Sunday Apr 06, 2025

முள்ளங்குடி கோதண்டராமர் கோயில்

முகவரி :

அருள்மிகு கோதண்டராமர் கோயில்,

முள்ளங்குடி,

தஞ்சாவூர் மாவட்டம் – 612502.

இறைவன்:

கோதண்டராமர்

இறைவி:

சீதா

அறிமுகம்:

பல நூற்றாண்டுகளைக் கடந்த அரிய பழமையான ஆலயமான அருள்மிகு கோதண்டராம ஆலயம் முள்ளங்குடி என்னும் சின்னஞ்சிறு கிராமத்தில் உள்ளது.  சென்னை – கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள அணைக்கரை என்ற ஊரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது முள்ளங்குடி.

புராண முக்கியத்துவம் :

திவ்ய தேசமான திருவெள்ளியங்குடியில் மூலவர் கோல வில்லிராமர். இங்கு ராமபிரான் சங்கு சக்கரமின்றி, சீதை, லட்சுமணர் இல்லாமல் தனிமையாக சயனக் கோலத்தில் காட்சி தருகிறார். ராமபிரானை இங்கு தரிசித்த கருடாழ்வாரின் மனம் சங்கடபட்டது. சங்கு சக்கரமில்லாமல் சீதாப்பிராட்டி இல்லாமல் ராமரை தரிசனம் செய்ததில் அவர் மன நிறைவு கொள்ளவில்லை. ராமபிரானை தனித்து பார்த்த தன் கண்களால் அவரை சீதாப்பிராட்டியுடன் இணைத்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. தனது ஆவலை கயிலாச நாதரிடம் தெரிவித்தார் கருடாழ்வார்.

கயிலாசநாதர் அவரை முள்ளங்குடிக்குச் சென்று தியானம் செய்யும்படி பணித்தார். அதன்படி முள்ளங்குடி வந்த கருடாழ்வார் ராமபிரானை வேண்டி தியானத்தில் ஆழ்ந்தார். அவர் தியானம் செய்வதைக் கண்டு மனம் இறங்கிய ராமபிரான் சங்கு சக்கரத்துடன் சீதாபிராட்டியை மடியில் வைத்துக் கொண்டு தரிசனம் தந்தார். கருடாழ்வார் மெய்மறந்து ராமபிரானை தரிசித்தார். ‘புள்’ளாகிய கருடனுக்கு அவர் விரும்பிய அமர்ந்த கோலத்தில் தன் மடிமீது சீதா தேவியை அணைத்துக் கொண்டு ராமபிரான் காட்சி தந்ததால் இந்த ஊர் புள்ளங்குடி என்ற பெயர் பெற்றது. அதற்கு பிறகு முள்ளங்குடி என்று அழைக்கப்படலாயிற்று.

நம்பிக்கைகள்:

பிள்ளைப் பேறு வேண்டுவோர், திருமணம் நடைபெற வேண்டுவோர் இங்குள்ள ஆஞ்சேநயரை பிரார்த்தனை செய்ய அவர்கள் பிரார்த்தனை பலிப்பது நிஜம் என்கின்றனர் பக்தர்கள். தங்கள் பிரார்த்தனை பலித்ததும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தி புளி சாதம், எள்ளு சாதம், நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்து தங்கள் நன்றிக்கடனை நிறைவேற்றி கொள்கின்றனர். இங்குள்ள ராமபிரானை பிரார்த்தனை செய்வதால் தோஷ நிவர்த்தி ஏற்படுவதாக சொல்கின்றனர் பக்தர்கள்.

சிறப்பு அம்சங்கள்:

ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. நுழைவுவாயிலைத் தாண்டியதும் கருடாழ்வார் சன்னிதி உள்ளது. அடுத்துள்ளது மகாமண்டபம். அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவு வாயிலின் முன்பு இடது புறம் தும்பிக்கை ஆழ்வாரும் வலதுபுறம் ஆஞ்சேநயரும் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் கோதண்டராமர் தனது மடியில் சீதாப்பிராட்டியை அமர்த்திக் கொண்டு சங்கு சக்கரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்குள்ள கருடாழ்வாருக்கு வியாழன் தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

இந்த ஆலயத்தில் ஆஞ்சநேயர் தலையில் கிரீடம் இல்லாமல் இரு கரங்களையும் கூப்பி கண்களை மூடி தியான நிலையில் காட்சி தருகிறார். கருடன் இந்த தலத்தில் தியானத்தில்
இருந்த போது அனுமனும் தியானம் செய்து ராமபிரானின் தாம்பத்ய கோல தரிசனம் பெற்றார். இந்த தலத்தில் ராமபிரான், சீதா தேவியை தன் மடி மீது அமர்த்திய கோலத்தில் அபூர்வமாக சேவை சாதிப்பதால் குடும்ப ஒற்றுமை, இல்லற மகிழ்ச்சி, தாம்பத்ய உறவு ஆகியவைகளை அருளும் தலமாக இத்தலம் விளங்குவது உண்மையே!


திருவிழாக்கள்:

ராமநவமி, அனுமன் ஜெயந்தி, நவராத்திரி ஆகிய நாட்களில் இறைவன், இறைவி மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடை பெறுகின்றன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அனைக்கரை

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை, கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top