மேலச்சேரி மத்தளேஸ்வரர் குடைவரை கோயில், விழுப்புரம்
முகவரி :
மேலச்சேரி மத்தளேஸ்வரர் கோயில்,
மேலச்சேரி, மேல்மலையனூர் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம் – 604202.
இறைவன்:
மத்தளேஸ்வரர்
இறைவி:
பிரகன்நாயகி
அறிமுகம்:
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்ட ஊர் மேலச்சேரி கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள மலைக்குன்றின், ஒற்றைப் பாறையில் குடைவரையாக அமைக்கப் பட்டுள்ளது இந்தக் கோயில். பல்லவ மன்னர்களில் குறிப்பிடத்தக்கவன் மகேந்திரவர்மன். இவனுடைய ஆட்சிக்காலத்தில்தான் பெரும்பாலான குடைவரைக் கோயில்கள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டன. அருள்மிகு மத்தளேஸ்வரர் ஆலயம், மகேந்திர வர்மனின் ஆட்சியின் கீழ் இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னனான ‘சந்திராதித்யன்’ என்பவனால் உருவாக்கப்பட்டது. இது, மண்டகப்பட்டு குடைவரைக்கோயிலின் காலத்துக்குப் பிற்பட்டது. எளிமையும் அழகும் கொண்டு திகழும் இந்தக் குடைவரைக் கோயில் மேற்குதிசையை நோக்கியபடி அமைந்துள்ளது. இங்கு அருளும் ஈசனும் மேற்கு நோக்கியே அருள்பாலிக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து வடமேற்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மேலச்சேரி. செஞ்சியிலிருந்து இங்கு வர பஸ் மற்றும் ஆட்டோ வசதியுள்ளது.
புராண முக்கியத்துவம் :
மகேந்திரவர்மன் காலத்துக் குடைவரைக் கோயில்களில் திகழும் பாணியில்… ‘ஒரு மண்ட பம், அதன் நடுவில் கர்ப்பகிரகம்’ எனும் அமைப்பிலேயே இந்தக் குடைவரையும் அமைந்துள்ளது. இந்தக் கோயில் மண்டபத்தின் நீளம் 19. 9 அடி அங்குலம். அகலம் 8. 9 அடி. உயரம் 6. 8 அடி. இங்குள்ள கர்ப்பக்கிரகம் சதுர வடிவில் அமைந்துள்ளது. மண்டபத்தின் உயரமும் கருவறையின் உயரமும் இணையாகவே காணப்படுகின்றன.
கருவறையின் விமானத்தில் தாமரைமலர் போல் சிற்பம் அழகுற செதுக்கப்பட்டுள்ளது. சதுர வடிவிலான இரண்டு முழு தூண்களும், பாறையை ஒட்டிய இரண்டு அரைத்தூண்களும் குடைவரையில் காணப்படுகின்றன. இவற்றில் ஒரு தூணில் வடமொழிக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது.
ஆலயத்தில் வடக்கு நோக்கி விநாயகப் பெருமான் சிற்பமாகக் காட்சி கொடுக்கிறார். குடைவரையின் மகாமண்டபத்தில் பெருமாள் திருவடி, வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகப்பெருமான் மற்றும் யானைகளின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தக் கோயிலில் புதிதாக மகாமண்டபம், சுற்று கோயில்கள், கோபுரம் ஆகியவை ஊர் மக்களால் புதிதாகக் கட்டப்பட்டு கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டுள்ளது.
மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சந்திரன் சிலைகள் உள்ளன. சுற்றுப் பிராகாரத்தில் வலம்புரி விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகன், சண்டிகேஸ்வரர், துர்கை ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.
நம்பிக்கைகள்:
நெய்தீபம் ஏற்றிவைத்து மத்தளேஸ்வரரை வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடும், வாழ்க்கையில் முன்னேற்றமும் சகல செளபாக்கியங்களும் கிட்டும் என்றும் சொல்கிறார்கள் பக்தர்கள்.
சிறப்பு அம்சங்கள்:
தாய்ப் பாறையில் சிவலிங்கம்!
கருவறையில் எழுந்தருளியிருக்கும் ஈசனின் லிங்கத் திருமேனி குடைவரையின் தாய்ப் பாறையிலேயே செதுக்கப் பட்டிருப்பது மிகவும் சிறப்பு. சுமார் 5 அடி உயரத்துடன் பிரமாண்டமாக அமைந்திருக்கும் ஈசனின் திருமேனி. இந்தக் குன்றின் பெயர் மத்தளமலை. ஆகவே, மலைமீது அருளும் ஈஸ்வரனுக்கு மத்தளேஸ் வரர், மத்தளகிரீஸ்வரர் என்ற திருப்பெயர்கள் ஏற்பட்டன என்கிறார்கள். இங்கு அருளும் அம்பிகைக்கு அருள்மிகு பிரகன்நாயகி என்று திருப்பெயர். குடைவரைக் கோயில் மண்டபத்தில் தெற்கு நோக்கி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறாள் அம்பிகை. இந்த அம்பாளின் சிற்பம், பிற்காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
நந்தி சிலையில் சிவலிங்கச் சிற்பம்!
ஆலயத்துக்கு எதிரே காணப்படும் நந்தி விசேஷம் வாய்ந்தவர். சோழர் காலத்தைச் சேர்ந்த இந்த நந்திதேவர் சிலையில், அவரின் கழுத்தின் கீழ்ப்பகுதியில் கால்களுக்கு இடையில் லிங்கத்தின் உருவமும் இணைத்து வடிக்கப்பட்டுள்ளது. இப்படியான அமைப் புடன் திகழும் நந்திதேவர் திருமேனிகள் மிகவும் அரிதானவை என்கிறார்கள் ஆய்வாளர்கள். பிரதோஷ காலத்தில் இந்த நந்தியை வணங்கி, மத்தளேஸ்வரரை தரிசித்து வழிபடுவது விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்; எண்ணிய காரியங்கள் எண்ணியபடி நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நந்திக்குப் பின்புறம் 20 அடி உயரம் கொண்ட கல்மரமும், பலிபீடமும் காணப்படுகின்றன.
திருவிழாக்கள்:
இத்தலத்தில் கார்த்திகை தீபம், மாசி சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய விழாக்கள் விசேஷம். இங்கு பௌர்ணமி தினங்களில், ஏராளமான மக்கள் கிரிவலம் செய்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலச்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திண்டிவனம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை