வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் திருக்கோயில், சேலம்
முகவரி
அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், வடசென்னிமலை, சேலம் மாவட்டம் – 636121. போன்: +91- 4282 – 235 201.
இறைவன்
இறைவன்: பாலசுப்ரமணியர் இறைவி: வள்ளி, தெய்வானை
அறிமுகம்
பாலசுப்ரமணிய சுவாமி கோயில் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள வடசென்னிமலையில் அமைந்துள்ளது. இது சேலம் நகரத்திலிருந்து 64 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு முருகப்பெருமான் சிரிக்கும் குழந்தையாகவும், குருஹஸ்தராகவும், துறவியாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இது இக்கோயிலில் உள்ள அரிய அம்சமாகும். இக்கோயிலில் காமீக ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன
புராண முக்கியத்துவம்
வடசென்னிமலையில் இருக்கும் பாலசுப்பிரமணியர் ஒரு குன்றின் மீது கோயில் கொண்டுள்ளார். பல்லாண்டுகளுக்கு முன்பு இக்குன்றின் அடிவாரத்தில் சில சிறுவர்கள் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சிறுவன் ஒருவன் அவர்களுடன் விளையாட்டில் சேர்ந்துகொண்டான். சிறிது நேரம் விளையாடிய அவன், திடீரென ஒன்றும் சொல்லாமல் குன்றின் மீது வேகமாக ஏறினான். சிறுவர்களும் விளையாட்டு எண்ணத்தில் பின் தொடர்ந்தனர். ஓரிடத்தில் நின்ற அச்சிறுவன், பேரொளி தோன்ற அதன் மத்தியில் மறைந்துவிட்டான். உடன் சென்ற சிறுவர்கள், அதிர்ச்சியடைந்து ஊர்மக்களிடம் நடந்ததை கூறினர். மக்கள் வந்து பார்த்தபோது, சிறுவன் மறைந்த இடத்தில் மூன்று சுயம்பு சிலைகளும், அவ்விடத்தில் பூஜை செய்ததற்கான அடையாளங்களும் இருந்தன. சிறுவனாக வந்து அருள் புரிந்தது முருகன்தான் என்றறிந்த மக்கள் இவ்விடத்தில் கோயில் கட்டினர்.
நம்பிக்கைகள்
பவுர்ணமியில் கிரிவலம் சென்று வணங்க தீமைகள் விலகும் என்பது நம்பிக்கை. மன அமைதி வேண்டுபவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். நிலம், வீடு வாங்க விரும்புவோர் மலைப்பாதையில் உள்ள அவ்வையார் சிலை அருகில் கல் வைத்து வேண்டுகின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
முக்கோல தலம்: கருவறையில் காட்சி தரும் பாலசுப்பிரமணியர் குழந்தை வடிவில் மேற்கு நோக்கியபடி சிரித்த கோலத்திலும், அருகிலுள்ள தண்டாயுதபாணி துறவற கோலத்திலும், உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் கிரகஸ்த நிலையிலும் (குடும்பம்) காட்சி தருகின்றனர். இவ்வாறு முருகன் ஒரே தலத்தில் மூன்று கோலங்களிலும் காட்சி தருவது அபூர்வம். ஒரேசமயத்தில் முருகனின் இம்மூன்று கோலங்களையும் வணங்கினால் சகல நன்மைகளும் கிடைக்கும், பவுர்ணமியில் கிரிவலம் சென்று வணங்க தீமைகள் விலகும் என்பது நம்பிக்கை. இம்மூன்று கோலங்களும் வாழ்க்கையின் பெரும் உண்மையையும் விவரிக்கின்றது. மனிதன் குழந்தையாக இருக்கும்போது மகிழ்ச்சியின் ஒட்டுமொத்த வடிவமாக இருக்கிறான். அவனே இல்லற வாழ்க்கை எனும் பந்தத்தில் இருக்கும் போது மகிழ்ச்சியும் துன்பமும் கலந்த கடமையில் உழல்கிறான். எதன் மீதும் பற்றில்லாத துறவற நிலையை அடையும்போது எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைக்கிறான். மொத்தத்தில் எதன் மீதும் அதிக பற்று வைக்கவேண்டாம் என இத்தலத்து முருகன் உணர்த்துகிறார். சிறப்பம்சம்: இங்குள்ள தண்டாயுத பாணி கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன், தலைப்பாகை அணிந்து காட்சி தருகிறார். நடுமலையில் இடும்பன் சன்னதியும், அதனருகில் நெல்லிக்கனியை முருகனுக்கு அவ்வையார் வழங்கிய காட்சியை விவரிக்கும் சிலையும் உள்ளது. இவ்விடத்தில், பக்தர்கள் வீடு போல கற்களை குவித்து வைக்கின்றனர். இவ்வாறு செய்வதால் வீடு கட்டும் பாக்கியம் பெறலாம் என நம்புகின்றனர். சன்னதிக்கு செல்லும் படிக்கட்டுகளில் அறுபது வருடங்களை குறிக்கும்படியாக படிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பூஜை செய்தால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கை.
திருவிழாக்கள்
பங்குனி உத்திரம், திருகார்த்திகை, கந்தசஷ்டி, தைபூசம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வடசென்னிமலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஆத்தூர், சேலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி, கோயம்பத்தூர்