Saturday Jan 18, 2025

வடுவூர் கோதண்டராமர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், வடுவூர், திருவாரூர் மாவட்டம் – 614019. போன்: +91- 4367 – 267 110.

இறைவன்

இறைவன்: கோதண்டராமர்

அறிமுகம்

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் கிராமத்தில் அமைந்துள்ள கோதண்ட ராமசுவாமி கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இந்த கோவில் தட்சிண அயோத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் பறவைகள் சரணாலயத்தின் கரையில் அமைந்துள்ளது மற்றும் காவிரியின் துணை நதிக்கு அருகில் அமைந்துள்ளது. மூலவர் ராமர். சரபோஜி ராஜா ராமர் சிலையை நிறுவி இந்தக் கோயிலைக் கட்டியதாக நம்பப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

வனவாசம் முடித்தபிறகு, ராமபிரான் அயோத்திக்கு கிளம்ப தயாரானார். அப்போது வனத்தில் அவரது தரிசனம் பெற்ற மகரிஷிகள், அவரைத் தங்களுடனேயே இருக்கும்படி வேண்டினர். அவர்களது கோரிக்கையை ஏற்ற ராமர், மறுநாள் அவர்களைச் சந்திப்பதாக சொன்னார். தனது உருவத்தை சிலையாக செய்து, தான் தங்கியிருந்த இடத்தின் வாசலில் வைத்து விட்டார். ரிஷிகள் அந்த சிலையைப் பார்த்தனர். அதன் அழகில் லயித்து, ராமபிரானிடம், “”ராமா! இந்தச் சிலை உயிரோட்டம் உள்ளதாக உன்னைப் போலவே இருக்கிறது. இது எப்படி வந்தது? அதை நாங்கள் வைத்துக் கொள்ள விரும்புகிறோம்,” என்றனர். ராமர் ஒன்றும் தெரியாதவர் போல, “”அப்படியா! அப்படியானால் உங்களுடன் நான் இருப்பதைவிட அந்தச் சிலை இருப்பதைத்தான் விரும்புகிறீர்கள் போலும்!” என்றார். சிலையில் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள், தாங்கள் பூஜிக்க அச்சிலையை தரும்படி கேட்டனர். அதன்படி ராமர் அவர்களிடம் சிலையை கொடுத்துவிட்டு, அயோத்தி திரும்பினார். பிற்காலத்தில், திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த பெருமாள் பக்தர்கள் இந்த சிலையை பூஜித்து வந்தனர். மேலும் சீதை, லட்சுமணர், பரதன், ஆஞ்சநேயருக்கும் சிலை வடித்தனர். அந்நியர் படையெடுப்பின்போது, பாதுகாப்பிற்காக இச்சிலையை தலைஞாயிறு என்னும் தலத்தில் மறைத்து வைத்தனர். தஞ்சையை சரபோஜி மன்னர்கள் ஆண்டுவந்தபோது, ஒருநாள் மன்னரின் கனவில் தோன்றிய ராமர், தான் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படி தலைஞாயிறு சென்ற மன்னர் சிலைகளை மீட்டு வரும் வழியில் வடுவூரில் தங்கினார். அவரைச் சந்தித்த பக்தர்கள் சிலர், தங்கள் ஊரிலேயே சிலையைப் பிரதிஷ்டை செய்ய வேண்டுகோள்விடுத்தனர். பக்தர்களின் வேண்டுதலை ஏற்ற மன்னர், இங்கேயே ராமபிரானை வைத்துச் சென்றார். அதன்பின் மூலஸ்தானத்தில் கல் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

நம்பிக்கைகள்

ராமரிடம் வேண்டிக்கொள்ள பெற்றோர் சொல் கேட்கும் குழந்தைகள் பிறப்பார்கள், நியாய சிந்தனை உண்டாகும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

மூலஸ்தானத்தில் ராமபிரான், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் காட்சி தருகிறார். மார்பில் மகாலட்சுமி பதக்கம் மற்றும் சாளக்கிராம மாலை அணிந்திருக்கிறார். ராமரின் பிறந்த நட்சத்திரமான புனர்பூசத்தின் போது, திருமஞ்சனம் செய்து வழிபடுகிறார்கள். அன்று மாலையில் இவர் சீதையுடன் புறப்பாடாகிறார்.ராமநவமியை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. ஏழாம் நாள் திருக்கல்யாணம், 9ம் நாள் தேர்த்திருவிழா நடக்கிறது. ஐந்தாம் நாளில், இவர் ஆண்டாள் திருக்கோலத்தில் எழுந்தருளுவது விசேஷம். அட்சய திரிதியை அன்று ராமர் கருடசேவை சாதிக்கிறார்.

திருவிழாக்கள்

ராமநவமியை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வடுவூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top