Friday Jan 24, 2025

மூலனூர் சோளீஸ்வரர் திருக்கோயில், திருப்பூர்

முகவரி

மூலனூர் சோளீஸ்வரர் திருக்கோயில், மூலனூர் அஞ்சல் தாராபுரம் வட்டம் திருப்பூர் மாவட்டம் – 638106

இறைவன்

இறைவன்: சோளீஸ்வரர் இறைவி: செளந்தரநாயகி

அறிமுகம்

தாராபுரத்தில் இருந்து கரூர் செல்லும் சாலையில் தாராபுரத்தில் இருந்து சுமார் 24 கி.மீ. தோலைவில் மூலனூர் இருக்கிறது. கரூரில் இருந்து சுமார் 54 கி,மீ. தொலைவிலுள்ளது. இறைவன் சோளீஸ்வரர் என்றும் இறைவி செளந்தரநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். பிராகாரத்தில் சூரியன், மூல விநாயகர், வள்ளி தெய்வயானையுடன் மயில் வாகனராக சுப்பிரமணியர் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள கொங்கு நாட்டு வைப்புத் தலமாகும்.

புராண முக்கியத்துவம்

அமராவதி நதி பாய்ந்து விவசாயம் செழித்துள்ள பூமி, மூலனூர். சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் வாழ்ந்த மூலன் என்னும் முனிவரின் பெயரால் மூலன் மாநகரம், மூலன் நகர் என வழங்கப்பட்டு தற்போது மூலனூர் என அழைக்கப்படுகிறது. சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்ட மூலன், சிவன் கோயில் ஒன்றை அமைக்க வேண்டுமென இப்பகுதியை ஆண்ட பூசகுலத் தொண்டைமானுக்கு வேண்டுகோள் வைக்க, அதன்படி உருவானது இங்குள்ள சோளீஸ்வரர் கோயில். அதன்பின்னர் சேர, சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. சுந்தரரின் வைப்புத்தலம் என்பதும், பழிநி செல்லும் வழியில் இங்கு வந்து இறைவனை திருமூலர் வழிபட்டார் என்பதும் இத்தல வரலாற்றிற்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன. கிழக்கு நோக்கி கோயிலுக்கு நாற்புறமும் பெரிய மதில் எழுப்பப்பெற்று முன்புறம் சுதைச் சிற்பங்களோடு கூடிய அழகான தோரணவாயில் உள்ளது. முன் மண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம் கருவறை என்ற அமைப்பில் கோயில் அமைந்துள்ளது. முன் மற்றும் மகாமண்டபம் இரண்டிலும் நந்தியும் பலிபீடமும் அமைந்துள்ளன. கருவறையில் கிழக்குப் பார்த்தவாறு லிங்கத் திருமேனியராக இறைவன் சோழீஸ்வரர், தன்னை வணங்கும் பக்தர்களின் சோதனைகளைத் தீர்த்து, அவர்கள் வாழ்வில் சாதனைகள் படைத்திட அருள்பாலிக்கிறார். சுற்று தெய்வங்களாக தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, சண்டிகேஸ்வரர், அருள்கின்றனர். இறைவி செளந்தரநாயகி அம்மன் தனிச்சன்னதியில் அற்புத தரிசனம் தருகிறாள். இறைவன், இறைவி சன்னிதிக்கு இடையே தனிச் சன்னிதியில் வள்ளி-தேவசேனா சமேத சுப்பிரமணியர் அருள்கிறார். மேலும் விநாயகர் துர்க்கை காசி விஸ்வநாதர், விசாலாட்சி நடராஜர், சிவகாமி காலபைரவர், சனீஸ்னீ வரர், சந்திரன், சூரியன் நவகிரகங்கள், அரச மரமும் வேப்ப மரமும் இணைந்து பெரியதாக வளர்ந்துள்ளன இம்மரத்தடியில் விநாயகர், நாகர், நந்தியெம்பெருமான் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். இத்தலத்தின் எதிரே சுமார் அறுபதடி உயரம் கொண்ட தீபஸ்தம்பம் உள்ளது. அதில் முருகனுக்கு சன்னிதி அமைந்துள்ளது சிறப்பு. இவர் கம்பத்தாண்டவர் என்று அழைக்கப்படுகிறார். இந்த சன்னிதியின் வாயில் அருகில் ஒரு பக்கம் ஆஞ்சநேயரின் திருவுருவமும், மற்றொரு பக்கம் யானையின் திருவுருவமும் காணப்படுவது அற்புதம் மேலும் நர்த்தன கணபதி, பசுபதீஸ்வரர் சவுந்தரநாயகி ஆகியோரின் திருவுருவமும் அங்கு இடம்பெற்றுள்ளது. வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு குருவார அபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு கல்வி வளம் கிடைக்கவும். தனம், தான்யம் பெருகவும் தோஷங்கள் நிவர்த்தியடையவும் குருவருள் கிடைக்கிறது. என நம்பிக்கையுடன் பக்தர்கள் கூறுகின்றனர். வியாழன், ஞாயிறு ஆகிய தினங்களில் காலையில் விஷக்கடி மற்றும் மஞ்சள் காமாலை நோய் பாதித்தவர்களுக்கு ஒருவிதமான மூலிகைவேரை சோழீஸ்வரர் கருவறையில் வைத்து பூஜித்து மாலையாக அணிந்துகொள்ள கொடுக்கிறார்கள். மூன்று நாட்கள் பத்தியம் இருந்து இதை அணிந்துகொண்டால் நோய் குணமாவதாக பலன் பெற்றவர்கள் சொல்கிறார்கள்.

நம்பிக்கைகள்

காலபைரவருக்கு அஷ்டமி நாளில் மாலை சிறப்பு வழிபாடு நடக்கின்றன. செவ்வாய் தோறும் மாலை நவகிரகங்களில் ராகுவுக்கும் கேதுவுக்கும் பாலபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் பங்கு பெற்று வழிபடுபவர்களின் மனச்சங்கடம் நீங்கும் ராகு-கேது தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. மேலும் குழந்தை பாக்கியத்திற்காகவும் பிரார்த்திக்கின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சஷ்டியன்று இவரை செவ்வரளி மலர்களால் பூஜித்து தேங்காய் மூடியில் ஆறு வாரம் நெய் தீபமேற்றி வழிபட்டால் புத்திரபாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம்.

சிறப்பு அம்சங்கள்

கார்த்திகை தீபத்தன்று இங்குள்ள அறுபதடி தீபஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபம் ஒரு வாரம் எரிவதால் இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள குடும்பத்தில் நல்ல சூழல் ஏற்படும் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

திருவிழாக்கள்

கம்பத்தாண்டவருக்கு தைப்பூசம் வைகாசி விசாகம் பங்குனி உத்திரம் ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. கிருத்திகை, வளர்பிறை சஷ்டி ஆகிய தினங்களில் கம்பத்தாண்டவருக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகிறது. பிரதோஷம், மாதசிவராத்திரி, அமாவாசை நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. சித்திரை மாதம் முதல் நாளும், சித்திரா பவுர்ணமியன்றும் இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஐப்பசியில் அன்னாபிஷேகம் வெகு விமரிசையாகச் செய்யப்படுகிறது. சிவராத்திரியன்று சோழீஸ்வரருக்கு நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மூலனூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top