Thursday Jul 04, 2024

மாரியூர் ஸ்ரீ பூவேந்தியநாதர் உடனுரை பவளநிறவல்லி அம்பாள் திருக்கோவில், இராமநாதபுரம்

முகவரி

மாரியூர் ஸ்ரீ பூவேந்தியநாதர் உடனுரை பவளநிறவல்லி அம்பாள் திருக்கோவில், மாரியூர், கடலாடி தாலுகா, இராமநாதபுரம் மாவட்டம் – 623703.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ பூவேந்தியநாதர் இறைவி: பவளநிறவல்லி அம்பாள்

அறிமுகம்

இராமனும் இராவனனும் வழிபாடு செய்த தலங்கள் பல இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. அதில் வருண பகவானால் பிரதிஷ்டை செய்யது வழிபாடு செய்த இராவணேஸ்வரன் வந்து தான் தங்கி பூஜை செய்ய தனக்காக மண்டபம் அமைத்து வழிபாடு செய்த ஆலயம். அந்த சிறப்பு வாய்ந்து இன்றும் வெளி உலகத்திற்கு தெரிய வராத ஆலயம். அமைதியான கடற்கரை பகுதியில் அமைந்த சிறப்பான ஆலயம். திருவிளையாடல் புராணத்தில் வரும் கடலில் வலைவீசும் படலம் நடைபெறும் சிறப்பு மிக்க ஆலயம். அருள்மிகு ஸ்ரீ பூவேந்தியநாதர் உடனுரை பவளநிறவல்லி அம்பாள் திருக்கோவில். இராமநாதபுரம் மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை ஓரத்தில் சாயல்குடிக்கு அருகே கடலாடி வட்டத்தில் அமைந்திருக்கும் அழகிய சிற்றூர் மாரியூர் ஆகும். மாரியூரின் அடையாளமாக வங்கக்கடலிலுள்ள அமைதியான கடற்கரையும் அதன் அருகில் அமைந்துள்ள நல்ல தண்ணி தீவும் மேலும் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பூவேந்தியநாதர் என்ற சிறப்பு பெயருடைய சிவன் கோவிலும் ஆகும். இக்கோவிலை சுற்றிலும் மிகப்பெரிய மதில்சுவர் உள்ளது. பெரும்பாலும் இக்கோவில் கடற்பாறைகளால் கட்டப்பட்டது. ஆலயத்தின் வலதுபுறம் பூவேந்தியநாதர் கருவறையும் அதன் பின்புறம் அழகிய லிங்கேத்பவர் சிலையும் உள்ளது. ஆலயத்தின் இடதுபுறம் பவளநிறவல்லி தாயார் சன்னதி உள்ளது. விநாயகப்பெருமான் பெரியதாக காணப்படுகிறார்.

