முன்னூர் ஸ்ரீஅருளாளப்பெருமாள் திருக்கோயில், திண்டிவனம்
முகவரி
அருள்மிகு ஸ்ரீஅருளாளப்பெருமாள் திருக்கோயில், முன்னூர், திண்டிவனம் மாவட்டம் – 604301.
இறைவன்
இறைவன்: ஸ்ரீஅருளாளப்பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி, பூதேவி
அறிமுகம்
திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் 19 கி. மீ. தூரத்தில் உள்ள ஆலங்குப்பம் என்ற ஊரிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது முன்னூர். தாருகாவனம்’ என்று நான்மறைகள் போற்றும் மிகப் பழைமை வாய்ந்த தலம் `முன்னூர்’ எனப்படும் `முந்நூற்று மங்கலம்’. புருஷோத்தம நல்லூர், திரிசதபுரம், ராஜநாராயண சதுர்வேதி மங்கலம் என்று பல பெயர்களில் வரலாற்று ஏடுகள் முன்னூரைக் குறிப்பிடுகின்றன. தவயோகிகளும் வேதவிற்பன்னர்களும் வாழ்ந்ததால் சிறப்புப் பெற்ற இந்தத் தலத்தில் ஸ்ரீபதியான வைகுண்டவாசன், `ஸ்ரீஅருளாளப்பெருமான்’ எனும் திருநாமத்தோடு, தன் தேவியர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில், கற்பனைகள் அனைத்தையும் மிஞ்சும் பேரழகுடன் எழுந்தருளியுள்ளார்!
புராண முக்கியத்துவம்
இந்தத் தலத்தில் அருள்மிகு நரசிம்மர் குடியேறிய கதை, மிகவும் சிலிர்ப்பானது. சிதிலமடைந்து கிடந்த இந்தத் தலத்தின் புனரமைப்புப் பணிகள், 2007 முதல் 2011-ம் ஆண்டு வரை நடைபெற்றன. திருப்பணிகளின் பொருட்டு மண்ணை அகழ்ந்து கொண்டிருந்தபோது, ஓர் அதிசயம் நிகழ்ந்தது. மண் அகழும் இயந்திரத்தை இயக்கிக்கொண்டிருந்தவர், கற்குவியலுக்கு மத்தியில் கல்லால் ஆன திருமேனி ஒன்று தட்டுப் படுவதை உணர்ந்தார். அந்தச் சிலையைப் பொறுமையுடன் பூமியிலிருந்து வெளியே எடுத்தார். புராதனமான அந்தச் சிலை ஸ்ரீயோக நரசிம்மரின் சிலை என்பதை அறிந்து, முன்னூர் மக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். ஸ்ரீயோக நரசிம்மரின் திருமேனியைப் பயபக்தியோடு திருக்கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்தனர். அதுமட்டுமல்ல, ஸ்ரீயோக நரசிம்மர் முன்னூரில் பூமியிலிருந்து தோன்றி தன் பக்தர்களுக்குத் திருக்காட்சி அளித்த நாள் 19.1.2009 தை மாதம் 6 ஆம் நாள். மிகச் சரியாக அந்தத் திருநாள், ஸ்ரீநரசிம்மர் திருஅவதாரம் செய்த சுவாதி நட்சத்திரத் திருநாளாக அமைந்ததுதான்! ஆராவமுதனான ஸ்ரீஅருளாளப் பெருமானின் திருக்கோயிலில், தமக்கும் தனிச்சந்நிதி அமைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படவேண்டும் என அந்த `அழகிய சிங்கம்’ தனது திருவுள்ளத்தில் நினைத்து விட்டார். போலும்! அதன்படியே, இத்தலத்தில் ஸ்ரீயோக நரசிம்மருக்கும் தனிச்சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. கோரைப் பற்களின்றி குழந்தை வடிவமாகத் திருக்காட்சி தருகிறார், ஸ்ரீயோக நரசிம்மர். வேறெங்கும் காண்பதற்கு அரிய அபூர்வ கோலம் இது என்கிறார்கள் ஆன்மிகப் பெரியவர்கள்.
நம்பிக்கைகள்
சந்நிதியில் சுவாதி நட்சத்திர நாள்களில் சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு ஸ்ரீயோக நரசிம்மரை வழிபட்டு, ஹோமத்தில் வைத்த ரக்ஷையை கையில் அணிந்துகொண்டால், கடன் பிரச்னைகள் விரைவில் தீர்ந்து மன நிம்மதி ஏற்படும். அதேபோல், தேர்வு காலங்களில் இங்கே `ஸ்ரீவித்யா ப்ராப்தி ஹோமம்’ நடை பெறும். பள்ளி மாணவர்கள் அதில் கலந்து கொண்டு வணங்கி வழிபட்டால், தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறலாம்.
சிறப்பு அம்சங்கள்
பூரி ஜகந்நாதர் ஆலயத்துக்குப் புருஷோத்தமபுரி என்ற ஒரு திரு நாமம் உண்டு. இந்த ஆலயம் அமைந்த பகுதியை (தற்போதைய ஒடிசா மாநிலம்) ஆண்ட `கஜபதி’ வம்ச மன்னர்களுக்கு, முன்னூர் அபிமானத்தலம் என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, இந்தத் தலத்துக்கு `புருஷோத்தம நல்லூர்’ என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது.. பண்டைய காலத்தில், `சித்திர மேழி விண்ணகர் எம்பெருமாள்’ என இந்தத் தலத்தின் பெருமாள் பூஜிக்கப்பட்டாராம். ஆகவே, இத்தலம் பராந்தகச் சோழனின் காலத்துக்கும் முந்தையது என்பதை அறிய முடிகின்றது. சோழர்களும் பாண்டியர்களும் இத்தலத்துக்குப் பல கொடைகளை அளித்துள்ளனர்.
காலம்
1642 ஆம் ஆற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
முன்னூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திண்டிவனம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை