வடகரை சொக்கநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
வடகரை சொக்கநாதர் சிவன்கோயில்,
வடகரை, திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்
இறைவன்:
சொக்கநாதர்
இறைவி:
மீனாட்சி அம்மன்
அறிமுகம்:
திருவாருரின் தெற்கில் செல்லும் திருத்துறைபூண்டி சாலையில் 7 கி.மீ. தூரத்தில் உள்ள மாங்குடி சென்று அங்கிருந்து மேற்கில் 2 ½ கிமீ தூரம் சென்று வடகரை அடையவேண்டும். பாண்டவை ஆற்றின் தென்கரையில் இவ்வூர் அமைந்துள்ளது. இங்கு கிழக்கு நோக்கிய சிவன் கோயில் அமைந்துள்ளது இரண்டு ஏக்கர் பரப்பளவில் பெரியதாக அமைந்துள்ளது. பிரதான சாலையை ஒட்டி சிறிய ஓடையை தாண்டியதும் கோயில் அமைந்துள்ளது.
சுற்று மதில் சுவர் உயர்த்தி கட்டப்பட்டுள்ளது, ஆனால் தென்புறம் இடிந்து சரிந்துள்ளது வருந்த தக்க ஒன்று. பிரகார சிற்றாலயங்களாக விநாயகர் முருகன் இரண்டும் அதே நாயக்கர் பாணி வடிவத்தில் அழகாக உள்ளது. இரு சன்னதிகளுக்கும் நடுவில் ஒரு பெரிய வில்வ மரத்தை சுற்றி மேடையமைத்து அதில் நான்கு நாகர்கள் இரு லிங்கங்கள் இரு லிங்கபாணன் இரு நந்திகள் ஒரு சனிபகவான் ஒரு பைரவி ஆகியவை பிரதிஷ்டை செய்யப்படாமல் கிடத்தப்பட்டு உள்ளன. தென்புறம் ஒரு தக்ஷ்ணமூர்த்தி சிலை ஆரம்ப கட்ட செதுக்கல்களுடன் மரத்தடியில் நிற்கிறது. விநாயகர் சன்னதியை ஒட்டி விஸ்வநாதர் என ஒரு லிங்க மூர்த்திக்கு சன்னதி அமைந்துள்ளது.
வடபுறம் கிழக்கு நோக்கிய அம்பிகை திருக்கோயில், கருவறை அர்த்தமண்டபம் முகப்புமண்டபம் என உள்ளது. கருவறை கோட்டங்கள் இல்லை. வடகிழக்கு பகுதியில் மேற்கு நோக்கி பைரவர் சனைச்சரன் சூரியன் மற்றும் நவகிரகங்கள் ஒரு தகர கொட்டகையில் உள்ளன. கோயில் குடமுழுக்கு கண்டு பல வருடங்கள் ஆகின்றன, போதிய பராமரிப்பின்றி எங்கும் செடி வளர்ந்தும், கொடிகள் படர்ந்தும் தரை விரிசல் இடுக்குகளில் செடிகள் வளர்ந்து நிற்கிறது , சில கருவறை விமானங்களில் கலசம் இன்றி உள்ளது.
புராண முக்கியத்துவம் :
இறைவன் – சொக்கநாதர் இறைவி – மீனாட்சி அம்மன் இறைவன் இறைவி இருவரும் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டு உள்ளனர். அம்பிகை இறைவனின் இடப்புறம் கோயில் கொண்டுள்ளதால் இது திருமணத்திற்கு பிந்தைய கோலம் ஆகும், இதனால் தம்பதி சமேதராக வழிபடுவோர்க்கு நலன்கள் பல காத்திருக்கின்றன. இறைவன் பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார், கருவறை அர்த்தமண்டபம்,முகமண்டபம் முகப்பு என நான்கு அம்சங்களாக உள்ளன. அர்த்தமண்டபத்தில் நந்தி உள்ளார். முக மண்டபம் தாண்டி வெளியில் தனி மண்டபத்தில் ஒரு நந்தி பலிபீடம் உள்ளது. கோயில் முற்றிலும் செங்கல் கொண்டு அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, முக மண்டபம் வரை நாயக்கர் கால பாணியில் அமைந்துள்ளது. முகமண்டபத்தில் தெற்கு நோக்கிய நடராஜர் சன்னதி அமைந்துள்ளது அதன் நேர் எதிரில் தெற்கு வாசல் தரிசன மண்டபம் உள்ளது. விமானம் துவிதள விமானமாக கலைநயத்துடன் உள்ளது. கருவறை கோட்டங்களில் தென்முகன் துர்க்கை மட்டும் உள்ளார்கள்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வடகரை
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி