Wednesday Dec 18, 2024

முருகனின் பலவித தோற்றங்கள்

*திருச்சியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் மேலகல்கந்தார் கோட்டை என்ற ஊர் உள்ளது. இங்கு பாலமுருகன் ஆலயம் இருக்கிறது. இந்தக் கோவில் கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். முருகனின் சன்னிதிக்கு முன்பாக மாரியம்மன் அமர்ந்த கோலத்தில் முருகப்பெருமானுக்கு காவலாக இருக்கிறார். அன்னையுடன் அருள்பாலிக்கும் பாலமுருகனை வணங்குவதால், குழந்தைப்பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

  • திருச்சியில் இருந்து 44 கிலோமீட்டர் தொலைவில் செட்டிகுளம் என்ற இடத்தில் தண்டாயுதபாணி ஆலயம் உள்ளது. இந்தக் கோவிலில் கரும்புத் தொட்டில் பிரார்த்தனை பிரபலமானது. குழந்தை வரம் வேண்டி இத்தல முருகனை வேண்டிக்கொள்ளும் தம்பதியர், குழந்தை பிறந்ததும், அந்தக் குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து வந்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.
  • திருப்பூர் நம்பியூர் பாதையில் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது உதயகிரி. இங்குள்ள முத்து வேலாயுத சுவாமி ஆலயத்தில் உள்ள பாறை ஒன்றில் ஐந்து தலை நாகமொன்று புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து நாகதோஷ நிவர்த்தி செய்துகொள்கின்றனர். இவ்வாலயத்தில் கால பைரவருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. சகஸ்ரலிங்கம், பஞ்சலிங்கங்களுக்கும் தனித் தனி விமானங்களுடன் கூடிய சன்னிதிகள் அமைந்துள்ளன. ஆலயத்தின் மதில் சுவர் களில் மீன் சின்னங்கள் சிற்பங்களாக உள்ளதால், இந்த ஆலயம் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது என்கிறார் கள்.
  • அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருக்கோவிலில் ஒரு தனிச் சிறப்பு உள்ளது. கொடிமரத்தில் இருந்து வலமாக எல்லாச் சன்னிதிகளுக்கும் நாம் சென்று வந்தால் ஓம் என்ற எழுத்து வடிவில் அப்பாதை அமைந்துள்ளதைக் காணலாம். இங்கு மட்டுமே விபூதியை பன்னீர் இலையில் மடித்துத் தருவார்கள். இந்தப் பன்னீர் இலையை பிரித்தால் பன்னிரண்டு நரம்புகள் இலையில் இருப்பதை உணரலாம். இவை முருகனின் பன்னிரண்டு திருக் கரங்களைக் குறிப்பதாக கூறுகிறார்கள். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கென்று தங்கக் குடங்கள் இருக்கின்றன. வேள்வி மற்றும் குடமுழுக்கு நாட்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தங்கத் தேங்காய்களும் இங்கு உண்டு. இவை முக்கியப் பிரமுகர்கள் வருகை, பூரண கும்ப மரியாதை மற்றும் வேள்வியின் போது பயன்படுத்தப்படுகிறது.
  • திருக்கழுக்குன்றம் மலை மீதுள்ள வேதகிரீஸ்வரர் ஆலயத்தில், முருகப்பெருமான் ஆறு திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். முருகப்பெருமானோடு, வள்ளி-தெய்வானையும் அருள்பாலிக்கின்றனர். மயிலின் திருமுகம் வடக்கு நோக்கியுள்ளது. மற்றொரு சன்னிதியில் ஒரு திருமுகம், நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் தரிசனம் தருகிறார். இங்கும் வள்ளி-தெய்வானை இருக்கின்றனர்.
  • விராலிமலை மூலவரான சண்முகர், மயில் மீது அமர்ந்து கிழக்கு நோக்கி தரிசனம் தரு கிறார். இத்தலப் பெருமானுக்கு சுருட்டு நிவேதனம் செய்கிறார்கள்.
  • கனககிரி என்ற திருத்தலத்தில் கிளியை கையில் ஏந்தியபடி முருகப்பெருமான் அருள் பாலிக்கிறார். அதே போல் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் மாம்பழத்தை கையில் ஏந்தியபடி அருள்கிறார். 

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top