த வணிகர் இரவு தங்க நேரிட்டது. இத்தலத்து இறைவனை வழித்துணையாக வரும் படி வேண்ட, இறைவனும் வேடன் வடிவில் வணிகரை பின் தொடர்ந்து சென்று திருடர்களிடமிருந்து காத்தார். அதற்கு காணிக்கையாக மூன்று மிளகு பொதிகளை விற்ற பணத்தை காணிக்கையாக செலுத்தினார் அந்த வணிகர். வணிகரின் கனவில் இறைவன் தனது திருவிளையாட்டை எடுத்துரைக்க இறைவனின் அருளில் நெகிழ்ந்தார் வணிகர். இப்போதும் அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் “பார் வேட்டை” என்ற பெயரில் கோவிலில் இச்சம்பவத்தை நடித்துக் காட்டுவர். எனவே தான் இத்தலத்து இறைவனுக்கு மார்க்கபந்தீஸ்வரர் என்ற பெயரும், வழித்துணை வந்த நாதர் என்ற பெயரும் ஏற்பட்டது.

நம்பிக்கைகள்

இக்கோவிலில் 108 லிங்கங்கள் ஒரே லிங்கத்திலும், 1008 லிங்கங்கள் ஒரே லிங்கத்திலும் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றை வழிபடின் ஒரே நேரத்தில் 108 மற்றும் 1008 லிங்கங்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். இத்தலத்தின் மரம் பனை மரம். இம்மரம் ஒரு ஆண்டில் வெண்மையான காய்களையும், மறு ஆண்டில் கருமையான காய்களையும் காய்ப்பது தனி சிறப்பு. தொண்டை மண்டத்தில் பனை மரம் தல விருட்சமாக இருக்கும் தலங்கள் இரண்டு. அதில் ஒன்று விரிஞ்சிபுரம். மற்றொன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் செய்யாறு என்றழைக்கப்படும் திருவத்திபுரம். பண்டைக் காலத்தில் இத்தலமானது ‘நைமி சாரண்யம்’ என்றழைக்கப்பட்ட முனிவர்கள் கூடும் புண்ணியத்தலமாக விளங்கியது. இறைவன் இறைவியிடம், அம்பிகை கறுப்பு நிறமாய் இருப்பதால் ‘ஹே சங்கரீ’ என விளையாட்டாக அழைக்க இதனால் கோபமுற்ற இறைவி பாலாற்றின் வடகரையில் பொற்பனங்காட்டினுள் ஐந்து வேள்விக் குண்டங்களை அமைத்து அதன் நடுவே ஒற்றைக்காலில் நின்று தவமிருந்தாள். அத்தவத்தின் முடிவில் சிம்மகுளத்தில் நீராடி தனது கருமை நிறம் நீங்கி பொன்னிறம் கொண்ட மரகதவல்லியாக இறைவனின் இடப்பாகத்தில் இடம் கொண்டாள். இதனால் தான் இத்தலத்து மரம் பனை மரமாக உள்ளது. பிரம்மன் சாப விமோசனம் பெற்ற நாள் கார்த்திகை மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை. ஒவ்வொரு ஆண்டும் அதே நன்னாள் இரவில் பெண்கள் அம்பிகை, பிரம்மன் ஆகியோர் நீராடிய சிம்ம குளத்தில் நீராடி ஈர ஆடையுடன் கோவில் மண்டபத்தில் படுத்து உறங்குவர். நீராடி ஈர ஆடையுடன் உறங்கும் பெண்களுக்கு எவ்வித குளிரும் தாக்குவது இல்லை என்பது கண்கூடு. இறைவன் இவ்வாறு நீராடிய பெண்களின் கனவில் வந்து பூக்கள், பழங்கள், புத்தாடைகள் ஆகியவற்றினைத் தாங்கியபடி முதியவர் கனவில் காட்சி தந்தால் அப்பெண்கள் விரைவில் கருத்தரிக்கும் பாக்கியத்தினை அடைவர் என்பது திண்ணம். இத்தலத்தின் தீர்த்தம் சிம்ம தீரத்தம் ஆகும். இதில் ஆதிசங்கரர் பீஜாட்சர யந்திரத்தினை அமைத்துள்ளார். இதில் நீராடினால் நீராடுபவர்களை பற்றிய தீய சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை. மேலும் ஜாதகத்தில் வாகன விபத்து கண்டங்கள் உள்ளவர்கள் இத்தலத்து இறைவனை வணங்கி வழிபடின் விபத்து கண்டங்களிலிருந்து இறைவனால் காக்கப்படுவர் என்பது திண்ணம். இத்தலத்து இறைவனின் பெருமையை உணர்ந்த வட இந்திய மக்கள் இத்தலத்தை கண்டுபிடித்து வந்து இறைவனை வணங்கி செல்கின்றனர். அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்கள் வணங்கி பயணம் இனிதாக அமைய வேண்ட இறைவன் கண்டிப்பாக வழித்துணையாக வருவான் என்பது திண்ணம்.

சிறப்பு அம்சங்கள்

இத்தலத்து வடக்கு பக்க கோபுர வாயில் எப்போதும் திறந்தே இருக்கும். இதன் வழியாக தேவர்கள் தினமும் இறைவனை வழிபடுவதாக செய்தி. திருவாரூர் தேரழகு. திருவிரிஞ்சை மதிலழகு. கோவிலின் மதில் சுவர்கள் உயரமானவை, அழகானவை. இத்தலத்தில் மூன்று பைரவர்கள் அருள் பாலிக்கின்றனர். இத்தலத்து கோவிலில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தலத்து இறைவனை வணங்கிடில் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர் என்பது திண்ணம். இத்தலத்து இறைவன் சிவசர்மனாகிய பிரம்மனுக்கு உபநயனம் செய்வித்து ஒரு முகூர்த்த காலத்தில் 4 வேதங்கள், 6 சாஸ்த்திரங்கள், 18 புராணங்கள் மற்றும் 64 கலைகளையும் போதித்து ஆட்கொண்டவர். பிரம்மனுக்கு சிவபெருமானே சிவ தீட்சை அளித்த தலம் என்ற சிறப்புடையது இத்தலம். நாமும் இத்தலத்தில் சிவ தீட்சை பெற்றால் அதை விட பெரிய பேறு இவ்வுலகில் இல்லை. இத்தலத்து இறைவன் அறிவின் சிகரம். இத்தலத்து இறைவன் பிரம்மனுக்கு போதித்து வழிகாட்டியதால் மார்க்க சகாயர் என்றழைக்கப்படுகிறார். இத்தலத்து இறைவன் மிளகு வணிகருக்கு வழித்துணையாக சென்றதால் வழித்துணை வந்த நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். கோயிலின் உள்ளே தென்புறத்தில், “நேரம் காட்டும் கல்” இருக்கிறது. அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்.

திருவிழாக்கள்

தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும். பிரதோஷம் வழிபாடு, சிவராத்திரி, வைகாசி விசாகம், சித்ரா பெளர்ணமி, தை அமாவாசை போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

செதுவாலை

அருகிலுள்ள இரயில் நிலையம்

காட்பாடி

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top