முத்துகாப்பட்டி தத்தகிரி முருகன் திருக்கோயில், நாமக்கல்
முகவரி
தத்தகிரி முருகன் திருக்கோயில், சேந்தமங்கலம் சாலை, முத்துகாப்பட்டி , நாமக்கல் மாவட்டம் – 637409.
இறைவன்
இறைவன்: முருகன்
அறிமுகம்
நாமக்கல் நகரத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள முத்துகாப்பட்டி கிராமத்திற்கு அருகில் இருக்கிறது சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோயில். இந்த கோயில் ஒரு சிறிய மலையின் மீது அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற, தத்தாத்ரேயர் குகாலயம் அமைந்துள்ளது. முன்பு, சன்னியாசி கரடு என்று அழைக்கப்பட்ட இது, தற்போது தத்தகிரி ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. பக்தி, தியானம் மூலமாக ஆத்மஞானம் பெற்ற பல முனிவர்கள், இங்கு தவத்தில் இருந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. இக்கோயிலின் குகாலயத்தில் ஜீவசமாதி அடைந்த ஸ்வயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத மகா சுவாமிகள் சன்னிதானம் உள்ளது. குகாலயத்திற்கு மேல் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய கடவுள்களை உள்ளடக்கிய தத்தாத்ரேயர் விக்கிரகம் செய்யப்பட்டது.
புராண முக்கியத்துவம்
இங்குள்ள தத்தாத்ரேயர் மும்மூர்த்திகளின் மையத்தில், சிவபெருமான் உருவம் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு பெற்றதாகும். ஸ்வயம் பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத மகா சுவாமிகள், விழுப்புரம் மாவட்டத்தில் கல்பட்டு அக்ரஹாரத்தில் ராமசாமி சாஸ்திரி ஜானகியம்மாள் தம்பதியினருக்கு 1817ம் ஆண்டு 4வது மகனாக பிறந்தார். சிறு வயதிலேயே ஆத்மஞானம் பெறும் நோக்கத்தில் அவருடைய செயல்பாடுகள் இருந்தது. பின்னர் தஞ்சாவூர் அருகில் ஆடுதுறையில் காவிரி கரையில் தவம்புரிந்தார். திருவிடை மருதூரில் பள்ளிக்கல்வியை பயின்று, நாராயண சாஸ்திரி என்பவரிடம் வேதம் படித்தார். அதன் பிறகு காசி மாநகரில் சுமார் 3 ஆண்டுகள் தங்கியிருந்து, வேதங்களை பயின்றார். அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பி, மதுரை மாநகரை சேர்ந்த சதாசிவ பிரேம்மானந்தர், சரஸ்வதி அவதூத சுவாமிகளின் செயல்பாடுகளால் கவரப்பட்டு நெரூரை அடைந்து ஜட்ஜ் சுவாமிகளிடம் ஆசி பெற்றார். பின்னர் திருவண்ணாமலை, சேலம் வழியாக சேந்தமங்கலம் குகாலயத்தை வந்தடைந்தார். பிறகு சேந்தமங்கலம் குகாலயத்தில் தீவிர தவத்தில் இருந்து, சமுதாயம் உய்வதற்கான நெறிமுறைகளை மக்களுக்கு போதித்து வந்தார். சைவம், வைணவம் என்ற பேதங்களை போக்கும் விதமாக இந்த குகாலயத்தில் தத்தாத்ரேயர் விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடக்க வைத்தார். குருவின் தீவிர சீடரான சாந்தானந்த சுவாமிகள், இக்கோயிலுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வருகை புரியவேண்டும் என்ற நோக்கத்தில் குகாலயத்தில் தமிழ்க்கடவுளான முருகன் விக்கிரத்தை பிரதிஷ்டை செய்தார். அன்று முதல் இத்திருத்தலம் தத்தகிரி முருகன் குகாலயம் என்று அழைக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து இத்திருத்தலத்தில் ஆன்மீக பணியாற்றிய சாந்தானந்த சுவாமிகள் சபா மண்டபத்தை அமைத்தார். சபா மண்டபத்தில் பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி, ஐயப்பன், கருப்பண்ண சுவாமி, தட்சிணாமூர்த்தி, பஞ்சமுக ஆஞ்சநேயர், சனீஸ்வரர், வன துர்க்கை ஆகிய விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்தார். சபா மண்டபத்திற்கு வலப்புறம் குருநாதர் பல மாதங்கள் தவம் புரிந்த குகை உள்ளது. புகழ் பெற்ற முருக பக்தரான கிருபானந்த வாரியார் இந்த கோயிலில் அமைதி மற்றும் சாந்தம் பெறுவதற்காக அடிக்கடி வந்து சென்றதாக சொல்லப்படுகிறது.
திருவிழாக்கள்
தத்தகிரி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை, தைப்பூசவிழா என்று அனைத்தும் கோலாகலமாக நடக்கும். அன்றையதினம் பக்தர்கள் கிரிவலம் சென்று சுவாமியை வழிபடுகின்றனர். மேலும், பால்குடம் மற்றும் காவடி எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து கோயிலை அடைகின்றனர். சிறப்பு அபிஷேகம் தொடர்ந்து, சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மாலையில் தேரில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சேந்தமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சேலம்
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்