Sunday Nov 24, 2024

வடக்குமாட வீதி பூதநாராயணப்பெருமாள் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி :

அருள்மிகு பூதநாராயணப்பெருமாள் திருக்கோயில்,

வடக்குமாட வீதி,

திருவண்ணாமலை மாவட்டம் – 606 601.

போன்: +91 96778 56602

இறைவன்:

பூதநாராயணப்பெருமாள்

அறிமுகம்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை நகருக்கு வடக்கு மாட தெருவில் அமைந்துள்ள பூதநாராயணப் பெருமாள் கோவில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ளது. மூலஸ்தானம் பூதநாராயணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். உற்சவர் தனது மனைவிகளான ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் நாராயணன் என்று அழைக்கப்படுகிறார்.

புராண முக்கியத்துவம் :

 கிருஷ்ண பரமாத்வால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், அவரை அழிக்க பல யுக்திகளைக் மேற்கொண்டான். ஆனால், அவனால் கிருஷ்ணரை நெருங்கக்கூட முடியவில்லை. ஒருகட்டத்தில் பூதனை என்ற அரக்கியை தந்திரமாக அனுப்பி வைத்தான். அவள் ஒரு அழகியாக உருவெடுத்து, கிருஷ்ணரிடம் சென்றாள். அவரைத் தூக்கிக் கொண்டு கொஞ்சினாள். வந்திருப்பது அரக்கி என்று தெரிந்தும், ஒன்றும் தெரியாதவர் போல கிருஷ்ணர் நடித்தார். பூதனை அவரை தன் மடியில் வைத்துக் கொண்டு, பாசமுடன் தாய் போல நடித்து பால் கொடுத்தாள். கிருஷ்ணரும் பால் அருந்துவது போல நடித்து, அவளை வதம் செய்தார்.

இதனால், கிருஷ்ணருக்கு பூதநாராயணர் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த வடிவத்தில் சுவாமிக்கு இங்கு ஒரு மன்னர் கோயில் எழுப்பினார். பிற்காலத்தில் வழிபாடு மறைந்து, கோயிலும் மறைந்து போனது. பல்லாண்டுகளுக்கு பின், இப்பகுதியில் வசித்த பெருமாள் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சுவாமி, தான் மண்ணிற்கு அடியில் புதைந்திருப்பதை உணர்த்தினார். அதன்படி, இங்கு சுவாமி சிலையைக் கண்ட பக்தர், அவர் இருந்த இடத்தில் கோயில் எழுப்பினார்.

நம்பிக்கைகள்:

எதிரி பயம் நீங்க, செயல்களில் வெற்றி கிடைக்க இங்குள்ள சக்கரத்தாழ்வாரை வழிபடுகின்றனர். குழந்தை பிறக்க, பிறந்த குழந்தைகள் அறிவுப்பூர்வமாக இருக்க இங்கு வழிபடுகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

பெரிய சுவாமி: மகாவிஷ்ணுபூதநாராயணர் என்ற பெயரில் தேனி அருகிலுள்ள சுருளிமலையிலும், இங்கும் அருள்பாலிக்கிறார். இங்கு சுவாமி, கிருஷ்ணராக பால பருவத்தில் இருந்தாலும், பூதனையிடம் பால் அருந்தியதால் பூதாகரமாக பெரிய உருவத்துடன் காட்சியளிக்கிறார். இடது காலை மடித்து, வலது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறார். வலது கையில் சங்கு மட்டும் உள்ளது. இடது கையை பக்தர்களுக்கு அருள் தரும் அபய முத்திரையாக வைத்துள்ளார். தினமும் காலையில் இவருக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. குணமுள்ள குழந்தை பிறக்க, பிறந்த குழந்தைகள் அறிவுப்பூர்வமாக இருக்க இவருக்கு வெண்ணெய், கல்கண்டு படைத்து, துளசி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள். நம்மிடமுள்ள கோபம், பொறாமை, காமம் போன்ற கொடிய குணங்களையே புராணங்களில் அசுரர்களாகவும், அரக்கிகளாகவும் உருவம் செய்துள்ளனர். இறைவனை வழிபாடு செய்வதன் மூலம், அவர்களது அருளால் இத்தகைய அசுர சக்திகளை அழித்து விடலாம். இதற்காக, புராணங்களில் தெய்வங்கள் அசுரர்களை வதம் செய்வதாக உருவகப்படுத்தப்பட்டது. இங்கு, சுவாமி பூதகியை வதம் செய்தவராக இருப்பதால், தீய குணங்கள் அழிந்து, நற்குணங்கள் உண்டாகவும், பீடை, நோய்கள் நீங்கி ஆரோக்கியத்துடன் வாழவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

கிரிவலம்: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு அருகில், வடக்கு கிரிவலப்பாதையில் இக்கோயில் உள்ளது. பக்தர்கள் இவரை வணங்கி கிரிவலம் துவங்கி, இவரது சன்னதியிலேயே நிறைவு செய்கின்றனர். அப்போது, சுவாமியை வணங்கி சன்னதியில் தீர்த்தம் வாங்கி, வாசல் முன் அதை கொட்டுகின்றனர். அதாவது, கிரிவலம் செல்வதால் உண்டான பலனை கிருஷ்ணருக்கு சமர்ப்பணம் செய்து, மீண்டும் அதை அவரிடமிருந்து பெற்றுக் கொள்வதாக ஐதீகம்.

வைகுண்ட ஏகாதசியன்று சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளுவார். புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று ஒரு மூடை அரிசியில் சாப்பாடு சமைத்து, சன்னதி முன் கொட்டி சுவாமிக்கு படைக்கின்றனர். பின், அதை பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருவர். கிருஷ்ணர் பெரிய வடிவில் இருப்பதால் இவ்வாறு செய்கிறார்கள். கிருஷ்ண ஜெயந்தியன்று சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் மட்டும் நடக்கும். ஏகாதசி, திருவோண நட்சத்திரம் மற்றும் பவுர்ணமி நாட்களில் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கும். எதிரி பயம் நீங்க, செயல்களில் வெற்றி கிடைக்க இங்குள்ள சக்கரத்தாழ்வாருக்கு புதன் கிழமைகளில் துளசி மாலை அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் செய்து வழிபடுகின்றனர்.

திருவிழாக்கள்:

கிருஷ்ண ஜெயந்தி, ஏகாதசி, திருவோண நட்சத்திரம் மற்றும் பவுர்ணமி நாட்களில் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவண்ணாமலை

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவண்ணாமலை

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை, பாண்டிச்சேரி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top