மோகனூர் காந்தமலை முருகன் திருக்கோயில், நாமக்கல்
முகவரி
அருள்மிகு காந்தமலை முருகன் திருக்கோயில், மோகனூர், காந்தமலை, நாமக்கல் மாவட்டம்
இறைவன்
இறைவன்: முருகன்
அறிமுகம்
உலகைச் சுற்றி வந்தும் ஞானப்பழம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று அம்மையப்பரிடம் கோபித்துக்கொண்ட முருகப் பெருமான், பழநி மலைக்குச் செல்லும் வழியில் தங்கியதாகச் சொல்லப்படும் திருத்தலம் காந்தமலையில் அருளும் முருகனின் கோயில். சிறிய குன்றான இந்த காந்தமலை நாமக்கல் மாவட்டம் மோகனூரில் அமைந்திருக்கிறது. கோபித்துச் சென்ற முருகப் பெருமானை சமாதானப்படுத்துவதற்காக, ஈசனின் திருமுடியில் இருக்கும் கங்கா தேவி இங்கு வந்து மகன் முருகனைக் கண்டதால், ‘மகவனூர்’ என்று அழைக்கப்பெற்று, காலப்போக்கில் மோகனூர் என்று அழைக்கப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
மிகவும் பழைமையான இந்தத் தலத்தை புதுப்பித்து உருவாக்கியதில், திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள், தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன் மற்றும் பழனியப்பன் ஆகியோரின் பங்கு குறிப்பிடத்தக்கது. வாரியார் சுவாமிகள் மாதம்தோறும் இந்த ஊருக்கு வந்து சொற்பொழிவு நிகழ்த்தி, அதன் மூலம் திரட்டிய நிதியை கி.வா.ஜகந்நாதன் அவர்களிடம் கொடுத்து, கோயிலைப் புதுப்பிக்கச் செய்து, கும்பாபிஷேகமும் செய்து வைத்தார். பின்னர் 2003-ம் ஆண்டு ஒரு கும்பாபிஷேகம் நடைபெற்றதாகச் சொல்கிறார்கள். பழநியைப் போலவே பாலதண்டாயுதபாணியாக மேற்கு பார்த்து காட்சியளிக்கும் முருகப்பெருமான் ஞானத்துக்கு அதிபதியாக விளங்குகிறார். தன்னை வழிபடுவோர்க்கு கல்வியும் ஞானமும் அருளும் முருகப் பெருமான், நம்முடைய கோபம், கர்வம் போன்றவற்றையும் போக்கிவிடுகிறார். மேலும் 12 ராசிகளையும் 27 நட்சத்திரங்களையும் குறிப்பிடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் 39 படிகளில் ஏறிச்சென்று முருகனை வழிபட்டால், கிரக தோஷங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் நிலவுகிறது. கருவறையைச் சுற்றிலும் தட்சிணாமூர்த்தி, கால பைரவர், சிவதுர்கை, சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், சனிபகவான் ஆகியோரும் அருள்புரிகின்றனர். நவகிரகங்கள் தங்கள் வாகனங்களுடன் காட்சி தருகின்றனர். இங்குள்ள துர்கை, சிவ துர்கையாக சற்றே ஆக்ரோஷமாக, `பக்தர்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் காப்பாற்றுவேன்’ என்று சொல்லாமல் சொல்வதுபோல் காட்சி தருகிறாள். அருணகிரிநாதரின் திருவுருவமும் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.
நம்பிக்கைகள்
இங்குள்ள காலபைரவரைத் தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டு வந்தால் தடைகள் நீங்கி திருமணம் கைகூடி வருவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து, செவ்வரளி மாலை சாற்றி, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் செய்து மனதாரப் பிரார்த்தித்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருவிழாக்கள்
தைப்பூசம், சித்ரா பௌர்ணமி அன்று படிபூஜை, கார்த்திகை தீபம், அருணகிரிநாதர் ஜயந்தி போன்ற விழா வைபவங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மற்றபடி சஷ்டி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம் போன்ற நாள்களில் விசேஷ பூஜை வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மோகனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சேலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி