மேலபருத்தியூர் கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
மேலபருத்தியூர் கைலாசநாதர் சிவன்கோயில்,
மேலபருத்தியூர், குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 613704.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
அன்னபூரணி
அறிமுகம்:
திருவாரூர்- மன்னார்குடி சாலையில் உள்ள பாண்டவை ஆற்றின் வலதுபுற வடகரையில் திரும்பி மேல எருக்காட்டூர் வழி 4 கிமீ சென்றால் இந்த பருத்தியூரை அடையலாம். பரிதி என்றால் சூரியன். சூரியன் சிவனை வழிபட்ட இடமாதலால் இது பரிதியூர் என்றாகி காலப்போக்கில் பருத்தியூர் என்றாயிற்று. இறைவன்- கைலாசநாதர் இறைவி – அன்னபூரணி கிழக்கு நோக்கிய ஒற்றை கருவறை கொண்ட சிவன் கோயில், கருவறை பிரசதரம் எனப்படும் கூரை மட்டம் வரை கருங்கல் கொண்டு கட்டப்பட்டு வேசர விமானம் கொண்டு உள்ளது. இது பழமையான கட்டுமானம் முகப்பில் ஒரு மண்டபம் உள்ளது. அம்பிகை சண்டேசர் பிற சிற்றாலயங்கள் ஏதுமில்லை. இறைவன் நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தியாக கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். கருவறை வாயிலில் மகாவிஷ்ணு விநாயகர் ஒரு புறமும் மறுபுறம் சுப்பிரமணியர் உள்ளனர். அம்பிகை தெற்கு நோக்கியும் அருகில் சண்டேசரும் தென்புறம் நோக்கியும் உள்ளனர். இறைவன் எதிரில் ஒரு நந்தியும் பலிபீடமும் உள்ளன.
புராண முக்கியத்துவம் :
ஒரு முறை ராகு சூரியனை மறைத்து விடுவதற்காக அதனை நோக்கி வேகமாகச் சென்றான். சூரியனின் கதிர்கள் சுட்டெரிக்கும் வெப்பத்துடன் இருந்ததால் அவனுக்குக் கோபம் உண்டானது. நச்சுக்காற்றை வெளியிடும் ஒரு பாம்பின் உருவத்தில் அவன் சூரியனை மெல்ல மறைக்கலானான். ராகுவின் நச்சுக் காற்றால் சூரியனின் முகம் கருகியது. தன் ஒளி முகத்தைத் திரும்பவும் பெற வேண்டிச் சூரியனும் சிவனை எண்ணித் தவம் புரிந்தான். சிவனும் பார்வதியும் சூரியன் முன் தோன்றி இருவருமாக ஆசி வழங்கினார்கள். சிவனின் அருளால் கருநிறம் நீங்கித் தன் ஒளிமிகும் பழைய முகத்தைச் சூரியன் மீண்டும் பெற்றான்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலபருத்தியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி