Friday Dec 27, 2024

முசரவாக்கம் சக்தீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

முசரவாக்கம் சக்தீஸ்வரர் சிவன்கோயில், முசரவாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் – 631551.

இறைவன்

இறைவன்: சக்தீஸ்வரர் இறைவி: திரிபுர சுந்தரி

அறிமுகம்

முசரவாக்கம் எனும் தலம், காஞ்சிபுரத்திலிருந்து தாமல் செல்லும் வழியில், சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது., அற்புதப் புராணமும் அபூர்வ மூர்த்தங்களும் கொண்ட இந்தச் சிவாலயம் இப்போது கொஞ்ச கொஞ்சமாக சிதிலம் அடைந்து வருகிறது. 1948-ம் ஆண்டு முசரவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த நிலக்கிழார் முத்துசாமி என்பவர் தன் சொந்தச் செலவில் இந்தக் கோயிலைப் புனரமைத்து குடமுழுக்கு நடத்தி உள்ளார். அதன்பிறகு, திருப்பணிகள் மற்றும் புனரமைப்பு காணாமல் மெள்ள மெள்ள பழுதுபட்டு வருகிறது இந்தச் சிவாலயம்

புராண முக்கியத்துவம்

பராபர சிவமாகிய ஆதிப்பரம்பொருள் பெரும் லீலையை நிகழ்த்துவதற்காக திருக் கயிலையில் காத்திருந்தது. அன்னை சக்தி அந்த லீலையில், தானே அகப்பட்டாள். ஆம், விளையாட்டாகக் கருதி ஒரு கணம்… ஒரே ஒரு கணம்தான்… சிவபெருமானின் கண் களைப் பொத்திச் சிரித்தாள் உமை. அவ்வளவு தான் சகல லோகங்களும் இருண்டன.அம்பிகை பயந்து போனாள். விளைவு, சக்திதேவியின் உடலெங்கும் வியர்வை நீர் பெருகியது. அந்த நீரில் கறுமை நிறம் கொண்ட பார்வையற்ற ஓர் அசுரக் குழந்தை தோன்றியது. இருளின் பிரதியாகத் தோன்றியதால், அவனுக்கு அந்தகாசுரன் என்ற பெயர் ஏற்பட்டது. அந்த அசுரக் குழந்தை, மழலைப் பேறு இல்லாதிருந்த இரண்யாட்சனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆண்டுகள் பல கடந்தன. கடும் தவங்கள் இயற்றி பிரம்மனிடம் வரங்கள் பல பெற்றான் அந்தகன். கண் பார்வையும் பெற்ற அந்தகன், அசுரர்களுக்கே உரிய வகையில், சகலரையும் கொடுமைப்படுத்தவும் செய்தான். கொடுமையின் உச்சமாக சக்திதேவியைச் சிறைப்படுத்தவும் துணிந்தான். சிவகணங்கள் கூடி அசுரப் படைகளைக் கொல்ல, ஈசனின் அம்சமான பைரவர் அந்தகனை திருக்கோவிலூர் வீரட்டத்தில் அழித்தார். இறக்கும்போது அந்தகன் ஈசனை துதித்து வேண்டினான். அவனை சூலத்தில் இருந்து விடுவித்த ஈசன், ஏகம்பத்துறை திருக்குளத்தில் ஆழ்த்தி அவன் வினைகளை நீக்கினார். தொடர்ந்து, திருப்புட்குழி மணிகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஈசனைச் சரணடைந்த அந்தகன், தன்னால் உருவாக்கப்பட்ட சிவலிங்கத்தில் ஐக்கியமாகி சிவகணங்களுள் ஒருவனானான் என்கிறது காஞ்சிப் புராணம். அந்தகனை அழிக்கும்போது பைரவ மூர்த்தியிடம் உண்டான வெம்மையால் தன் சக்தியை இழந்தாள் அம்பிகை. தவமிருக்க பூலோகம் வந்தவள், முசரவாக்கம் எனும் இத்தலத்தை அடைந்து தவத்தில் ஆழ்ந்தாள். பிரமன், விஷ்ணு, இந்திரன் உள்ளிட்ட தேவாதிதேவர்கள் யாவரும் இங்கு வந்து அம்பிகையை வழிபட்டு, அவளைக் கயிலைக் குத் திரும்பும்படி வேண்டினர். உமையவளோ, “அந்தகன் பிறக்க நானே காரணமானேன். ஆக, என் பிழை நீங்கி, இழந்த சக்தியை மீண்டும் பெற்றபிறகே கயிலை திரும்புவேன்” என்று கூறிவிட்டு தவத்தைத் தொடர்ந்தாள். நாள்கள் நகர்ந்தன. ஈசன் மனம் கனிந்தார். சிவ அசரீரி ஒலித்தது. “தேவி! மீண்டும் சிவ தீட்சை எடுத்து, இந்த ஆலயத்தில் சிவபூஜை செய்து வழிபட்டு, நீ இழந்த பலத்தையும் செளந்தர்யத்தையும் மீண்டும் பெற்று, சக்தி எனும் பதவியையும் அடைந்து, கயிலாயம் திரும்பலாம்” என்று அருள்பாலித்தது சிவம். அதன்படியே, பாலாற்றின் கரையில் இருந்த இந்த முசரவாக்கம் தலத்தில் மீண்டும் சிவதீட்சை பெற்ற சக்திதேவி, மனமுருகி சிவ வழிபாட்டைத் தொடர்ந்தாள். விரைவில் பலன் கிடைத்தது. ஒரு புண்ணிய தினத்தில், பதினெண் கணத்தாரும் புடைசூழ இங்கு வந்தார் சிவன். புதுப்பொலிவும் ஆற்றலும் பெற்ற சக்திதேவி சுவாமியைப் பணிந்து வணங்கினாள். இங்ஙனம், சக்திதேவியை அழைத்துப் போக வந்ததால், இத்தல ஈசன் சக்தீஸ்வரர் என்று திருநாமம் கொண்டாராம். அற்புதமான அந்த வேளையில் அங்கிருந்த அனைவரும் அம்மையையும் அப்பனையும் தொழுதனர். அவர்களின் வேண்டுகோள்படி ஸ்வாமி இங்கே, சக்தீஸ்வரராகவும், அம்மை திரிபுர சுந்தரியாகவும் கோயில் கொண்டனர்.

