Thursday Jul 04, 2024

வடபழனி வேங்கீஸ்வரர் திருக்கோயில், சென்னை

முகவரி

அருள்மிகு வேங்கீஸ்வரர் திருக்கோயில், வடபழனி, சென்னை – 600026. தொலைபேசி: +91 44 2483 8362

இறைவன்

இறைவன்: வேங்கீஸ்வரர் இறைவி: சாந்தநாயகி

அறிமுகம்

சென்னை வடபழனி என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது முருகன் கோயில். ஆறுபடை வீடுபோல் அத்தனை பிரசித்தம். அந்தக் கோயிலுக்கு எதிர்ப்புறம் வடபழனி 100 அடி சாலை (சிக்னல்) பேருந்து நிறுத்தத்தின் அருகில் கம்பீரமாக அமைந்திருக்கிறது, சாந்தநாயகி சமேத வேங்கீஸ்வரர் ஆலயம். பழைமை வாய்ந்த இந்தக் கோயில் புனரமைக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் 2015-ம் ஆண்டில் நடைபெற்று புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. மகா சிவராத்திரி அன்று விடிய விடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்வதும், பிரதோஷ தினத்தில் நந்தி அபிஷேகம், அன்னாபிஷேக நாளில் காய்-கனி பந்தலோடு, சாதத்தால் அலங்கரிக்கப்பட்ட ஈசனைக் காண கண் கோடி வேண்டும்.

புராண முக்கியத்துவம்

வண்டுகள் தீண்டும் முன்னரே மலர்களைப் பறித்து, இறைவனை பூஜிக்க விரும்பினார் ஒரு முனிவர். அதனால், பொழுது விடியும் முன்னரே மரங்களில் ஏறி பூக்களைத் தீண்டுவதில் வண்டுகளை முந்திக்கொண்டார். இவரது பக்தியைப் போற்றும் வகையில் எளிதாக மரம் ஏற அவருடைய கால்களை, புலிக் கால்களாக மாற்றித் தந்தான் இறைவன். அதனால் அவர், `புலிக்கால் முனிவ’ரானார். இவரை `வியாக்கிர பாதர்’ (புலிப்பாதம் கொண்டவர்) என்றும் அழைப்பார்கள். அந்த வேங்கை(புலி)க் கால் முனிவர் வழிபட்ட ஈசனாதலால், இந்தக் கோயில் மூலவர், `வேங்கீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். சிவபெருமானின் திருநடனங்களைக் காண விரும்பி, அத்திரி முனிவர்-அனுசூயா தம்பதியருக்கு மகனாக அவதரித்தார் ஆதிசேஷன். இவரும் வியாக்கிரபாதரும் சேர்ந்து சிவப் பரம்பொருளை வழிபட்ட ஸ்தலம்தான் இந்த வேண்டிய வரம் தரும் வேங்கீஸ்வரம். கார்கோடகன் வழிபட்ட இடம் தான் கோடன் பாக்கம் ஆகி அது பின்னர் கோடம்பாக்கமாக மாறியது. கோடம்பாக்கத்தின் ஒரு பகுதி பின்னர் வடபழனி ஆனது. கோடம்பாக்கத்தில் இருக்கும் வேங்கீஸ்வரம் கோவில் கார்கோடக முனிவர், பதஞ்சலி, வியாக்ரபாதர் முதலான பல முனிவர்களால் வழிபடப்பட்ட ரொம்ப பழமையான கோவில்

சிறப்பு அம்சங்கள்

ராஜ கோபுரம் : ஏழு நிலைகளைக்கொண்ட ராஜகோபுரம் கோயிலின் உயர்வையும் பெருமையையும் அருளையும் பறைசாற்றி நிற்கிறது. கிழக்கு நோக்கிய இதன் வழியே நுழைந்தால், தங்க முலாம் பூசிய பெரிய கொடிமரத்தின் `பளீர்’ கண்ணைப் பறிக்கிறது. அழகிய வேலைப்பாடுகளுடன் பலிபீடம், சிறிய மண்டபத்துடன்கூடிய நந்தீஸ்வரர். இவையாவற்றையும் அடங்கிய முன் மண்டபம் கலையை உணர்த்தும் தூண்களுடன் காணப்படுகிறது. உள்ளே சென்றால் வலது புறம் வியாக்கிர பாதரும் இடது புறம் பதஞ்சலி முனிவரும் தெற்குப் புறத்தில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் ஆகியோரும் நின்ற கோலத்தில் அருள் வழங்குகிறார்கள். தனிச் சிறப்பு : கோயிலின் வசீகரிக்கும் அமைப்பும் பக்திப் பெருக்கும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. கருவறையின் வெளிப்புறம் வெள்ளி நிறத்தில் பளபளக்கிறது. அங்கே ஐந்து தலை நாகத்துடன் வேங்கீஸ்வரர் வீற்றிருக்கும் அமைதியும் அம்சமும் நம்மை மெய்சிலிர்க்கச் செய்கிறது. வேங்கீஸ்வரரைத் தரிசித்துவிட்டு வெளியே வந்தால், தனிக் கோயில் கொண்டு அமர்ந்திருக்கிறார் பிள்ளையார். அவரையடுத்து அமர்ந்தநிலையில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். யானையின் பின்புற வடிவில் (கஜபிருஷ்டத் தோற்றம்) விமானம் கட்டப்பட்டுள்ளது தனிச் சிறப்பு. பின்புறம் மேற்கு நோக்கி விஷ்ணுவும் வடக்குப் புறம் நின்ற கோலத்தில் பிரம்மாவும் உள்ளனர். தெற்கு நோக்கிய தியான சண்டிகேஸ்வரர், துர்க்கையைத் தரிசித்தால் பலன் அதிகம். சுப்பிரமணியர் வள்ளி – தெய்வானையோடு தனிக் கோயிலில் காட்சிதருகிறார். வடமேற்கு மூலையில் காசி விஸ்வநாதர்-விசாலாட்சி, மகாலட்சுமியை வலம் வந்த பின்பு, 24 தூண்களுடன்கூடிய விசாலமான மண்டபத்தின் வழியாக வந்தால்… அழகிய முன்மண்டபத்துடன்கூடிய தனிக் கோயில். அதில் இருபுறமும் உள்ள சிலை வடிவங்கள் அழகான கலைத் தோற்றத்துடன் காணப்படுகின்றன. வழவழப்பான மார்பிள் தரை குளுமையளிக்கிறது. உள்ளே நின்ற கோலத்தில் சாந்தநாயகி அருள்புரிகிறார். பிரதோஷ மகிமையும் பலன்களும் : புண்ணிய தினங்களில் ஆலயங்களில் வழிபடுவது உயர்ந்த பலன்களைத் தரவல்லது. பிரதோஷ காலம் அப்படிப்பட்ட வல்லமைகொண்டது. பாற்கடலைக் கடைந்தபோது வாசுகி எனும் பாம்பு, வலி தாங்காமல் ஆலகால விஷத்தைக் கக்கியது. அந்த விஷத்தை இறைவன் உட்கொள்ள… உமையவள் பதற, கண்டத்தில் (தொண்டை) விஷத்தை நிறுத்தினார். பெருமான், ‘நீலகண்டன்’ எனப் பெயர் பெற்றார். தேவர்கள் தங்கள் ஆசை நிறைவேற சிவன் கட்டளைப்படி மீண்டும் பாற்கடலைக் கடைந்தனர். லட்சுமி, ஐராவதம், காமதேனு, கற்பக விருட்சம், சிந்தாமணி, சூடாமணி, கவுஸ்தபமணி முதலியன தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக்கொண்டார். மற்றவற்றை தேவேந்திரன் அடைந்தார். உறக்கமின்றி கடலைக் கடைந்ததும் அமிர்தம் கிடைத்தது. தேவர்கள் அதை உண்டு மகிழ்ந்து ஆடிப் பாடியதால் சிவபெருமானை மறந்தனர். அடுத்த நாள் திரயோதசி அன்று அந்தக் குற்றத்தை மன்னித்தருளுமாறு பிரம்மா, விஷ்ணு, முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள், சிவாலய தரிசனத்தில் ஈடுபட்டார்கள். அந்த நேரத்தில் நாமும் சிவனை வழிபட்டால் காலை, மதியம், மாலை என முப்பொழுதும் தரிசனம் செய்த பலன் கிடைக்கும். வறுமை, பயம், பிணி, பாவம் அகலும். திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்களும் உண்டாகும். ‘சனிப் பிரதோஷம்’ மிகச் சிறந்தது. பிரதோஷ நாளில் சிவ வாத்தியங்கள் இசைக்கும்போது சிவனின் ஆனந்த தாண்டவத்தைக் காணும் உணர்வை உண்டாக்கும். அம்மன் சந்நிதியின் பின்புறத்தில் பைரவர் இருக்கிறார். அரசு-வேம்பு மரங்கள் இதம் தருகின்றன. தேர் போன்ற பச்சை சலவைக் கல்லாலான உயர்ந்த மண்டபத்தில் நவகிரகங்களைச் சுற்றி வந்து, தனிச் சந்நிதியில் இருக்கும் சனீஸ்வரர், முனீஸ்வரர், சந்திரரையும் தரிசிக்கலாம். மறுபுறம் சூரியர், வீரபத்திரரை வணங்கி முடித்து சற்று நேரம் அமர்ந்தால் மனதுக்கு நிம்மதி, புத்துணர்ச்சி கிடைக்கும்

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வடபழனி

அருகிலுள்ள இரயில் நிலையம்

வடபழனி மெட்ரோ நிலையம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top