புராண முக்கியத்துவம்

இராமாயாணத்தில் மாரிசனை இராமர் இங்கு வதம் செய்ததால் இராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அப்போது இராமர் இங்குள்ள இறைவனை வழிபாடு செய்து தோஷம் நீங்கியதாக வரலாறு.ஆகவே தான் இத்திருத்தலம் பித்ரு தோஷங்களை போக்கும் சிறந்த தலமாக விளங்குகின்றது. மாரீசன் இவ்விடத்தில் இராமனின் அம்பால் கொல்லப்பட்டதால் அவருக்கு முக்தி கிடைத்த தலமாக இத்திருத்தலம் விளங்குகின்றது. இராமர் மாரிசனை வதம் செய்த இடமாதலால் இவ்வூர் மாரியூர் என்றும். வருணபகவான் வழிபாடு செய்து மும்மாரி பெய்வதால் மாரியூர் என்றும் அழைப்பதாக பல்வேறு தகவல்கள் நிலவுகின்றன. இராவணண் இங்கு வந்து தங்கி வழிபாடு செய்ததாகவும் வரலாறு உண்டு. இங்குள்ள ஒரு மண்டபத்திற்கு இராவணன் மண்டபம் என்றே சொல்கின்றார்கள். இங்குள்ள சிற்பங்களை பார்க்கும் போது இக்கோவில் கண்டிப்பாக பூதகனங்களை கொண்டும் தேவலோக சிற்பிகளை கொண்டு தான் அமைத்திருப்பார்கள் என்று சொல்லும் படி அமைந்துள்ளது. இவ்வாலயம் மண்ணுக்குள் புதையவும் ஒரு கதையுள்ளது. இவ்வாலயத்தில் ஒரு முனிவர் தவம் மேற்கொண்டு வழிபாடு செய்து வந்தார். அவருக்கு உணவாக குளக்கரையில் உள்ள மாமரத்தில் தினமும் ஒரு மாங்கனி அதிசயமாக பழுத்து விழுமாம். அக்கனி தான் அவருக்கு தினசரி உணவு. ஒரு நாள் அந்த மாங்கனி அவ்வூரில் வசிக்கும் ஒரு பெண் குளத்திற்கு தண்ணீர் எடுக்க வந்த அக்குடத்தில் கனி விழுந்து விட்டது. அப்பெண்ணும் அதனை அறியாமல் எடுத்துச் சென்று வீட்டில் வைத்து விட்டு தோட்டத்திற்கு சென்று விட்டாள். அவளின் கைக்குழந்தை பிள்ளை தொட்டிலில் படுத்து உறங்கியது. மற்றோரு பிள்ளை விளையாடி விட்டு வந்து தண்ணீர் குடிக்க குடத்தை திறந்து பார்த்த போது மாங்கனி கிடப்பதை கண்டு எடுத்து தின்றுவிட்டது. இதற்குள் தவம் செய்த முனிவர் மாங்கனியை காணாத காரணத்தால் யாராவது பறித்து சென்றீருக்கலாம் எனக் கருதி அதனை பறித்தவர்களின் முக்கிய உறுப்புகள் இரண்டு மூழியாகட்டும் என்று சபித்து விடுவார். தோட்டம் சென்று விட்டு வீட்டிற்கு வந்த அப் பெண் முகத்தை கழுவும் போது அப்பெண்ணிற்கு மூக்கு இல்லை. பதறிய அப்பெண் வீட்டில் சென்று அழும் குழந்தைக்கு பால் ஊட்ட நினைத்த போது மார்பில் தன் உறுப்பு இல்லாததை கண்டு இறைவா என்ன சோதனை என நினைத்தாள். அப்போது கீழே கிடந்த மாங்கனியின் கொட்டையையும் பழத்தோலினையும் கண்டு புரிந்து கொண்டு. இக்கனி ஆலயத்தில் உள்ள சாமியாரின் மாங்கனியாக இருக்கும். அதனால் ஏதாவது சாபம் விட்டியிருப்பார் எனக் கருதி கோவிலுக்கு ஒடி வந்து முனிவரின் பாதம் பற்றி.சுவாமி தெரியாமல் நடந்த தவறு. மன்னித்தருள வேண்டி மன்றாடினாள். அழுது புலம்பியும் முனிவர் நம்ப மறுத்து நீ தான் திருடியிருப்பாய்? தண்டனை தண்டனை தான் என்று கூற. ஆவேசப்பட்ட அப்பெண்மணி ஈசனை பார்த்து இறைவா நான் செய்யாத தவறுக்கு தண்டனையா??? நீர் இருப்பது உண்மை என்றால். நான் வணங்கியது உண்மை என்றால். நான் பத்தினி என்பது உண்மை என்றால். முனிவரோடு இவ்விடம் மண் மூடி போகட்டும் என்றாள். அந்த பத்தினி பெண்ணின் சாபத்தால் மண் மூடியதாகவும், அதன் பின் பல ஆண்டுகள் கழித்து மன்னன் ஒருவனால் ஆலயம் வெளியே தெரிய வந்தது. ஒரு நாள் சேதுபதி மன்னர் இவ்வழியாக வரும்போது தன் குதிரையின் கால் பூமியில் புதைந்திருந்த கலசத்தில் பட்டு குதிரை மன்னனுடன் கீழே விழுந்ததாகவும் உடனே அமைச்சரும் வீரர்களும் என்ன வென்று பார்த்த போது அது கோவிலின் கலசம் போல் உள்ளதாக கூற பின் சேதுபதி மன்னன் தன் ஆட்களை கொண்டு புதையுண்ட கோவிலை மீட்டதாகவும், அனைத்தையும் சுத்தம் செய்து ஆலயத்தை திறக்க சாவி இல்லையே என வருத்தப்பட்ட போது அசரீயாக நான்கு சிவாச்சாரியர் இப்பகுதிக்கு இப்போது வருவார்கள். அவர்களை மரியாதையுடன் அழைத்து வந்தால் அவர்கள் மூலமாக ஆலயத்தை திறக்கலாம் என அசரீரி வாக்கு படி அவ்வழியே வந்த நான்கு சிவாச்சாரியர்களை கொண்டு நடை திறந்து பார்த்த போது. பல ஆண்டுகள் புதைந்திருந்தும் எம்பெருமான் மேனியில் போட்ட பூமாலை வாடாத பூமாலையுடன் காட்சியளித்ததால் சேதுபதி மன்னன் கட்டியனைத்து பூவேந்தியநாதா என அழைத்ததால் அப்பெயர் பெற்றதாகவும். (அதற்கு முன் இறைவனின் நாமம் புஷ்பவன சுந்தரம் என்றும் அழைக்கப்பட்டதாக தகவல்) அம்மையார் அழகிய பவளம் போல் பளபளப்பாக காட்சியளித்ததால் பவளநிறவல்லி என்றும் மன்னன் அழைத்தான். (தாயார் பெயர் பாலவல்லி) இங்குள்ள கடற்கரை இராமேஸ்வரம் கடற்கரை போல் புனிதமான கடற்கரையாகும். இக்கடற்கரையின் மிக அருகில் நல்ல தண்ணீர் தீவு உள்ளது. இத்தீவில் ஒரு முனீஸ்வரர் கோவிலும் உள்ளது. இக்கடற்கரை முழுவதும் சவுக்கு மரங்களும் பனை மரமும் நிறைந்து காணப்படுகின்றன. இம்மணற் பரப்பில் முளைத்து பரவிக் கிடக்கும் இராவணன் மீசை செடியின் கோளவடிவில் முட்களாலான உலர் கனிகள் காற்றில் அடித்துச்செல்லப்படும் காட்சி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

