Friday Jan 24, 2025

வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு தயாநிதீஸ்வரர் கோயில், வடகுரங்காடுதுறை – 614 202. தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 968872669

இறைவன்

இறைவன்: தயாநிதீஸ்வரர், குலைவணங்குநாதர் இறைவி: ஜடாமகுட நாயகி

அறிமுகம்

வடகுரங்காடுதுறை தயாநிதீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரையில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் குலை வணங்கிநாதர் என்றும் அம்பிகை அழகு சடைமுடியம்மை என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் மூலவரை வாலி நாதர், சித்தலிங்கேஸ்வரர், தயாநிதீசுவரர் என்றும் முன்பு அழைத்துள்ளனர்.

புராண முக்கியத்துவம்

சிவபெருமான் தனது லீலைகளை பல இடங்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். வாலிக்கு வால் வளர அருள்செய்த இடமே குரங்காடுதுறை ஆகும். வாலிக்கு வால் அறுந்துபோனது எப்போது என்பது பற்றி கேள்வி எழலாம். வாலியைக்கண்டு ராவணனே நடுங்கியிருக்கிறான். அவனை வாலால் அடிக்கும்போது ஒரு வேளை வால் அறுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தனது வால் வளர அவன் சிவனை வணங்கினான். குரங்காடுதுறை தலத்திற்கு வந்து சிவனை வணங்கியதால் அவனது வால் மீண்டும் வளர்ந்தது. இங்கு சிவன் தயாநிதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அம்பாள் ஜடாமகுட நாயகி. சிட்டுக்குருவி ஒன்றிற்கும் சிவபெருமான் மோட்சம் அளித்துள்ளார். எனவே இவர் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் வழங்கப்படுகிறார். தயாநிதி என்ற பெயருக்கு ஏற்ப கருணை மழை பொழிந்துள்ளார். செட்டிப்பெண் எனப்படும் கர்ப்பிணி பெண் ஒருத்தி தாகம் தாளாமல் இக்கோயில் வழியே நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் தாகத்தால் இறந்துவிடுவாளோ என்ற நிலைமை ஏற்பட்டது. சுற்றிலும் எங்கும் தண்ணீர் இல்லை. அவள் உயிர் போகும் தருணத்தில் அங்கிருந்த சிவலிங்கத்தை வணங்கினாள். சிவபெருமானே அங்கு தோன்றி அருகிலிருந்த தென்னைமரத்தை வளைத்து இளநீரை பறித்துக்கொடுத்தார். அந்தப்பெண் தாகம் நீங்கினாள். எனவே இறைவனுக்கு குலைவணங்கிநாதர் என்ற பெயரும் உள்ளது.

நம்பிக்கைகள்

சில பாவங்கள் நீங்க அனுமானும் இங்கு பூஜை செய்துள்ளார். இங்குள்ள தெட்சிணாமூர்த்தியை தரிசித்தால் குருபலம் பெருகுகிறது.

சிறப்பு அம்சங்கள்

கோயிலின் சிறப்பம்சம் : இக்கோயிலுக்கு முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களே வருகிறார்கள். கர்ப்பமான பெண்களை பொதுவாக கோயிலுக்கு செல்ல வேண்டாம் என சொல்வதுண்டு. ஆனால் இக்கோயிலில் சிவபெருமான் கர்ப்பிணிக்கு அருள் செய்ததால் இந்த தலத்திற்கு வந்தால் சுகமான பிரசவம் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. திருஞான சம்பந்தர், அருணகிரி நாதரால் பாடல் பெற்றது. நவராத்திரி காலத்தில் மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் செல்வச்சிறப்பு கூடும். துர்க்கையின் சிறப்பு: இங்கு விஷ்ணுதுர்க்கை கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறாள். எட்டு புஜங்கள் கொண்ட இந்த துர்க்கைக்கு பாலபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாக காட்சியளிப்பது சிறப்பாகும். வேறு எந்த துர்க்கை தலத்திலும் இம்மாதிரியான அதிசயம் நிகழ்வதாக தெரியவில்லை. நவராத்திரி காலத்தில் இந்த அதிசய துர்க்கையை வழிபடுவதன் மூலம் மனதில் தைரியம் அதிகரிக்கும்.

திருவிழாக்கள்

பங்குனி உத்திர திருவிழா, நவராத்திரி பத்து நாள் விழா ஆகியவை சிறப்பாக நடக்கிறது. கார்த்திகையில் அம்பிகையை பெண்கள் 1008 முறை சுற்றி வருவது விசேஷ அம்சமாகும்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆடுதுறை

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top