Sunday Nov 24, 2024

முடிகொண்டான் கோதண்டராமர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், முடிகொண்டான், திருவாரூர் மாவட்டம் -609 502.

இறைவன்

இறைவன்: கோதண்டராமர் இறைவி: சீதா

அறிமுகம்

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முடிகொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள முடிகொண்டான் கோதண்டராமர் கோயில் ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். மூலவர் கோதண்டராமர், அன்னை சீதையுடன் இடதுபுறம் கோதண்டராமரும், வலதுபுறம் சகோதரர் லட்சுமணனும் கருவறையில் கோதண்டம் ஏந்தியவாறும், கருவறைக்கு வெளியே அனுமன் சன்னதியுடன் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் தில்லைவிளாகம், பருத்தியூர், வடுவூர், முடிகொண்டான், அடம்பர் ஆகிய ஐந்து தலங்கள் பஞ்ச ராம க்ஷேத்திரங்களாக சிறப்பு பெற்றவை.

புராண முக்கியத்துவம்

ராமர் தனது அவதாரத்தின் நோக்கமான, ராவணனை வதம் பண்ணுவதற்கு இலங்கை செல்லும்முன் இத்தலத்திலுள்ள பரத்வாஜ முனிவர் ஆசிரமத்திற்கு வருகை தந்தார். அப்போது முனிவர் ராமரிடம் தான் விருந்து தர விரும்புவதாக கூறினார். ஆனால் ராமரோ தற்போது முடியாது, நான் ராவணனை வதம் செய்து விட்டு திரும்பும்போது இங்கு விருந்து சாப்பிடுகிறேன் என்று வாக்குறுதி தந்தார். அதேபோல் ராவணனை வதம் செய்து விட்டு திரும்புகையில் ராமனது புஷ்ப விமானம் தற்போது கோயில் உள்ள இடமான பரத்வாஜ முனிவரது ஆசிரமத்தில் தரை இறங்கியது. ராமரும் விருந்து உண்ண தயாராகிறார். அப்போது தாம் விருந்து சாப்பிடும் முன் ஸ்ரீரங்க நாதரை பூஜை செய்த பின்பே சாப்பிடுவது வழக்கம் என்று தெரிவிக்க பரத்வாஜ முனிவர் ஸ்ரீரங்கநாதரை பிரதிஷ்டை செய்கிறார். ராமரும் அவரை வழிபட்டுவிட்டு முனிவர் தந்த விருந்தை உண்டார். விருந்து உண்ட ராமர் பரத்வாஜ முனிவருக்கு பட்டாபிஷேகத்திற்கு முன்பே முடி(மகுடம்)யுடன் இத்தலத்தில் காட்சி தந்தார். எனவே இங்குள்ள கோதண்ட ராமர் முடிகொண்டான் ராமர் என்றழைக்கப்படுகிறார்.

நம்பிக்கைகள்

இத்தலத்தில் வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானமும் கீர்த்தியும், புகழும் அடைவர். குறிப்பாக மேல்நாட்டுக் கல்வி படிக்க விரும்புவோர் இத்தலத்தில் வழிபட்டால் அவர்களது பிரார்த்தனை நிறைவேறுகிறது. உயர்கல்வி கற்க விரும்புவர்கள், பாடத்தில் தேர்ச்சி பெற விரும்புவர்கள், கலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பாலோர் இத்தலத்தில் வந்து வழிபட்டு தங்கள் கலைகளில் சிறந்து விளங்குகின்றனர். பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வழிபட்டு மீண்டும் ஒன்று சேர்கின்றனர் மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் ஸ்ரீராமசந்திர மூர்த்தி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

சிறப்பு அம்சங்கள்

16 வருடம் முடியப்போவதால் தமக்காக காத்திருக்கும் தம்பி பரதன் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வான் என்று கருதி அனுமனை அயோத்திக்கு அவசரமாக அனுப்பி தாம் கிளம்பி வந்து கொண்டே இருக்கும் தகவலைத் தெரிவித்துவிட்டு வரும்படி ஸ்ரீராமர் உத்தரவிட்டார். அனுமனும் அயோத்தி சென்று பரதனிடம் ராமர் கூறியவற்றை தெரிவித்துவிட்டு இங்கு திரும்பினார். அப்போது ராமர் தான் வருவதற்கு முன்பே விருந்து சாப்பிட்ட செய்தி அறிந்ததும் ஆசிரமத்திற்குள் வராமல் கோபித்துக் கொண்டு வெளியிலேயே உட்கார்ந்து கொண்டாராம். ராமரும் தனக்கு அளிக்கப்பட்ட விருந்தில் பாதியை அனுமனுக்கு அளித்து சாந்தப்படுத்தினார். அதனால் தான் வேறு எங்குமே காண முடியாத வகையில் அனுமன் இல்லாத ராமர் எழுந்தருளியிருக்கும் மூலஸ்தானம் இங்கு காணலாம். கோபித்துக் கொண்ட அனுமனுக்கு கோயிலுக்கு நேர் எதிரில் தனியாக சன்னதி இருப்பதையும் காணலாம். வால்மீகி ராமயணத்தில் குறிப்பிடப்பட்ட தலம். பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் அமைந்த தலம். ஸ்ரீராமருக்காக ரங்கநாதரை எழுந்தருளச் செய்த தலம். பொதுவாக ராமர் கோயில் தெற்கு நோக்கி அமைந்திருக்கும். இதற்கு காரணம் ராவண வதத்திற்கு பின் விபீஷணன் ஆட்சி பீடம் அமர்ந்து எப்பொழுதும் ராமரை தரிசித்து கொண்டிருக்க வேண்டும் என்பதால் அவன் வேண்டுகோளின்படியே ராமர் தெற்கு நோக்கி அமைந்திருப்பதாக புராணம் கூறுகிறது. ஆனால் இங்கு கோயில் மூலவரான கோதண்டராமர் பரத்வாஜ முனிவருக்கு முடி சூடி காட்சி கொடுத்ததால் சீதா மற்றும் லட்சுமணனுடன் கிழக்கு முகமாகவும், பரத்வாஜ முனிவர் பிரதிஷ்டை செய்த ரங்கநாதர் தனி சன்னதியில் தெற்கு முகமாகவும் அருள்பாலிக்கிறன்றனர். கோபித்துக்கொண்ட அனுமனுக்கு கோயிலுக்கு எதிரில் தனி சன்னதியும் அதன் பின்னால் கோயில் தீர்த்தக்குளமும் இருக்கிறது. ஆழ்வார்கள் காலத்திற்கு முன்பே உருவான கோயில் இது. கழுத்து இடுப்பு ஆகியன வளைந்து கையில் கோதண்டம், வில் ஆகியவற்றை வைத்து மிக அற்புதமான வடிவத்தில் உற்சவ மூர்த்தி எழுந்தருளியள்ள தலம்.

திருவிழாக்கள்

புரட்டாசி – 3 வது சனிக்கிழமை உற்சவர் புறப்பாடு – 13 நாட்கள் திருவிழா, ஸ்ரீராம நவமி உற்சவம் – 10 நாட்கள் திருவிழா – கடைசி நாள் சீதா கல்யாணம் – புறப்பாடு. ஒவ்வொரு மாதமும் ராமரின் ஜென்ம நட்சத்திரமான புனர் பூச நட்சத்திரத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வாரத்தின் சனிக் கிழமைகளில் இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

முடிகொண்டான்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top