நம்பிக்கைகள்

இங்குள்ள நந்தியெம்பெருமாம் வரப் பிரசாதியானவர். மழை பொய்த்துப்போனால், இந்த நந்திக்கு நெய் விளக்கேற்றி, அபிஷேகம் செய்து, மிளகு நைவேத்தியம் செய்து வழிபடு வார்களாம். அதன் பலனாக விரைவில் மழை பொழியும்; ஊர் செழிக்கும் என்பது நம்பிக்கை. கூற்றுவ நாயனார் பிறந்த களத்தூர் கோயிலும் அருகிலேயே உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

“சக்திதேவிக்கு மட்டுமல்ல, இங்கு வந்து எம்மை வணங்கி வழிபடும் அனைவருக்கும், அவர்கள் இழந்த சக்தியையும், செல்வத்தையும், பதவியையும் மீண்டும் தருவேன்; கலி முடியும் வரை வரம் வழங்குவேன்” என்றும் திருவாக்கு அருளியது சிவப்பரம்பொருள். சுவாமி வந்தபோது யானை வாகனத்தில் இங்கு எழுந்தருளிய முருகன், கல்யாண வரம் தரும் கந்தனாக, தன் தேவிய ருடன் சந்நிதிகொண்டுள்ளார். அவரின் பின்னே அசுர மயில் உள்ளது விசேஷம். இக்கோயிலின் அந்தக சம்ஹாரரான பைரவரும் விசேஷ அம்சத்துடன் திகழ்கிறார். அவருக்கு நாகாபரண அரைஞாண் அமைந் திருப்பது, வேறெங்கும் காண்பதற்கரிய அம்சம். இவரை வழிபட்டால் வீண் அச்சங் களில் இருந்து விடுபடலாம் என்பது ஐதிகம்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top