நம்பிக்கைகள்

பிதுர் தோஷம் திருமணத்தடைகளை நீக்கும் இவ் ஆலயம்.

சிறப்பு அம்சங்கள்

ஆலயத்தில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் உள்ளன. மாரியூரீன் இயற்கையும் ஆலயத்தின் கட்டிடகலை நுணுக்கமும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இராவணன் மண்டபம் ஒன்றும் உள்ளது. ஆலயம் முழுவதும் அரிய மரங்கள், மூலிகைகள் காணப்படுகின்றன. ஆலயத்தின் தல விருட்சமாக மிகவும் அரிய முன்னை மரம் உள்ளது. பல ஆண்டுகள் கடந்தும் இம்மரம் நிலைத்திருப்பதுவே அதிசயம். ஆலயத்திற்கு உள் வெளியே என சிவபெருமானுக்கு உகந்த பெரிய வில்வமரம் உள்ளது. ஆலயத்தின் வட திசையில் புரசு மற்றும் மர மல்லிகை மரமும் மேற்கு திசையில் புனிதமான ஆண் மற்றும் பெண் வன்னி மரங்களும் உள்ளன. ஆலயத்தின் வெளியே தென்திசையில் நீண்ட காம்பில் பெரிய காய்களை உடைய சிவகுண்டலம் எனப்படும் சுரைப்புன்னை மரமும் காணப்படுகிறது. ஆலயத்தின் கிழக்கே உள்ள ஊமை மண்டபத்தில் சாகா மூலி என அழைக்கப்படும் சீந்தில் கொடி படர்ந்து காணப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே நிலாவாரை, பெருபீளை போன்ற மூலிகைகள் காணப்படுகின்றன.

திருவிழாக்கள்

மார்கழி மாதம் தீர்த்தவாரி சித்திரை மாத பௌர்ணமி திருவிழா மற்றும் திருவிளையாடல் புராணத்தில் நடைபெறும் வலை வீசும் படலம் போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மாரியூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

இராமநாதபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top