முத்தாலங்குறிச்சி குணவதியம்மன் திருக்கோயில், தூத்துக்குடி
முகவரி :
முத்தாலங்குறிச்சி குணவதியம்மன் திருக்கோயில்,
முத்தாலங்குறிச்சி,
தூத்துக்குடி மாவட்டம் – 628619.
இறைவி:
குணவதியம்மன்
அறிமுகம்:
முத்தாலங்குறிச்சியில் கேட்கும் வரம் தருபவளாக வடக்கு நோக்கி அமர்ந்து அருட்பாலிக்கிறார் குணவதியம்மன். நெல்லை – திருச்செந்தூர் மெயின்ரோட்டில் செய்துங்கநல்லூர் அடுத்துள்ளது முத்தாலங்குறிச்சி.
புராண முக்கியத்துவம் :
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை சேர்ந்த வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி கர்ப்பிணியாக இருந்தார். தலைப் பிரசவம் பார்க்க தாய் வீட்டில் போதிய வசதியில்லை. இதை குறையாக கூறி, கணவரும் மனைவியைத் திட்டிக் கொண்டே இருந்தார். இதனால் வருத்தம் அடைந்த அந்த கர்ப்பிணிப் பெண் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் மனம்போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள். அவள் முத்தாலங்குறிச்சி வரும்போது மதிய வேளையில் பிரசவ வலி ஏற்பட்டது.
“அம்மா என்னைக் காப்பாற்று” என்று அலறியபடி மயங்கினாள். அப்போது ஒரு வயதான பெண்மணி வந்து அந்த கர்ப்பிணியை ஆற்றங்கரையிலிருந்த ஒரு குடிசைக்குத் தூக்கிச் சென்று அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். அந்தப்பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில் மனைவியைக் காணவில்லையே என கர்ப்பிணியைத் தேடி வணிகர். பல இடங்களுக்கு அலைந்தார். இறுதியில் முத்தாலங்குறிச்சி ஆற்றங்கரையோரம் வந்து விசாரித்தபோது அங்கு வந்த ஒரு சிறுமி “நீ தேடி வந்த பெண். அதோ அந்த குடிலில் இருக்கிறது போய் பார்” என்று கூறினாள்.
மனதில் சந்தோஷம் அடைந்த வணிகர் அந்த குடிலை நோக்கி ஓடினார். அங்கே அழகான குழந்தையுடன் தன் மனைவியைக்கண்டார். அவருக்கு சந்தோஷம் பொங்கியது. குழந்தையை அப்படியே தூக்கி உச்சி முகர்ந்தார். கண்ணீர் மல்க நின்ற மனைவியிடம் “உன்னைக் காப்பாற்றியது யார்?” என்று கேட்டார். “என்னை அரவணைத்து எனக்கு பிரசவம் பார்த்தது ஒரு வயதான பெண்மணி” என்றாள். இருவரும் மருத்துவம் பார்த்த அந்த பெண்மணி வந்தால் சொல்லி விட்டு போகலாம் எனக்காத்திருந்தனர். இரவு வரை அந்தப்பெண்மணி அங்கு வரவில்லை. காத்திருந்த அவர்கள் குழந்தையுடன் தூங்கி விட்டனர். அப்போது வணிகருக்கு கனவு வந்தது.
அதில் ஒரு பெண் “நான் தான் குணவதியம்மன். உன் மனைவிக்கு வயதான பெண்ணாக வந்து பேறுகாலம் பார்த்தது நான்தான். அது மட்டுமல்லாமல் சிறுமியாக வந்து உன்னை, உன் மனைவி குழந்தையைப் பார்க்க வைத்ததும் நான்தான். நான் இந்த முத்தாலங்குறிச்சியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் வடக்கு நோக்கி அமர்ந்து அருட் பாலிக்க விரும்புகிறேன். எனக்கு ஒரு கோயில் கட்டு” எனக்கூறி மறைந்தாள். அதன்படி வணிகர், தனது சொந்த செலவில் குணவதியம்மனுக்கு பேறுகாலம் பார்த்த குடில் இருந்த இடத்தில் கோயிலைக்கட்டினார்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
முத்தாலங்குறிச்சி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருநெல்வேலி
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி