மேலாளவந்தசேரி ஆளவந்தீஸ்வரர் கோயில், திருவாரூர்
முகவரி :
மேலாளவந்தசேரி ஆளவந்தீஸ்வரர் கோயில்,
மேலாளவந்தசேரி, நீடாமங்கலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 613803.
இறைவன்:
ஆளவந்தீஸ்வரர்
அறிமுகம்:
ராஜமன்னார்குடியின் வடக்கில் செல்லும் தேவன்குடி சாலையில் 10-கிமீ. தூரம் சென்றால் மேலாளவந்தசேரி உள்ளது. இங்கு ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான ஆளவந்தீஸ்வரர் எனும் கோயில் உள்ளது. இன்றைக்கு இந்தக் கோயிலில் குடமுழுக்காட்டி சுமார் 100 வருடங்களுக்கு மேலாகி விட்டது. முழுக்க முழுக்கக் செங்கற்களால் அமைக்கப் பட்ட ஆலயம், இன்றைக்கு வெறும் கற்குவியலாகக் காணப்படுகிறது. இருந்தும் இல்லாமலும், சிதைந்தும் இடிந்தும் புதைந்தும் காட்சி தருகிறது.
ஆலய கருவறையின் முன் மண்டபத்தின் மேல் பகுதிக் கற்கள் விழுந்து, வெட்டவெளியாக உள்ளது. ‘மக்களின் மனத்தையும் வாழ்க்கையையும் குளிரச்செய்த ஆளவந்தீஸ்வரர், வெயிலிலும் மழையிலும் வாடுகிறார். கிழக்குப் பார்த்த ஆலயத்தில் கோபுரம் இருந்திருக்கிறது. ஆனால், இன்றைக்குக் கோபுரம் போன்ற ஒன்றுள்ளது. மதிலையும் காணோம்! அம்பாள் தனிக்கோயிலில் சந்நிதி கொண்டு அருள்பாலித்திருக்கிறாள். தற்போது, தனிக்கோயிலும் சன்னதியும் இடிந்து காணப்படுகிறது. அவ்வளவு ஏன்… சுற்றாலயங்கள் ஒன்று கூட காணவில்லை. கோயில் தனியாருக்கு சொந்தமானது என அறிகிறோம், அவர்கள் உள்ளுரில் வசிக்கவில்லை, அதனால் பூஜை பராமரிப்பு என ஆர்வமின்றி உள்ளனர்.
உள்ளூர்க்காரர்கள் முயற்சியால், கோயில் உள்ளே செல்லும் வழிப்பாதை மட்டும் சுத்தப்படுத்தப் பட்டுள்ளது. உள்ளே செல்வதற்குத் தடையாக இருந்த செடி- கொடிகளை அகற்றி, போதிய இடம் அமைத்துள்ளனர். கடந்த சில காலமாக பிரதோஷ பூஜையைச் செய்து வருகிறார்கள். இறைவன் கிழக்கு நோக்கிய சன்னதியும் அம்பிகை தெற்கு நோக்கி உள்ளார். கருவறை வாயிலில் ஒரு நந்தியும் அதற்க்கு அடுத்த முன் மண்டபத்தில் ஒரு நந்தியும் உள்ளது. கருவறை வாயிலில் இரு புறமும் இரு விநாயகர்கள் உள்ளனர், முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ளார். அற்புதமான அழகுடன் ஒரு தக்ஷணமூர்த்தியும் ஒரு அழகிய சங்கு சக்கரம் ஏந்திய துர்க்கையும் உள்ளனர். இவை வெளிப்புற கோஷ்டத்தில் இருந்தவை ஆகலாம்.
புராண முக்கியத்துவம் :
வைணவ ஆசாரியர் ஆளவந்தார் பிரபந்தத்தை மீட்டெடுத்த நாதமுனிகளின் பேரனாக ஈசுவரமுனிக்கு மகனாக காட்டுமன்னார்கோயிலில் பிறந்தவர். இவரது வழி தோன்றல்கள் திருவரங்கம் ராஜமன்னார்குடி போன்ற தலங்களில் இருந்த கோயில்களை நிர்வகித்தனர். இவர்களது வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட நிலப்பகுதி தான் ஆளவந்தார்சேரி பின்னர் மேலஆளவந்த சேரி எனவும் கீழஆளவந்தசேரி எனவும் பிரிந்தது. தற்போது மேலாளவந்தசேரி எனப்படுகிறது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலாளவந்தசேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நீடாமங்கலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி