வல்லப்பாக்கம் அருகே 1000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வரலாற்று சிறப்புமிக்க திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகிறது. அப்பணியின் தொடா்ச்சியாக வல்லப்பாக்கம், அகத்தீசுவரா் கோயிலில் தொல்லியல் ஆலோசகா் ஸ்ரீதரன், செயல் அலுவலா் வேள் அரசு, ஆய்வா் திலகவதி ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
அதில் அக்கல்வெட்டு 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது எனத் தெரிந்தது. இது தொடா்பாக தொல்லியல் ஆலோசகா் கி. ஸ்ரீதரன் கூறியதா வது: வல்லபாக்கம் கோயில் பாண்டிய மன்னன் சடையவா்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் கி .பி . 1263-ல் சுட்டப்பட்டு, வழிப்பாட்டுக்காக தானம் அளித்திருக்கும் செய்தியை அறிய முடிந்தது. மேலும், இக்கோயில் அம்மன் வடிவாம்பாள் சன்னதியில் காணப்படும் கல்வெட்டில் இவ்வூரில் திப்பசமுத்திரம் என்னும் ஏரியை திப்பரசன் என்பவா் ஏற்படுத்திய செய்தி
காணப்படுகிறது. மேலும் இவ்வூா் ஜெயம் கொண்ட சோழமண்டலத்து ஊற்றுக்காட்டுக் கோட்டத்து வல்லப்பாக்கமான ராசராசநல்லூா் என்று குறிப்பிடப்படுவதால் இவ்வூா் ராசராச நல்லூா் எனவும் அழைக்கப்பட்டது. மேலும் இக்கோயில் ஆய்வின் போது திருச்சுற்றில் முதலாம் இராசராச சோழனின் கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல் ஒன்றும் காணப்பட்டது.
வல்லப்பாக்கத்தைச் சோ்ந்த ஜகதீசன், தசரதன் மற்றும் கிராம இளைஞா்கள் கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல் ஒன்று கற்குவியலுக்கு கீழே காணப்பட்டதாகத் தெரிவித்தனா் . எனவே கற்குவியலாக இருந்த அந்த இடத்தில் கற்களை அகற்றி ஆய்வு செய்தபோது செவ்வக வடிவமான தளிக்கல்லில் மூன்று புறமும் கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்தது.
தொண்டை நாட்டில் சிறப்பாக ஆட்சி செய்த பாா்த்திவேந்திரபன்மா் என்ற மன்னரின் 16-வது ஆட்சி ஆண்டு கல்வெட்டு காணப்படுகிறது. கல்வெட்டு அருகில் தலைப்பாகம் உடைந்த நிலையில் பிரயோக சக்கரத்துடன் கூடிய திருமால் சிற்பமும் காணப்பெற்றது. எனவே பெருமாள் கோயிலை எடுப்பித்து அஞ்கள் வழிபாட்டிற்கு நிலம் தானம் அளித்தது செய்தியும் அறிய முடிகிறது. மேலும் இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் சிறப்பு குறித்து தொல்லியல் துறை ஆணையா் சிவானந்ததுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட தொல்லியல் அலுவலா் லோகநாதன் அவா்கள் தலைமையில் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் அனைத்தும் படியெடுக்கப்பட்டது
என்றாா்.