Wednesday Dec 18, 2024

மொரட்டாண்டி பிரத்யங்கிராதேவி திருக்கோயில், விழுப்புரம்

முகவரி

அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், மொரட்டாண்டி – 605 111, விழுப்புரம் மாவட்டம். போன்: +91-413-320 4288

இறைவன்

இறைவி: பிரத்யங்கிராதேவி

அறிமுகம்

பிரத்யங்கிராதேவி கோயில் என்பது தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு அருகிலுள்ள மொரட்டாண்டி கிராமத்தில் அமைந்துள்ள பிரத்யங்கிராதேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். திண்டிவனம் மற்றும் பாண்டிச்சேரிக்கு இடையில் NH 32- இல் (சென்னை முதல் நாகப்பட்டினம் நெடுஞ்சாலை) இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பாண்டிச்சேரிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இங்கு அம்மன் சிலையின் உயரம் 72 அடி. தெய்வம் ஒரு சிங்கத் தலையுடன், வீங்கிய கண்களுடன், அவளைச் சுற்றி மண்டை ஓடுகளின் நீண்ட மாலை மற்றும் அவளுடைய தோல் நீல நிறத்துடன் உள்ளது. அவள் வலது கையில் திரிசூலம் (திரிசூலம்) மற்றும் இடது கையில் ஒரு தலையை வைத்திருக்கிறாள். ஒரு சிறிய நிலத்தடி கோவில் உள்ளது, அங்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. கோயில் சுமார் 4 அடி நிலத்தடியில் உள்ளது. கோயிலின் இடதுபுறம் பெரிய சரபேஸ்வரர் உள்ளது.

புராண முக்கியத்துவம்

ராமரையும், லட்சுமணனையும் தன் படைபலத்தால் போரிட்டு வெற்றி பெற முடியாது என்பதை அறிந்தான் ராவணனின் மகன் இந்திரஜித். எனவே நிரும்பலை என்ற இடத்தில் தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடுநிசியில் மிக ரகசியமாக மஹா பிரத்யங்கிரா யாகம் நடத்தி, ராம லட்சுமண சகோதரர்களை அழித்து விடலாம் என நினைத்தான். இந்த விஷயத்தை இந்திரஜித்தின் சித்தப்பா விபீஷணனின் உதவியால் ஆஞ்சநேயர் அறிந்தார். இந்திரஜித் இத்த யாகத்தை பூர்த்தி செய்து விட்டால், அவனை வெல்ல யாராலும் முடியாது என அறிந்து, முதலில் யாகத்தையும், பின் இந்திரஜித்தையும் அழித்தார். இந்த யாகம் செய்த இடத்தில் தான் பிரத்யங்கிரா தேவிக்கு தற்போது கோயில் கட்டப்பட்டுள்ளது.

நம்பிக்கைகள்

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் ராகு காலம், அமாவாசை, பவுர்ணமியில் நடத்தப்படும் விசேஷ பூஜைகள், தேய்பிறை அஷ்டமி யாகம், நடுநிசி வேளை ஆகியவை பிரத்யங்கிராவுக்கு விருப்பமானவை. இங்கு தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடுநிசி வேளையில் பிரத்யங்கிரா தேவிக்கு செய்யப்படும் யாகத்தில் தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மகான்கள் ஆகியோர் சூட்சும (கண்களுக்கு புலப்படாத) ரூபத்தில் கலந்து கொள்கிறார்கள் என்பது ஐதீகம். இந்த யாகத்தினால் நாம் நினைத்த காரியங்கள், நீண்ட நாள் நிறைவேறாத ஆசைகள், லட்சியங்கள் ஆகியவற்றை அடையலாம். அத்துடன் இந்த யாகத்தில் பற்பல மூலிகைகள் அளிப்பதால் அதிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்கள் நம் உடலில் பாய்வதால், மனத்தெளிவு, நோய்கள் குணமாதல், குடும்ப பிரச்னை தீர்தல், பைத்தியம் தெளிதல், விரைவில் திருமணம், புத்திர பாக்கியம், வியாபாரத் தடை நீங்குதல், கைவிட்டுப்போன பணம் கிடைத்தல் போன்ற சகல விதமான தொல்லைகள் நீங்குவதாக புராணங்கள்,வேதங்கள், சாஸ்திரங்கள் கூறுகிறது.

சிறப்பு அம்சங்கள்

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் திகழும் மஹா பிரத்யங்கிரா தேவி சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து, ஆயிரம் சிங்கமுகங்கள், இரண்டாயிரம் கைகளுடன் தோன்றியவள். இவள் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தை விழுங்கி ஜெயித்தவள். இவளுக்கு அபராஜிதா என்ற பெயரும் உண்டு. இவளே யந்தர, மந்திர, தந்திரங்களுக்கு அதிபதியான அதர்வண பத்ரகாளி ஆவாள். இவளது மந்திரத்தை “அங்கிரஸ்’ “பிரத்திரயங்கிரஸ்’ என்ற இரு ரிஷிகள் சேர்ந்து உருவாக்கியதால் அவர்களது பெயராலேயே “பிரத்யங்கிரா’ என அழைக்கப்படுகிறாள். இவள் அனுமாரை காவலாக கொள்பவள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த பிரத்யங்கிரா தேவி 72 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான உருவத்துடன் இக்கோயிலில் அமைந்துள்ளது. இங்குள்ள பிரளய விநாயகருக்கு 1008 தினங்கள் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் கணபதி ஹோமம் நடந்துள்ளது. அத்துடன் 1008 தேன் கலச அபிஷேகம், ஒரே இடத்தில் 108 விநாயகர் சிலைகளுக்கு நடத்தப்பட்டது. விநாயகரின் கருவறை விமானம், “கஜபிருஷ்ட விமானம் ஆகும். அதே போல் பாதாள காளிக்கு உரிய கருவறை விமானம் “மகா மேரு’ வடிவில் அமைக்கப்பட்டிருப்பது எங்குமில்லாத சிறப்பம்சமாகும். மொரட்டாண்டி சித்தர் என்றழைக்கப்படும் தொல்லைக்காது சாமிகள் வாழ்ந்த தலம் இது.

திருவிழாக்கள்

நவராத்திரியில் பத்து நாள் உற்சவம், அமாவாசை, பவுர்ணமி , கோகுலாஷ்டமி அன்று காளி பிறந்ததால் ஜென்மாஷ்டமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி, பவுர்ணமி தோறும் நவ ஆபரண பூஜை, தேய்பிறை அஷ்டமியில் செய்யப்படும் இரவு பூஜை இங்கு சிறப்பு.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மொரட்டாண்டி

அருகிலுள்ள இரயில் நிலையம்

பாண்டிச்சேரி

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top