வடக்கூர் ஆதிகயிலாசநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை
முகவரி
வடக்கூர் ஆதிகயிலாசநாதர் திருக்கோயில், வடக்கூர், ஆவுடையார்கோவில் அஞ்சல் புதுக்கோட்டை மாவட்டம் – 614618
இறைவன்
இறைவன்: ஆதிகயிலாசநாதர் இறைவி: சிவகாமியம்மை
அறிமுகம்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி என்ற ஊரிலிருந்து மீமீசல் செல்லும் சாலை வழியில், அறந்தாங்கியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் ஆவுடையார்கோவில் உள்ளது. அதன் அருகே உள்ள வடக்கூர் என்று பகுதியில் இக்கோவில் உள்ளது. இன்றைய நாளில் வடக்கூர் என்று அறியப்படும் இப்பகுதி தான் தேவாரம் பாடப் பெற்ற நாட்களில் பெருந்துறை என்று வழங்கப்பெற்றது.. வடக்கூரிலுள்ள ஆதிகயிலாசநாதர் கோவில் தான் தேவார வைப்புத் தலம். மாணிக்கவாசகர் ஆவுடையார்கோவிலைக் கட்டிய பிறகு, இக்கோவில் இருக்கும் இடம் திருப்பெருந்துறை என்று பெயர் பெற்று, வடக்கூர் திருப்பெருந்துறை ஊரின் ஒரு பகுதியாக மாறி விட்டது. இறைவன் ஆதிகயிலாசநாதர் என்றும் இறைவி சிவகாமியம்மை என்றும் அழைக்கப்படுகிறார்கள். இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத்தலமாகும்.
புராண முக்கியத்துவம்
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 3 நிலை இராஜகோபுரம் 1990-ம் ஆண்டு ஜூன் மாதம் திருக்குட நீராட்டு விழா நடைபெற்ற போது அமைக்கப்பட்டது. கோபுர வாயில் கடந்து உள்ளே நுழைந்தால் நேரே முன் மண்டபம் உள்ளது. அதைக் கடந்து சென்றால் அர்த்த மண்டபம் தாண்டி கருவறையில் ஆதிகயிலாயநாதர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கருவறைச் சுற்றில் விநாயகர். சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோரின் சந்நிதிகள் முற்றிலும் புதிதாக 1990-ன் ஆண்டு கும்பாபிஷேகத்தின் போது திருப்பணி செய்யப்பட்டது. மகாவிஷணு ஶ்ரீதேவி, பூதேவியுடன் வெளிப் பிராகாரத்தில் மரத்தடியில் எழுந்தருளியுள்ளார். அம்பாள் சிவகாமியம்மையின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. மாணிக்கவாசகருக்கு முதல் உபதேசக்காட்சி ஆதிகயிலாசநாதர் கோவில் உள்ள இங்கு தான் நடந்தது. இக்கோயில் மாணிக்கவாசகருக்கு முன்பிருந்தே உள்ளது என்பது இத்தலத்தின் சிறப்பாகும். தற்போது ஆதிகயிலாயநாதர் கோயில் உள்ள இந்த இடத்தை, வடக்கூர் (வடக்களூர்) என்றும், ஆவுடையார் கோயில் உள்ள இடத்தை தெற்கூர் என்றும் சொல்கின்றனர். பராசரர், புலஸ்தியர், அகத்தியர் முதலிய மகரிஷிகள் இங்கு இறைவனை வழிபட்டுள்ளதாகச் சொல்கின்றனர். ஆதிகைலாயநாதர் கோவிலில் இருந்து சற்று தொலைவிலுள்ள ஆத்மநாதசுவாமி கோவில் இருக்குமிடம் தான் இன்று திருப்பெருந்துறை என்று அழைக்கப்படுகிறது. ஆத்மநாதசுவாமி திருக்கோவில் மாணிக்கவாசகரால் கட்டப்பெற்ற பெருமையுடையது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வடக்கூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
புதுக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி